அகிலத்திரட்டு அம்மானை- பாகம் 3

விஞ்சையருளல்
தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன்
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும் 560
கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை
தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே
மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து
அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே
உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால்
செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே
ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே
நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்
கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று
ஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே
வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலி
ஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்
வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீ
இரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே
கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றி
உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடி
மற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்
முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை
நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளு
வல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது 580
பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய ந÷க்ஷத்திரத்தில்
அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு
மாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்
முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்
ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்
இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காது
மலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்
தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்
என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனே
சத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்று
சித்த முடனே செப்பியிரு என்மகனே
ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்கு
வாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே
நாட்டுக் குடைய நாரா யணர்தானும்
ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்று
சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்
தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ
தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம் 600
உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே
நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்
ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே
வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி 620
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே
பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே
ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே
சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே
வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்
இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்
பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்
உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே
தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்
பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து
நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே 640
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்
என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்
அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப்
பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல்
யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்
செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே
ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்
என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க
நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து
மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி
எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்
பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார் 660
அந்த வுடனே ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக்
கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்
திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்
தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்
உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்
சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்
தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்
அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்
எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே
ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து
பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ 680
வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே 700
நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
ஒக்க வுனது உள்ளம் நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால்
வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே
அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால் 720
இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே
எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள்
சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச்
சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே
தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச்
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக்
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே
ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே 740
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே
ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே
வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே
ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே
ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம் 760
மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே
தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு
மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும்
இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே
கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி
வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார்
அப்போது மகனை ஆவிமுகத் தோடணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ
நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க 780
நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ
ஆயிரத் தெட்டு ஆனதிரு மண்டபத்தில்
வாயிதமா யாண்டொன்றில் வைத்தமண்ட பங்களிலே
நூற்றிப் பன்னிரண்டு நொடிப்பே னோராண்டதிலே
தோற்றுவிப்பே னார்க்கும் தூது மிகநடந்து
பத்தாண்டுக் குள்ளே பலசோதனை பார்த்து
வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே
அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும்
எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து
ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி
உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன்
பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய்
அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன்
வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை
உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே
தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும்
மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று
காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம்
தெச்சணா மூலை தென்பாற் கடலருகே 800
மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது
கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும்
கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும்
பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய்
மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம்
அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார்
உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும்
மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று
கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும்
எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம்
மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே
இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம்
அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ
இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று
மனதில் வேறெனவே வையாதே யென்மகனே 820
நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே
தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ
தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே
மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே
அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து
எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே
லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய்
தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும்
ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம்
தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது
மலையடி வாரம் வளருமொரு விருச்சம்
அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே
சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக
நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம்
வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து
நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே 837

தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து
பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார்
அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே
வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே
கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும்
கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம்
வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய்
மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும்
நல்ல மகனே உனக்குவரும் நற்காலம்
சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு
ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில்
நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும்
பொறுமை பெரிது பெரிய திருமகனே
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
எல்லா முனது இச்சையது போல்நடக்கும்
நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே
தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 20
வந்தா ரறிவார் வராதார் நீறாவார்
இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே
தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும்
நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்
நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம்
முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன்
குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம்
அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே
விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார்
அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு
இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன்
எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல்
நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார்
கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான்
தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி
இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார்
இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து 40
புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார்
அப்போது ஆகா அன்னீத மாபாவி
இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம்
எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான்
சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன்
அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ
அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய்
இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன்
பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ
குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து
சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும்
விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும்
கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென
ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்
என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம் 60
மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான்
ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து
ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான்
மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே
புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும்
சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள்
அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே
முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார்
அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை
இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு
சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே
மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே
சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ
பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது
எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே
அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள்
பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும்
மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ
சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில் 80
கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான்
முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே
பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவா சமதிலே விரோதம் நினையாதே
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே 100
விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித் திருமகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே
புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே
என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன்
பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ
இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால்
தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே
அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில்
மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ
பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால்
கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும்
பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே
பொறுதி மகனே பெரியோரா யாகுவது
உறுதி மகனே உலகமதை யாளுவது
மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண்
உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே 120
எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை
செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில்
இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம்
செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும்
இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண்
அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும்
கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மால மென்மகனே
ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே
இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே
முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில்
உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது
தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே
ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும்
வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே
மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே 140
சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும்
தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ
புத்திர ரோடும் பேசியிரு என்மகனே
அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ
வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ
சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே
ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது
தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது
தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே
சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும்
நீதி யழியாதே நீசாபங் கூறாதே
மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல்
உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால் 160
சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே
நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம்
வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே
கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை
அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே
தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது
எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே
அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைத்துச்
சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே
தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது
நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது
பூசா பலன்கள் சொல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர
மாயா திருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே
சொல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி
வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்
கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும் 180
வெல்ல எளிதோ வுனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்
இந்தப் படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும்
கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க
எந்தப் படியோ நான்றமியேன் ஏதோ அறியப் போறேனெனச்
சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்
தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும்
என்னசொல்வீ ரென்றனக்கு என்றகப்பா நீரெனவே
வணங்கிப் பதம்பூண்டு மாதாவை யுந்தொழுது
இணங்கி யிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும்
நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி
வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே
நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது
தானீத னான சர்வபரா என்மகனே
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே 200
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே
உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே
விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு
நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே
அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே
முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம்
என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள்
ஆனதா லிப்போது யானும்நீ யானதினால்
மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு
அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே
நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது
வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார்
அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன்
இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால் 220
ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே
நின்ற தவசு நிறைவேறி னால்மகனே
ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி
நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய்
உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே
கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே
சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே
பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே
கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு
இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே
துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும்
அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய்
உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி
சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை
ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே
ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு
துலுக்கன்வீ டானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன்
கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும்
பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே 240
நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்
ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான்
மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான்
அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான்
குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான்
உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார் சிலபேர்கள்
ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள்
கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்
அதன்மேல் மகனே யானுனக்குச் சொல்வதுகேள்
இதின்மே லுனக்கு ஏகவியா ழம்வரும்
சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு
எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே
அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே
எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே
சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்
இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ 260
வேண்டா மிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ
ஆண்டார் மகனே அதிகத் திருமகனே
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ
போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே
சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே
முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை
இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே
பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே
கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே
கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே
ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே
மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே
தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே
எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென
உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே
அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென
மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார் 280
மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம்
உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென
அகமே வைத்து அகமகிழு என்மகனே
வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன்
மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார்
மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து
சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன் தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை
மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து
ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச்
சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச்
சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு
வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து
மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன்
குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து
பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட
பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத்
தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட
ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச் 300
சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள்
பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற
தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு
மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது
கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே
தாலாட்டு
தார தரதர தாராரோ தார தரதர தாராரோ
நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ
செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ
அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ
தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ
மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ
ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ
மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ
வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ
கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ
விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ
ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ 320
மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் காள்வானோ
நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் காள்வானோ
ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ
தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ
மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ
அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ
தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ
சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ
உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காள வந்தவரோ
இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ
வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ
அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும்
கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ
சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை
வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக்
கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ
சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ
காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ
நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ
தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ 340
சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ
தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ
மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து
பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ
தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ
மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ
சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ
ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ
வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ
தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ
சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ
தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ
ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ
ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ
வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ
சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ
நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ 360
சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ
மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ
ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ
வேறு
சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ
தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ
சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ
சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ
தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ
சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ
கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ
கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ
சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ
சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ
விரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ
விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ
தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ
திகதிக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ
நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ
நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ
இப்படி ஒளவை மாது இயல்புதா லாட்டக் கண்டு 380
செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று
முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள
அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார்
பள்ளி உணர்த்தல்
பல்லவி
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
சரணம்
பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே
பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா
வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும்
வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக்
கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே
கோவேங் கிரிவள ரீசர் மருகோனே
வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில்
வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா (பள்ளி)
வேக முடனொரு சந்தத்து ளாடியே
மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே
ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும்
ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும்
தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர்
சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும்
ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு
எம்பி யெனவரும் தம்பிரா னானவா (பள்ளி)
மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே
முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே
ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும்
அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும்
காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே
கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும்
தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே
தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா (பள்ளி)
தம்பில மானகு றோணிகுண் டோமனைத்
தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை
வம்பு இரணிய ராவண சூரனை
மகோதர னானது ரியோதனப் பாவியைக்
கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர்
கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே
நம்பின அன்பருக் குபகார சாலியே
நாரணா சீமைக் கரிவரி யானவா (பள்ளி) 400
பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர்
தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து
நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து
துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார்
தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னை பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
குண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்
சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
உடனே மகனை உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட 420
எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள்
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே
பின்னடந்து நானும் யாமம் பிசகாமல் 440
நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே
அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல்
காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ
தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம்
நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே
கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ
தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே
கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும்
பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும்
உகவன் வருவன் ஒருவ னறிவான்காண்
பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும்
அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும்
மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும்
பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே
திகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட
பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு
அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு
வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே
மகனே நீவாற வழியின் பவிசுகண்டு
தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே 460
என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு
கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில்
சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம்
காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து
கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும்
சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே
நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே
சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ
வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே
மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு
வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு
இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ
இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை
சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட
என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன்
நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார்
உடனேதான் வைகுண்டர் உள்ள மிகமகிழ்ந்து
கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே
ஆவலா தியாக அபயமிட்டார் தேவரெல்லாம் 480
வைகுண்டருக் கேபயம் முறையமிட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
நாரணருக் கேயபயம் நாதனுக் கேயபயம்
தோரணருக் கேயபயம் சுவாமி யுமக்கபயம்
தேவாரம்
நாராயண நாதாசிவ நாதா உமக்கபயம்
நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம்
சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம்
சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம்
பாராயேழை முகமேபரா பரமே உமக்கபயம்
பாலர்தெய்வச் சான்றோர்படுந் துயரந் தனைமாற்றும்
நாராயண தீராநல்ல நாகந் தனில்துயில்வாய்
நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு
கடல்மேல்துயில் கண்ணாகனி கண்டே கன்றையெறிந்தாய்க்
களமேபெலி கொளவேகூளி களிக்க லங்கையழித்தாய்க்
குடைபோல்குன்றை யெடுத்தாய்முப்புர கோட்டை தனையெரித்தாய்க்
கோனினிடை மாதரிணைக் கோனா கவேவளர்ந்தாய்க்
காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய்க்
கஞ்சன்தனை வதைத்தாய்பெலக் காரர்பெலம் வதைத்தாய்
மாடேமேய்த்துத் திரிந்தாய்வலு மாபலியைச் சிறைவைத்தாய்க்
கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க் 500
குறோணிதனை வதைத்தாய்வலு குண்டோமசா லியைக்கொன்றாய்க்
கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய்
ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய்
இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய்
இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய்
ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய்
எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும்
மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய்
வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய்
வரவேணுந் தெட்சணாபுரி மலைபோ லுயர்ந்துபோகு
தேசக்கலி தீதுவநி யாயம் பொறுக்கரிதே
சிவனேவைந்த ராசேதெச்ச ணாபு வியில்போவோம்
கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது
கிருஷ்ணாமகா விஷ்ணுவேவுன் கிருபை யிரங்கவேணும்
தாண்மைக்குலச் சான்றோருன்னைத் தவத்தால் தேடிவருந்துன்
தாயுமவர் தகப்பன்சுவாமி தானே யல்லாலுண்டோ
சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம்
சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய்
ஆற்றிலலைக்கோரை யைப்போல் அலைவதுந் தெரியாதோ
அணைப்பாருன்றன் துணையேயல்லால் அவர்க்கே ஏதுமுண்டோ 520
பலநாளவர் படும்பாட்டெல்லாம் பார்த்தே யிருந்தாயோ
பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா
பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ
ஆருமற்றார் போலேயவர் அலைவ துந்தெரியாதோ
அரனேசிவ மருகாவுனக் கபயம் உனக்கபயம்
அவரால்நாங்கள் படும்பாடெல்லாம் அறியல் லையோசுவாமி
ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ
அதுதான்பொய்யோ மெய்யோவென் றாகமந் தனைப்பாரும்
அண்டரண்டந் தொழவேவரும் ஆதி யுமக்கபயம்
அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம்
ஆதிசிவ னாதிதவ மோதி யுமக்கபயம்
ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம்
அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம்
அரசேதெச்ச ணாபுவியில் வரவேணு முமக்கபயம்
அந்தக்கலி திந்தெய்யென் றறவே வரவேணும்
அத்திடக்கலி செத்திடக்கலி அறவே வரவேணும்
அய்யக்கலி தீயாவியே அறவே வரவேணும்
அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும்
ஐம்பத்தாறு சீமையொரு குடைக்குள் ஆள்வாயுமக்கபயம்
அத்தாவுமக் கபயம்சிவ முத்தா வுமக்கபயம் 540
ஆதிநா ராயணர்க்குப் பால னானகுணதீரா
ஆதியுமக் கபயம்சிவ சோதி யுமக்கபயம்
அரனேசிவ னார்க்குமருக னான குணபாலா
அலைவாய்க் கரைமடமாம்பதி ஆள்வா யுமக்கபயம்
அய்யாவை குண்டாஅலை கண்டா யுமக்கபயம்
தாணுமா லயனாய்ப்பேரு தழைக்க சிவமுளைக்க
தானாயொரு குடைக்குள்தர்மத் தரணி யாளவந்தாய்
சாணாக்குரு வேதக்குரு தானானா யுமக்கபயம்
தாண்டும்பதி கூண்டப்பதி தானானா யுமக்கபயம்
தவமேதெச்ச ணாபூமியில் தானே வருவாயே
தெச்சண மீதே வந்து தெய்வமா யிருந்து கொண்டு
மிச்சமாய் புதுமை காட்டி மேதினி யெவருங் காண
உச்சமே சான்றோர்க் கீந்து உதவியுஞ் செய்வா யென்று
பச்சமாய்த் தேவ ரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார்
வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர் தம்மைச்
சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம்
ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானே யென்று
கூர்ந்திட வுரைத்தீ ரெல்லாம் குணமுடன் மகிழ்ந்து சொல்வார்
தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க் கெல்லாம்
மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன் 560
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன்
அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன்
ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன்
கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றே னானும்
மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோ ரண்டை
குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே
என்னையே கெணியா வண்ணம் ஏழையா யிருந்த சான்றோர்
தன்னையே பழித்தோ ரெல்லாம் சளமது துயரங் கொண்டு
அன்னீத நரகந் தன்னில் அகப்படத் தள்ளித் தள்ளிக்
கொன்றுநான் சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே
எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான் கூண்ட சான்றோர் கையதிலே
வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே
வேண்டா மெனவே தேவருக்கு விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும் அகலா தெனவே யாணைகொண்டார்
நானோ பிறந்த சமுத்திரத்தின் நடுமேற் கடலி லன்னாபார்
ஏனோ பதியும் மேடைகளும் எண்ணிப் பாரு தேர்நிறமும் 580
மானோ பொன்னோ மண்டபமோ வறடே யுனக்குச் சாட்சியிது
யானோ காட்டுஞ் சொரூபமெல்லாம் யாதா யிருநீ மறவாதே
பதமோ பதமோ பாற்கடலின் பாலை யகமே கொள்ளுவென
இதமாய் இதமாய்ச் சொல்லிடவே இசையா வண்ணம் வீழ்ந்திடவே
உதயம் உதயம் வெளித்திறந்த உருவை யொருவர்க் குரையாமல்
இதையே யிதையே மறந்துஎன்னை இளப்பம் பேசிநெகிழா தென்றார்
ஆண்டா யிரத்து எட்டுமுன்னே அன்னை யெனவே நீயிருந்தாய்
கூண்டா மெட்டா மாசியிலே குணமாய் நாரா யணர்மகவாய்
சான்றோர் கெதிகள் பெற்றிடவே தர்ம குண்டம் பிறந்துவொரு
கூண்டாங் குடைக்கு ளரசாளக் கொண்டே போறேன் கண்டிருநீ
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
பொய்கொண்ட பேரைப் பெலிசெய் தரசாள
கொண்டுநான் போறேன் குலக்கிழடே பாரெனவே
அன்றுவை குண்டர் அவர்நடந்தார் தெச்சணத்தில்
கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து
நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால்
பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச்
சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே
என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி
இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக 600
சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப்
புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு
எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து
நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி
வானலோ கம்வாழும் வானவருந் தானவரும்
தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர்
வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று
மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி
நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம்
கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும்
கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின்
வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென
எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே
நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே
உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும் 620
முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ
முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால்
எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண்
வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும்
மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார்
அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார்
இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம்
என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே
அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார்
கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம்
ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும்
தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும்
பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும்
மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும்
வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும்
நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும்
தருமக் கணக்கும் சகலக்கணக் குமுதலாய்ப்
பொறுமைப் பிரமா பூசாந்திரக் கணக்கும்
எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம்
வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார் 640
தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம்
மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார்
நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து
சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள்
ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு
நீள அரன்சிவனும் நெடிய மருகோனும்
இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று
சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம்
பொன்னுலோ கம்புகுந்து
பெட்டகத்தோ டேயெடுத்து
வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும்
சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி
ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார்
நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார்
அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார்
இப்போது வானவரே எல்லோரு மென்கூட
வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார்
சீருங் கோபால சிவனே செயலெனவே
வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள்
தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச்
சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச் 660
சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே
வேத மறையோரும் விசய முனிவர்களும்
நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக்
கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே
நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில்
தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி
எங்கு மகிழ எழுதினா ரம்மானை 667
திருவாசகம் 2
ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும் சத்தில் சிவம் தோன்றியும் சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும் நாதத்தில் விஷ்ணு தேன்றியும் ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும் பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும் குறோணி வானலோகம் விழுங்கவும் கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே, அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்; தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும் சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும் தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும் சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும் சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும் தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும் தங்கநவரத்தினத் திருமுடி சூடியே சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும் சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும் அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும் அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார்.

வைகுண்டர் முருகனுக்கு அருளல்
அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி
சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து
வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர
மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி
நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி
வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி
அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச்
செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும்
நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும்
கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால்
இத்தனை நாளும் என்னைக் கெணியாமல்
புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள்
இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள்
மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து
மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத்
தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள
நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே
கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே
தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது
தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே 20
நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாது
தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே
ஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்தி
வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள்
எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம்
அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன்
காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ
ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ
பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ
தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ
மோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ
ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ
கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும்
விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ 40
கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ
ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ
ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ
எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம்
அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால்
வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கே
நல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும்
என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான்
மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே
நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார்
காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான்
அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார்
இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால்
உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில்
பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார்
அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்த
செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம்
உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக்
கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார் 60
அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால்
பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார்
அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி
இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று
ஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார்
சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடு
நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ
உலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னே
பலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன்
விடியும் பொழுது வேசம் பலதணிவேன்
பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன்
வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னே
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும்
மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவே
அதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே
இதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர
வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல்
அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள் நின்றுவரும்
ஆதவனைச் சூழ் கணம்போல்
அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர்
ஆடியே பாடி வரவே
தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டுதொழ
சூழவளைந் தேழியல் படர்தே 80
சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச்
சூராதி சூர ரெனவே
செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத்
தேவர்சே வித்து வரவே
சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாயமென்னும்
சேவித்திரு புறமும் வரவே
அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டுமென
ஆகாய மீதில் வரவே
அனவரத கோலாக லாதிநாரா யணாவென
அமரரிசை கூறி வரவே
மத்தள முடுக்குபல வாத்திய மடடென
வானமதில் நின்ற திரவே
மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே
வானவர்க ளிசை கூறவே
தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச்
சங்கீதக் காரர் வரவே
சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகு
சாஸ்திரக் காரர் வரவே
தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சில
தேவர் கூறி வரவே
சிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர்
சேவித் தியல்கூறி வரவே
நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியென
நேரியர் சீரியல் கூறவே
நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு
நீதென் குருவெனப் போற்றினார்
பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும்
பலவாங் கிரி குண்டமே
பசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனே
பசுவா கிய நிசமே
தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை குண்டமனாய்த்
தெச்ச ணாபதி பூபனே
துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு
துவாரகா பதிக் கரசே
சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடு
துச்சா வில்லு வீரா
சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது
தலையின்வழி தானே நடவாயே
துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி பொண்டத்தொடு
துச்சா வில்லு தீரா 100
சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தானதில் வித்தாய்
துவாரகாபதிக் கரசேயெனத் தொழுதார்
தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத்
தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர
வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர
நாதமொடு சங்கு நகரா முழங்கிவர
மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத்
தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச்
சாத்திர வேத சாதிமுறை யோதிவர
நாற்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே
அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர
வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர
நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர
மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர
கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும்
கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே
மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே
தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய
வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே
வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர
தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே 120
ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர
வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற
செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல்
நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு
வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு
சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு
ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு
மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து
தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு
நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர்
நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து
செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே
இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன்
இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே
சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார்
அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார்
இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி
கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல்
நாள்வழியாய்ச் சான்றோரை நியாயமில் லாதடித்தான்
சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து
என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை 140
ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு
நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு
இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம்
வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால்
என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான்
சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான்
இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ
ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து
எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்
மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து
இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று
பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன்
மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல்
மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி
மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக்
கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே
நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக்
காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு 160
உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா
எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று
செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே
மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள்
சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து
சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே
நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும்
உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே
தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால்
இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல்
எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து
மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன்
அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப
வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண்
முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக
என்னடையில் வந்து ஏந்திழையா ராடுவது
ஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள்
பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமது
கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து
தேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை 180
கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்கு
இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு
எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி
ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்து
பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம்
எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே
ஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவே
மான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில்
பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக்
கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய்
நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப்
பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினி
மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே
தாமுனிந் தையா தவறாத மாமுனியும்
தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து 200
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர
பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல்
கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத்
தாழநடை விடாமல் சற்பூத மேந்திவர
அப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லி
மைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கி
நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில்
தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு
வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலை
பாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்கு
என்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார்
தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப்
பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும்
தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும்
மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும்
சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர
மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத்
துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிட
இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப்
புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே 220
நதியிற் பிறந்த நாரா யணமூர்த்தி
பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார்
கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன்
கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல்
நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னே
கடந்து முன்போன காண்டா மிருகமொடு
சிங்கமி யாளி செங்கருட னங்கனுமன்
பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும்
ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரை
செந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம்
கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த
சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல்
தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப்
பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்து
வந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டு
சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே
வைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்று
கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம்
கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம்
செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய 240
வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானே
தாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள்
என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவே
நன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார்
ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது
இருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ
இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும்
குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம்
என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு
அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார்
நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக்
கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார்
இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார்
விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார்
வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லி
சூரிய புஸ்பத் துல்வக் குறிபார்த்து
வீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார்
கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார் 260
மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடி
கடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித்
திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே
கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல்
முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு
வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே
இத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால்
சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம்
தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால்
நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண்
ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ
இருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து
நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே
கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும்
ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும்
திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து
கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து
ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று
காவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார்
தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று
நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில் 280
நல்லநா ராயணரும் நாடி வழிநடக்க
வல்ல பெலமான மாமுனிவ ருங்கூடி
எல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையே
நல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானை
வாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதை
சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக்
காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலே
நாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார்
நல்ல குலதெய்வங்கள் மறைதல்
நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்து
எல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவே
இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும்
நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும்
முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த்
துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும்
கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக்
கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும்
இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண்
கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார்
நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார்
தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும்300
மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம்
நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார்
தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டி
மெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார்
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல்
மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே
வைகுண்டர் பகவதிக்கு அருளல்
கண்ணான நாதன் கமலக் குருநாதன்
வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை
நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக்
கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து
நன்மை யுடைய நாயகியே சுந்தரியே
பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான
உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென
எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய்
எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல்
ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு
தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால்
உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன்
பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க 320
என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்
அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள்
வைகுண்டர் மணவைப்பதி ஏகல்
நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே
சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார்
தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே
கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார்
நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே
திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க
கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம்
பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து
ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து
மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும்
நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத்
தேடும் வடவாசல் சீவிவளர் மலையின்
நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே
தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே
உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே
என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும்
அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்று
வாநீ முனியே வல்லகலைக் கியானமொழி 340
தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனே
மான முனியே மறைநாலுங் கற்றவனே
ஓநமோ வேதம் ஓயாம லோதுவோனே
பின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீ
நான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியே
மான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார்
கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல்
வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக்
கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரிய
வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே
உள்ளதெனக் கின்னதென் றுரை
பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி
வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின்
கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனி
தொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான்
கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல்
அய்யாவே வேத ஆதிநா ராயணரே
மெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும்
பரராச மாமுனிவன் பாலனென முனிவன்
விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம்
தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும் 360
வாராய் முனியே மதலையுனக் கிங்கேது
அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு
இப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில்
பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும்
வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில்
பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும்
நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும்
யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும்
ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும்
மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில்
துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும்
இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள்
அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலே
துற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமே
நற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுது
சேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்து
காந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப்
பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக்
கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும்
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல் 380
வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண்
ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும்
ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும்
முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள்
தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண்
கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம்
எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்க
நல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர்
வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடி
என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல்
பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும்
வேதவியாசர் முக்காலம் உரைத்தல்
அப்போது வேத வியாச ரகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுது
மூல முதலை முத்தி முகந்துகொண்டு
காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று
ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்து
சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும்
மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும்
அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும்
சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும் 400
வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும்
விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும்
அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும்
சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான்
சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல்
நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும்
பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும்
சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான்
நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிக
வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும்
எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல்
அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப்
பொன்னான நாரா யணர்ம கேந்திரனும்
நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்து
வல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில்
புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால்
அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில்
குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கி
நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப்
பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக் 420
கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்து
ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து
தேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து
பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்
மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்
சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்
மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும்
நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்
கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்
பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்
தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்
காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்
ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில்
தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக்
கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்து
நேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பி
ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி
உகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில்
தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்து
ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில் 440
வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச்
சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப்
பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில்
சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து
வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து
ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக்
காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச்
செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும்
அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே
மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும்
எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும்
வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில்
மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான்
வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே
குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும்
கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும்
நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே
பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும்
எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே
ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும் 460
ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும்
நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும்
தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான்
தெச்சணாபூமி வளம்
இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன்
அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன்
துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில்
பதியச் சிவமும் பதியென்றா ரன்போரே
நந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையை
இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை
தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான்
மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிது
ஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்க
கோனாங் குமரி குடியிருக்கு மிந்நகரு
சங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள்
எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு
மங்கைப் பதிநகரு மணவைப் பதிநகரு
கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு
பஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகரு
சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு
தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு 480
சைவ முனிமார் தவத்துக் கிதுநகரு
மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு
சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு
அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு
பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு
வாவி யுறைநகரு வைகைக் குருநகரு
தாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகரு
சொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம்
நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு
பசுவும் புலியம் பாவித்திருந் தநகரு
கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு
அந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம்
பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம்
தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடு
பவமற்றோ ராகி பாவித்த தின்னாடு
நல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடு
சொல்லுருசி யானச் சிறந்த குருநாடு
ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே
திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு
சம்பத்துக் கேற்ற சகல குருநாடு 500
இன்பம் வளரும் இசைந்த குருநாடு
ஆதி யொருமுனிவன் அடவில் தவசிருக்க
நீதி யறியவென்று நிலமலனுந் தேவியுமாய்
கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டுப்
பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்து
அந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார்
சிந்த னருளால் சீறி யொருகடுவாய்
பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்து
இசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவே
என்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும்
தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவே
அப்போ பசுவும் அந்த முனியடுக்கல்
இப்போ தென்கன்றை இந்தக்கடு வாய்பிடிக்கு
மாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால்
தாம்பயந்து கடுவாய் தன்னா லொதுங்கிவிடும்
வந்துசொல் லாதாலும் மாமுனியே யிங்கிருந்து
உந்தித் தொனியால் ஒருசத்தங் கூறினையால்
என்பிள்ளை யென்றனக்கு இப்போ துதவுமென்றார்
உன்னுள்ள முமேற்று உடையோன் பதம்பெறுவாய்
என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும் 520
ஒன்றுமுரை யாடாது உள்ளங் கவிழ்ந்திருந்தான்
கடுவாயுங் கன்றைக் கயிலையங் கிரிதனிலே
வெடுவாகக் கொண்டு விட்டதுகா ணம்மானை
பசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல்
விசுவாச மாக மேலோகஞ் சேர்ந்ததுவே
பின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலே
முன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங் காணாமல்
இத்தோசங் கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும்
சித்தத்தோ டொத்தத் தெச்சணா பூமியிலே
இரந்து குடித்து இத்தவ மேபுரிந்தால்
பரந்தணியும் வேதன் பதமடைய லாமெனவே
உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித்
திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான்
வந்து இரந்து வருசமொன் றானதின்பின்
முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்று
பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து
வரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானை
அப்படியே தோசம் அகன்று அறம்வளரும்
உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே

தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா 540
மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு
பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும்
அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான்
நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்து
வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று
அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால்
தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார்
வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச்
சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து
இந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றே
விந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார்
திருவாசகம்-3
கவியரசனுக்கு வைகுண்டர் வருகையை உணர்த்தும் நிருபம்
(வால ராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதல் வேண்ட ஆவசியமில்லையென்று நிறுத் தலாக்கியே, உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங் கூறி, எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம் பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும் தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய்வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்பசதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய்ப் பிறந்திருக்கிறார், இனி நன்றாய்த் தெரியுமே.
ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம் இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும், மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு லாடந் திறந்து அதன்வழி அரனடனம் திருநடனம் ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும் பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற சட்டம்போல் நடந்து கொள்வாராகவும். அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர் நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கு படியே வரும். அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம். 1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம் பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்ட மாய் தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான்.
ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே, இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும் பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை ஆராடு நீராடு தீபரணை சாந்தி காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம் தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம் கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக் குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள் இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக் கடவுளிது நாராயண வைகுண்டசாமி திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும்.)
என்றிந்த விவர மெல்லாம் எழுதியே
உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை
பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னே
குண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார்
நாதன் குருநாதன் நாரா யணநாதன்
மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில்
மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும்
இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும்
மணமான நாதன் மகாபரனைத் தானாடி 560
வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில்
தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில்
மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிடத்
தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்க
மூவ ரதிசயமாய் மோடுவழி தாள்திறந்து
ஆரபா ரத்துடனே அவர்கள்வந்து பார்த்துநிற்க
வீரநா ராயணரும் வித்தாரத் தெச்சணத்தில்
பள்ளிகொண்டா ரென்று நாமம் பரந்திடவே
துள்ளியே சொரூபம் சுற்றினா ரம்மானை
வைகுண்ட மென்று மனுவோ ரறிந்திடவே
மெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில்
யாம மிகக்கூறி அதிகத்திசை எட்டிலுள்ள
ஓமப் பசாசுகளை ஒதுங்கவுப தேசித்தார்
மேல்நடப்பை யெல்லாம் வித்தார நாரணரும்
தூல்நடப் பாகத் துறந்துதுறந் தேபடித்தார்
கண்டவர்க ளெல்லாம் கருத்தோ டறியாமல்
வண்டப் புலப்பமென வாக்குரைத் தேபோனார்
பத்துமா தம்வரையும் பார்நடப் புள்ளதையும்
முற்று மொருகுடைக்குள் உலகாள்வ தும்படித்தார்
எல்லா நடப்பும் இவர்படித்த தின்பிறகு 580
வல்லாண்மை யான வைகுண்டப் பெம்மானும்
உகஞ்சோ திக்க உற்றார்கா ணம்மானை
தவமே தவமெனவே தானிருந்து வையகத்தில்
பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து
உறுதியுட னையா உகஞ்சோ திக்கலுற்றார்
நாரா யணரும் நல்லவை குண்டமெனப்
பேரா னதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில்
மனுநிறமாய் வந்து மனுவைச்சோ தித்தெடுக்கத்
தனுவை யடக்கித் தவசிருக்கா ரம்மானை
அய்யா வைகுண்டர் திருத்தவம்
உலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால்
தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டி
மலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று
அலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார்
வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்க
நந்திகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றி
முந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேற்றி
சந்ததஞ் சாகா விஞ்சைத் தலைவனாய்ச் சமைய வென்றே
நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக் கருணை வாசி
சாதிக ளுரைக ளாற்றிச் சடத்துற வாசை யற்று
வாதியாங் கார மற்று மலசல மதங்க ளற்று 600
ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா
ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்க ளற்று
மாசதாம் வினைக ளற்று வாக்கலங் கார மற்று
நீசமாம் கலியை யற்று நீணிலத் தாசை யற்று
ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண் டுகந்தா ரையா
கண்ட வர்ப்பா லேற்று கண்சுழி முனையில் நாட்டிப்
பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறா நாட்டிக்
கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கி
இரண்டது மறிய வென்றே இவர்தவம் செய்ய லுற்றார்
மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார்
தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்துநீ டூழி வாழ்ந்து
வனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ்ந்து
துணிவுடன் மனதி லேற்றி சூரியத்தவசு நின்றார்
முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மைபோ லாக வென்றும்
கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மதிலே வந்த
அற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்க ளோடும்
செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார்
இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்
குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக்
கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக
உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார் 621

நாரா யணரே நல்லவை குண்டமெனச்
சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார்
ஆறு வருசத் துள்ளே யவர்நினைத்து
வாறு வகையெல்லாம் வந்து வழிப்படவே
நின்றார் தவசு நெடியநா ராயணரும்
குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே
கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல்
உடலுள் சூட்சம் ஒருவருக்குங் காணாமல்
அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார்
தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாது
ஈசர் முன்னாளில் இருந்தா ரொருதவசு
வாசக் குழலுமையை மதலை யுருவாக்க
வேட்டுவனுக் கீந்த விஞ்சைதனை நெஞ்சில்வைத்துக்
கூட்டுக் கிளியைக் குழந்தையுரு வாக்கவென்று
அத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தே
கற்றைக் குழலுமையாள் கரியமுற் காலமதில்
சூர னெனவந்தத் தோசப்பொல் லாதவனை
வீரத் தனமாய் வெட்டிச் சரமறுக்க
ஆறு முகமாய் அரியதொரு ஆண்பிள்ளைதான்
பேறுடனே நமக்குப் பிறக்கவே ணுமெனவே 20
சரவணப் பொய்கையிலே சாம்புவ னைநினைந்து
அரகரா அவள்தான் அன்றுநின் றதவமும்
இவர்தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய்
அவர்தவமு மொவ்வாது அய்யா இவர்தவத்தே
சீதை தவசியதும் செப்பவொண்ணா தித்தவத்தே
நாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும்
எத்தனையோ கோடி இவர்தா னிருக்கும்தவம்
வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண்
சொல்ல எளிதல்லவே சொன்னா லுலகிலுள்ளப்
பொல்லாத் பேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால்
பாவந் தொலைந்திடுமே பாவிகட்கு மோர்நினைப்பாய்
நாமிருப் பதுவோ நாலு திரையதனுள்
ஆமவரே கண்டு அறிந்தா லதுவீதம்
இச்சொரூபத் துள்ளே இதுவிதிக்க வொண்ணாது
வச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியு மிந்தேட்டில்
என்னமோ வென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால்
அன்னமுத லற்று ஆக்கினைக்குள் ளாவீர்
நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கே னம்மானை
செல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும்
அய்யா மக்களுக்கு அருளல்
சீமையைம்பத் தாறு தேச நருட்களையும் 40
நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவே
செல்லவை குண்டச் சீமானு மப்பொழுது
வல்ல தவமும் மனதுளரா தேமுடித்து
உலக நருட்கள் ஒக்கவொரு மிக்கவரத்
தலமளந்த நாதன் தானினைத்தா ரம்மானை
வடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்கு
நடக்கும் படியே நல்லதிக்கு நாற்றிசையும்
அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல் லாம்வரவே
சாணார் முதலாய்ச் சாதிபதி னெட்டையுமே
நாணாம லோடிவர நாரா யணர்நினைத்தார்
நினைத்த வுடனே நிமிசம் பொறுக்காமல்
தினந்தோறும் வந்து சேரும் நருட்களது
எண்ணக் கூடாது எவராலு மன்போரே
திண்ணமுள்ள சாதி செப்பொண்ணா தன்போரே
சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்லதுலுப் பட்டர்முதல்
சூத்திரன் பிரமா தொல்வணி கன்பறையன்
ஊத்திர நீசன் உழவ னுடன்குறவன்
கம்மாள னீழன் கருமற வன்பரவன்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடையர் 60
சக்கிலிய னோடு சாதிபதி னெட்டுகளும்
முக்கிய மாக ஓடிவந்தா ரம்மானை
ஆகாயங் காணாது அறைக்குள் ளடைத்திருந்த
வாகா ஸ்திரீமாரும் வந்தார்கா ணன்போரே
கிழவன் முடவன் கெற்ப ஸ்திரீமாரும்
இளவயசு கொண்ட ஏந்துபச லைமுதலாய்
ஒக்கவே வந்தார்காண் உடையவனார் தன்னிடத்தில்
வந்த நருட்கெல்லாம் வாய்த்தவலு வியாதிமுதல்
சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய்
ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப் பெண்ணாட்கும்
சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார்
உடல்தன மில்லாது உருவழிந்த பெண்ணாட்கும்
சடலமுருக் கொடுத்துச் சந்ததி யுங்கொடுத்தார்
பிறவிக் குருடூமை பேச்சறா நாக்குழறல்
திறவி யொளிபோல் திறமும் மொழிகொடுத்தார்
தர்மமில்லாப் பாவிகட்குத் தாண்மை மிகக்கொடுத்தார்
கர்ம வியாதிகளால் கால்கள்மொட்டிக் கைகள்மொட்டி
அந்தமொட்டி யெல்லாம் அறத்தா லதைத்தீர்த்துச்
சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார்
உடலை யுருக்கும் உற்ற சயஇருமல் 80
குடலைப் புரட்டும் குன்மவாய் வுமுதலாய்த்
தீர்த்துக் கெடுத்தார் தேசத்தோர் கண்டுமிகப்
பார்த்துப்பார்த் துமகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண்
கர்த்தாதி கர்த்தன் கடவுளா ரென்றுசொல்லி
என்தேசத் தோரும் இங்குவந்தா ரன்போரே
பதிணென் சாதிகளும் பண்பா யொருதலத்தில்
விதிவந்து தென்று மேவிக்குலா வியிருந்தார்
மேவிக் குலாவி மிகவே யொருதலத்தில்
ஆவிநீ ருண்டு அகமகிழ்ந்தா ரம்மானை
நொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும்
அன்பா யுலகில் ஆனதே சத்தோரும்
ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும்
கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார்
முன்னாள் மொழிந்த முறையாக மம்போலே
இந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார்
வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலே
மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன்
சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்து
கோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாது
கர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம் 100
தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும்
செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன்
அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்கு
எளியோர் வலியோர் எல்லா மொருப்போலே
பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார்
தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி
தோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு
சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார்
சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச்
சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படி
நல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லி
சாதிபதி னெண்ணும் சடல வரவுமற்று
ஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர்
எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலே
அல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார்
அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே
எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே
தெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது
மெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்க
இன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து 120
மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர்
சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கி
மேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத்
தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து
ஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியே
நாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப்
போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண்
சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப்
பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார்
மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில்
மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார்
வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து
சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்
திருவாசகம் 4
1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு, கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி, உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி, மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே, மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே, முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே, முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே, ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே, இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே, வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே, வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல் உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே, பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந் தன்னே என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார்.
அதை உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ் சரி, இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து, இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள். பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே, பேய் பல சீவசெந்து ஊர்வனம் புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார். எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம் இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம் ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க, அதையறிந்து நீங்களும் ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார், உடனதுகளெல்லாம் அய்யாவாணை நாங்களொன் றும் ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார். உடனே நாராயண வைகுண்ட சுவாமி தானே ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது, பேய் செய்கிற அன்னீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார். உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது பேய் செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் பேயை எரிக்கவேணு மென்று நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்.
பேய்களை எரித்தல்
பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார்
வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்
துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே
பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி 140
விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார்
விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடு
துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா
ஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான்
பதினை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார்
பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம்
மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு
பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம்
வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார்
நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே
அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்
சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகி
வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி
அழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார்
ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாக
ஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும்
மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று 160
தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே
கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து
இணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்
பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம்
உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம்
வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும்
இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப்
பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்
ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது
வாச மலரோனும் மற்றோரும் போகரிது
என்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்தி
அன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானை
உடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள்
திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி
பேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடி
மாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச்
சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழி
ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும்
என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம் 180
சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சே
அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை
பொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம்
நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை
தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை
நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர்
எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார்
அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால்
சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார்
போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலே
கோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர்
அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார்
கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்தி
அபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார்
கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்று
மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து
இனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவே
வரங்களையும் வைத்து மாண்டுபோங் கோவெனவே
துரத்தனமா யெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார்காண்
பதறியிங் கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம் 200
இதறு தனைத்தீர்த்து இரட்சிப்பீ ரென்குருவே
என்றுபே யெல்லாம் இப்படியே சொன்னவுடன்
அன்று தலையோடு அந்தமுனி தானடித்து
வைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால்
மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ
சத்தி சிவன்வரையும் சத்துப் பிறக்கணுமே
பொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே
வல்லாத்தா னல்லோ வைகுண்ட மாபொருளும்
ஆரவர்நா மங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான்
சீர்பரன் முதலாய்ச் சிந்தை பதறணுமே
உங்களுட மூப்பு உகத்திலினி வாராது
எங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண்
எல்லா மவர்மூப்புக் குள்ளே யடங்குதுகாண்
பொல்லாப் பசாசுகளே பொன்றவிதி யுங்களுக்கு
ஆனாலு மீசர் அமைப்புக் கணக்கெடுத்து
நானே யிதுமேவித் தாறேனென் றிப்போது
இந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும்
எந்தக் கணக்கும் இருப்பு மவரிடத்தில்
ஆனால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய்
நானாகச் சொல்லி நற்கணக் கும்பார்த்து 220
அறிந்துகொள்ள லாமெனவே எல்லோரும் போவோமென்று
நாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும்
காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார்
தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே
பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க
என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று
நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்
முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து
இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்
வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ
இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ
பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்
எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்
நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து
தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்
வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து
ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து
ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி
நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி 240
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப்
பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்
இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்
என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்
அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே
இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது
எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்
உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்
கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி
கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து
நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்
எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவது
மூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே
அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய்
எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமே
நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து
ஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர்
நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து
ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து 260
நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளான
வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே
ஆனதினால் பேய்க ள் அந்நீசக் குலமதினால்
வானக் கனலில் மாளுமிக் காலமிதாம்
என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல்
நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை
முன்னுள்ள ஆகம முறைநூற் படியாலே
என்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயை
மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி
நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி
எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை
வல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சி
என்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும்
பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும்
நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக்
கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி
மனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித்
தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானை
அப்போ நருள்பேரில் ஆடும்பே யேதுசொல்லும்
இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்துத் 280
தனியே யரசாள சாதியொன்று தானெடுத்துச்
சொல்லொன்றுக் குள்ளான சுவாமி வரங்கள்பெற்றுக்
கொல்லென் றெங்களையும் கொல்லத் துணிந்தீரே
என்றுபே யெல்லாம் எண்ணியெண்ணித் தானழுது
அன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார்
காந்த லிடியும் கனத்தவலுச் சக்கரமும்
சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள்
ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம்
வையோ ரறிய வைக்கிறோ மென்றுரைத்தார்
உடனே வைகுண்டர் உற்றநா ராயணரும்
திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும்
அணியில்லாப் பேயே அன்றுதந்த வரத்திலொரு
மணியிருக்கு தானால் மாறியென் னோடுரையும்
அப்போது பேய்கள் எல்லோருந் தானழுது
இப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும்
உம்முடைய தர்மம் உண்டானா லெங்களையும்
தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போங்காண்
என்று பேயுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரை
பார்த்து இருந்தேன் பசாசுகளே யுங்களுக்காய்க் 300
காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும்
என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்து
உன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறே னுங்களையும்
என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார்
அன்றுபே யெல்லாம் அறமெலிந்து தான்வாடி
என்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்று
வன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார்
அந்தப் பொழுதில் அய்யாநா ராயணரும்
இந்தப் பொழுதில் இம்மணியிந் நேரமதில்
ஐயாவு மங்கே ஆகமத்தைத் தான்பார்த்து
கைவாய்த்து தென்று கழிவோ டுரைபகர்வார்
திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்து
விட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்து
மலையேறி யொக்க மாண்டுபோ வோமெனவே
விலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ் சத்தியமாய்
அய்யா வுரைத்த ஆணை தவறாமல்
மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்து தம்மானை
அய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாணை
மெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம்
தந்தபிழை சாவு சங்கிலிக ளானதுவும் 320
எந்தன் குலமுழுதும் இப்போ வரமும்வைத்து
அய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறி
மெய்யாக அக்கினியில் விழுந்துசெத்துப் போவோமெனச்
சொல்லிப் பேயெல்லாம் சுத்தவர மத்தனையும்
பல்லுயி ருமறியப் படித்துவரம் வைத்ததுவே
வைத்த உடனே வைகுண்டர் முறைப்படியே
மெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங் கையாலும்
ஆகாத்த தெல்லாம் அழித்திடு வாரனவே
வாகாக முன்னூல் ஞாய வழிப்படியே
வாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன்
சாணா னொருவிரலால் சற்றேதொட வைத்தனரே
தொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும்
பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார்
உடனே மனுவழியில் உடைய குலச்சனங்கள்
படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவே
அசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும்
செய்திதனை யெல்லாம் சீமை நருளறியும்
கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்று
மன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார்
இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து 340
அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவே
மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய
இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி
அய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான்
மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம்
அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும்
முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென
ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல்
சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானே
என்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள்
அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சி
கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறை
நாட்டுக் குடைய நாரா யணரிவர்தான்
மன்று தனையளந்த மாயத் திருநெடுமால்
என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார்
ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி
லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி
வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று
நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார்
வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன 360
விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத்
துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர
வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே
மந்திரவாதிகளின் விசையடக்குதல்
மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள்
விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று
நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும்
அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய்
கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும்
முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச்
சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும்
கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும்
விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி
அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர்
ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து
ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி
புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி
நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும்
சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு
சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி
வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக் 380
கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச்
சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள்
கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில்
சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும்
கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து
என்ன விதமோ என்று மிகக்குளறி
மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி
எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி
சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி
தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார்
பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக்
குறத்தி வருதல்
குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு
உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால்
குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி
விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே
கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி
வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து
அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச்
சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து
பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம் 400
விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர்
உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர்
தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும்
நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார்
வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும்
பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண்
நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார்
அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால்
தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால்
என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர்
நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ
சொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம்
எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்று
சந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பி
வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில்
கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்து
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனே
கேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார்
நாட்டுக் குடைய நாராயணர் பாலன்
பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச் 420
சிறந்து தவசு செய்யு முறைமையினால்
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப்
பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல்
ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பி
இருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப்
பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம்
இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும்
போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான்
வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னே
நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு
பொல்லாத தெல்லாம் போக விதியாச்சு
உந்தன் துயரம் ஒக்கஇப்போ தீரவென்றால்
எந்தன் மொழிகேட்டு இடைவீரோ நீங்களெல்லாம்
அப்போது மலையில் வாழு மலையரசர்
இப்போது சுவாமி என்னநீர் சொல்வீரோ
அதுக்கெல்லாம் நாங்கள் அல்லவென்று சொல்லோங்காண்
பொதுக்கெனக் கேட்டுப் புகல்வார் வைகுண்டருமே
மாந்திர தந்திர மாமுனிவன் சாஸ்திரமும்
உபாந்திர வாகடமும் உபாயச் சமூலமதும்
மாயக் கருவும் மாரண வித்தையதும் 440
உபாயக் கருவும் உயர்ந்தகரு மோடிகளும்
தம்பனவுச் சாடனமும் சல்லியம் பேதனமும்
வம்புசெய்யு மாஞால மந்திர மட்டகர்மம்
எட்டு மடக்கி இதுமுதலாய் மந்திரமும்
கட்டுடனே யிப்போ கருசமூ லத்துடனே
ஒக்கவைத்தோ மென்று ஓருடக்கா யுடக்கி
மிக்க என்முன்னே மேதினியீ ரேழறிய
ஆணையிட்டு வையும் அருமலையில் வாழரசா
நாணமிட்டுப் போகுமுன்னே நம்முன்னே வையுமென்றார்
உடனே மலையரசர் ஒக்க மனதலைந்து
குடலே மருண்டு குறுக முழிமுழித்து
வம்பறுக்க வந்த மாயக்கூத் தனெனவே
தம்பெலங்க ளற்றுத் தலைசாய்ந் துடனயர்ந்து
மாட்டோமென்றோ மானால் மலைமிருகங் கேளாது
வீட்டைப் பிரித்தெறிந்த மிருகம் விலகாது
குடியிருப்பு நமக்குக் குன்றுமே லங்குமில்லை
படியீரே ழளந்த பரமனம்மை யிங்குவிடார்
அய்யாவுரைத்த ஆணை வழிப்படியே
மெய்யாக வைத்து வீடுமட்டும் போயிருப்போம்
அல்லாதே போனால் அம்மலையி லிருப்புமில்லை 460
எல்லா மறிந்து இனிப்போவ துமரிது
என்று மலையரசர் எல்லோருஞ் சம்மதித்து
அன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டு
ஐயாவே யெங்களுட ஆதிநா ராயணரே
கையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லை
ஏடுகொண்டு வந்தோ மில்லையே யெம்பரனே
வீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம்
என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொரு
சூட்ச முண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம்
மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம்
எல்லா விதத்தொழிலும் இந்திரமா ஞாலமுதல்
எல்லாம் வைத்தோமென்று ஆணையிட் டாற்போதும்
நல்லதுவே யென்று நாடி மலையரசர்
வல்ல விதத்தொழிலும் மந்திரமா ஞாலமுதல்
எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார்
அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண்
மெய்யாணை யிட்டப் பொழுதே மலையரசர்
எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையா
தங்கடங்க ளொன்று தானிருக்கு தையாவே 480
இதினால் பிழைப்பு என்றிருந்தோ மித்தனைநாள்
விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம்
மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்கு
உலைவில்லா நொம்பலமும் உலாவுமிரு கச்சிறையும்
இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும்
நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும்
என்று இவர்கேட்க இதுதந்தோ மென்றுரைத்தார்
அன்று அவரனுப்பி அவர்மலைக் கேகுகையில்
வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம்
செயித்த தறியாமல் திருப்பியே செய்ததுண்டால்
நரக மதுபிடித்து நாள்வழியே கொன்னுகொன்னு
துரோக மடைந்து தீநரகில் மாள்வீர்கள்
என்று சபித்தார் எம்பெருமா ளானவரும்
அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால்
சொன்ன நரகில் செத்திறந்து போவோமென
அன்னப் பெருமாள்முன் ஆணையிட் டுப்போனார்
போனா ருலகில் பிச்சைவேண் டிக்குடித்து
வானோ ரறிய மந்திரமா ஞாலமற்று
மந்திர வித்ø மாமுனிவன் சாஸ்திரமும்
தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி 500
வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலே
மெய்கொண்ட வானோர் மிகஅறியத் தானெழுதி
மேலோக மான வைகுண்ட ராச்சியமும்
பூலோக முமறியப் பெரியோ னெழுதினரே
மாந்திரங் கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும்
உபாந்திரக் கேடு தீதோ(டு) ஊறியப் பொய்பொல் லாங்கு
ஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைக ளெல்லாம்
சாந்தியி லெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்க லுற்றார்
நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச்
செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய்
மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும்
பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில்
உண்டாகி வாழ்ந்து உலக மறிவதற்கு
குண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும்
ஆகா தெனஎரித்து அப்பிறப் புமறுத்து
வாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரே
என்றுசொல்லித் தர்மம் எம்பெரு மாள்நினைத்து
மன்றுபதி னாலறிய வாய்த்ததர்மங் கூறினரே
வைகுண்டர் தர்மம் கூறல்
இன்றுமுத லெல்லோரும் இகபரா தஞ்சமென்று
ஒன்றுபோ லெல்லோரும் ஒருபுத்தி யாயிருங்கோ 520
காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
வீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோ
வைகுண்டருக் கேபதறி வாழுவ தல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தியயர்ந் தஞ்சாதுங்கோ
அவனவன் தேடுமுதல் அவனவன்வைத் தாண்டிடுங்கோ
எவனெவனுக் கும்பதறி இனிமலைய வேண்டாமே
என்று வைகுண்டர் இராச்சியத்தி லுள்ளோர்க்குக்
கன்றுக்குமா தாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார்
எல்லோருங் கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்று
நல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே
வருவார் வைகுண்டர் வந்தா லிருப்பவர்க்குத்
தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும்
என்றுசொல்லி முன்னோர் எங்கள்கா லமதிலே
நன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்க
எங்கள் கலிதீர்ந்து எம்பரனே யென்றுசொல்லி
சங்கை யுடனேபல சாதியெல் லாமறிந்தார்
நருளறிய தர்மமிதை நாட்டியே யென்பெருமாள்
துரித முடனே தொல்புவியில் வாழுகின்ற
பட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும் 540
அச்சு அரிமுதற்கும் ஆனமிரு கங்களுக்கும்
ஊர்வனங் களானதுக்கும் உதித்தபுற் பூண்டுகட்கும்
கார்சேட னாறுகட்கும் கரடுகல் லானதுக்கும்
உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறா ரன்போரே
மிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோ
உங்களுக்குப் புற்பூண்டு உண்டு மதைப்புசித்துச்
சங்கையுட னோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ
வாந்திருங்கோ நீங்கள் வைகுண்ட ருண்டெனவே
தாழ்ந்திருங்கோ வென்று தங்கள் கிளைபோலே
மிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்கு
உறுதி யுடனே உரைத்தார்வை குண்டருமே
பட்சியெல்லா இனமும் பண்பா யொருஇனம்போல்
கட்சி யுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோ
சிறிது பெரிது என்றுமிகச் சீறாமல்
உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்று
கூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோ
நாடி யுரைத்தார் நல்லபட்சி தங்களுக்கு
புல்பூ டானதுக்கும் பொறுதி மிகவுரைத்துக்
கல்வாரி தனக்கும் கனத்தசே டன்தனக்கும் 560
தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்து
மங்கள மாக மனமகிழ்ந்து வைந்தருமே
நாட்டுக்கு நம்முடைய நல்லதர்மத் தின்படியே
கூட்டுக்கு ஏற்றக் குருவுபதே சம்போலே
எய்யாமல் நாதன் எல்லோருந் தானறிய
செய்தர் மஞாயச் செய்திகே ளும்நடுவே
அன்னீதத் தாலே லோகம் அவனி யீரேழும் வாடி
குன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைவர் கண்டு
கன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில்
மன்னிய மனுப்போல் தோன்றி மன்னுகத் துதித்தார் தானே
உதித்தாயிரத் தெட்டாமாண்டில் உவரிசெந் தூரில்பெற்றுக்
குதித்தாண் டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில்
பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாள்
விதித்தாமிதைத் கருத்தாய் அருளுரைத்தா ரறவுரையே
பொய்யில்லை பசாசு இல்லை பில்லியின் வினைக ளில்லை
நொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லை
தொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லை
மையில்லை உலகத் தோரே வாழுமோர் நினைவா யென்றார்
இத்தனை யெல்லா மில்லை என்றரி நாதன் சொல்லப்
புத்தியி லறிந்து மண்ணோர் புதுமையென் றன்பாய் கண்டு580
முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார்
பத்தியில் லாதா ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார்
இப்படி மனுட ரெல்லாம் இவர்மொழி தர்மங் கண்டு
ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்ச மென்று
செப்பிடத் தொலையா தையா சீர்பதம் பதமே யென்று
நற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார்
கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல்
நாடியே யுலகி லுள்ள நருடகளோர் தலத்தில் வந்து
கூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்த
சாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறி
பாடிய வைந்தர் தன்னைப் படையேவிப் பிடிக்க வந்தான்
வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்து கூடார மிட்டு
மந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன்
இந்தமா நிலத்தி லென்னோ(டு) எதிரிதா னாரோ சொல்வீர்
விந்தையா யவரைச் சென்று விருதிட்டு வருக என்றான்
நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்து
மூட மடைந்த முழுநீச மாபாவி
இருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகி
வருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில் 600
ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடி
சேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில்
சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன்
ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடி
சரடன் கரடன் சவுனி கெவுனியுடன்
முரட னுடனே மூர்க்கர் முழுமூடர்
படைக ளலங்கரித்துப் பார வெடிதீர்த்துக்
குடைக ளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்து
வாள்கா ரர்கோடி வல்லயக்கா ரர்கோடி
தோள்கா ரர்கோடி சுரண்டிக்கா ரர்கோடி
அம்புக்கா ரர்கோடி ஆயுதக்கா ரர்கோடி
வம்புக்கா ரர்கோடி வந்தா ரவன்கூட
வெடிக்கா ரர்கோடி வேல்கா ரர்கோடி
அடிக்கா ரர்கோடி வந்தா ரவன்கோடி
இத்தனை யார பாரத் துடன்நீசன்
தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்து
வந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில்
தந்துதந் தாகத் தங்கள் மிகக்கூடி
கொந்துகொந் தாகக் கொடும்படைகள் கூடிவர
மந்திரி மாரோடு வந்திருந் தேதுசொல்வான்
கேளாய்நீ மந்திரியே கிருபையுட னோர்வசனம்
வாளாற் பெரிய மன்னர்களந் நாள்முதலாய் 620
நமக்கா யிருந்ததுகாண் நம்முடைய நாளையிலே
துடுக்கான வெள்ளை நசுறாணி யவன்தனக்காய்
ஆச்சுதே நாடு அவனுக்கே யாகிடினும்
பேச்சுநா மல்லால் பின்னொருவர் காணாதே
ஆனதாற் பூமியிலே ஆரொருவ ரானாலும்
மானமற வேநமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால்
ஆய்ந்து விசாரித்து அறிவித்துச் சொல்லுமென்றான்
தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால்
பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால்
கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான்
வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம்
வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ
நமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும்
குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில்
வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்று
மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல்
நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத்
தான்தா னுரைபகர்ந்து சாதிபல தும்வருத்தி
ஒருதலத்தி லூட்டுவித்தான் உற்றநீ ரானதையும்
அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதுகாண் 640
ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடு வேனென்றும்
சாகா வரங்கள் சாணாருக் கீவேனென்றும்
சொல்லி யிருக்கிறான் சுவாமிவை குண்டமென்று
தொல்லுலகி லிந்தச் சொற்கேட்டு ராசாவே
என்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன்
ஒன்றுமுரை யாடாது உட்கார்ந் தயர்ந்துரைப்பான்
ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்ன
வாதுக் கொருவர் வருவாரைக் காணோமென்று
நினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண்
மனதயர்ந்து பார்த்து மந்திரியைத் தானோக்கி
ஏதுகாண் மந்திரியே எல்லாரிலு மெளியச்
சாதியிலே வுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழி
ஏதோவொரு சூட்சம் இருக்குதுகா ணிம்மொழியில்
ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங் கூடிருந்து
பாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியை
என்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்து
அன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான்
சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சி யந்தனிலே
வேற்றொருவ ரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண்
எதிரியுண்டோ பாரு என்னுடையச் சோதிரியே 660
கருதி மிகப்பார்த்து கடியச்சோ திரிபுகல்வான்
தர்ம முடிவேந்தே சாற்றக்கே ளுமரசே
கர்மக் கலிதோசம் கமண்டலங்க ளேழ்வரையும்
சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம்
கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோ பம்வெகுண்டு
பூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதை
சாமிதர்மத் தாலே தோச மதையழித்து
நற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள்
சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும்
மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித்
தனுவை யடக்கித் தவசு மிகஇருந்து
நல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்து
வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து
ஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான்
என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்க
நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து
சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான்
எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்ன
சொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியே
நல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான் 680
இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவே
சொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண்
தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்
பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும்
நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவே
சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே
என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான்
மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான்
அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும்
இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால்
போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப்
பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப்
பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும்
சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம்
பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே
இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும்
மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே
என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில்
அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில் 700
ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக்
கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை
கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம்
கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம்
தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று
பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்
நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும்
மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகி
ஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர்
மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம்
ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும்
எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல
பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா
அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்
வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும்
தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி
புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ
வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னை
விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ
தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி
வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி 720
நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து
செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ
ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று
மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்து
மெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து
செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ
இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில்
ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து
அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற
செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ
சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ
குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ
எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதி
அவ்விட மாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா 740
செவ்விட மாபோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையா
இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூ ரென்றான்
என்றவன் சொன்ன போ இராசனு மிகவே கேட்டுப்
பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியி லறியா வண்ணம்
மன்றலத் தோர்க்கு மேற்கா வார்த்தையை யுரைத்தா யென்று
கொன்றவன் தன்னைப் போடும் கோபமா யுரைத்தா னீசன்
வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன்
சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோ
ஆதர வில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடா
பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா
நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச்
சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்
சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளி
நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ
பிரமனை யொப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச்
சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லை
வராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டான்
இதாரடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய்
காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி
நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய் 760
வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான்
தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன்
அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான்
இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்
கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான்
மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன
வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில்
கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்
முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன்
ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும்
சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம்
ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான்
என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும்
பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத்
தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க
பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத்
தார்க்கெனப் பாவி நீசச் சறடனு மேதோ சொல்வான் 780
ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன
கார்க்கதி கௌட சாஸ்திரி கடியனை யனுப்பு மென்றான்
அனுப்புமென் றுரைத்த போது அரசனு மேதோ சொல்வான்
துனுப்புடன் சாணான் தன்னைச் சூழ்ந்துநூற் கயிற்றாற் கட்டிக்
கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும்
வனிப்புடன் போவா யென்று வரிசையுங் கொடுத்தா னீசன்
கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டு
கடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத்
தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்று
நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான்
பரிநடைக் காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான்
கரிநடைக் காரர் தம்மைக் காவலாய் முன்னே விட்டான்
சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்று
வரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே
அம்பெடுத் தெய்வே னென்று அவனொரு அணிகள் சாட
கம்பெடுத் தடிப்பே னென்று காலசன் மிகவே சாட
கொம்பெடுத் துதைப்பே னென்று குஞ்சரத் தலைவ ரோட
பும்படக் கொல்வே னென்று போயினன் கௌவுடன் தானே
இந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானை
குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி 800
இங்கேகொடு வாறேன் என்று கௌடனுமே
துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து
ஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்து
வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப்
பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமே
கரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி
நீசன் விடைவேண்டி நீணில முமறிய
பாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன்
வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து
காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து
இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று
அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே
நன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதி
தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதி
என்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப்
பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி
சுவாமி பாற்கடல் நோக்கி ஒடுதல்
ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டு
ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர்
ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல்
நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி 820
நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவே
செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக்
கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித்
தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே
ஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம்
வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார்
பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக்
கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும்
சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோ
நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே
பேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லி
நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண்
தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதை
அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்து
வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண்
நல்ல மனுவோர் நாரணா தஞ்சமெனச்
செல்ல மனுவோர் திருப்பாத முந்தொழுது
கூடி நடந்தார் குருவே குருவேயென
நாடி நடந்தார் நல்லபதியேற் வரெனக் 840
கண்டுகொள்வோ மென்று காட்சை யுடன்நடந்தார்
பண்டு அருள்பெற்றோர் பச்சைமா லுடன்நடந்தார்
அப்போ வைகுண்ட ராசர் மனமகிழ்ந்து
எப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம்
வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்து
முன்பு விதியால் முழுநரக செத்திறந்து
என்று சபித்து எம்பெருமாள் தானடந்து
பண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே
சென்றனர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்று
நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர்
பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னைச்
சென்றிட அழைக்கிறார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும்
நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளே
பல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்ல
வெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிற் குடைகள் போட
வல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வார்
அப்பனே வொப்பில் லாதா அலைகடல் துயின்ற மாயா
செப்பவுந் தொலையா நாமம் சிமையில் விளங்கப் பெற்றாய்
தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோ வையா
எப்போநான் விளங்கி யுன்றன் இரத்தின சிம்மாசன மேறுவேன் 860
ஆண்டு ரண்டாச்சே மாதம் அயிரு பதினாலாச்சே
வேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கி
கூண்டுநீர் முன்னே சொல்லிக் குருவுப தேசம் வைத்த
ஆண்டின்னம் வருகி லையோ அப்பனே மெய்யுள் ளோனே
முட்டப்பதி விஞ்சை 1
இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவி
முப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்து
எப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா
ஒப்பில் லாச்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா
ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளு
மூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து வுதித்தஅன்று
தாங்கி யுனைநான் வந்தெடுத்துத் தனது தாயை யிடம்நிறத்திப்
பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே
வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி
எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு
கண்ணைப் பறித்து நீசனுட கருவை யறுத்துக் கலியழித்து
எண்ணும் வளர்ந்து வாழவைப்பேன் என்னா ணையிது நீசமகனே
மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய
கண்ணே யிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்தி
புண்ணிற் கதிரு பட்டாற்போல் பொல்லா நீசன் கண்டுழைந்து
எண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே 880
மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால்
உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச்
செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பினனே கட்டிறுக்கிப்
பகையே செய்து மிகஅடித்துப் பார விலங்கில் வைப்பானே
வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்து
செய்ப்பாய் கலியை யறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சு
போய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்று
மெய்ப்பா யவனு முரைத்ததுபோல் மெள்ள வுரைத்து இருந்திடுநீ
மனுவை யடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான்
தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல்
இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லெனைநினைந்து
கனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே யெனது கற்பகமே
அன்பா யுன்னை யடுத்திருந்த ஆதிச் சாதி யவ்வினர்க்குத்
தன்பா லருந்துஞ் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்து
என்பாற் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப்
பின்பா லவரை யருகழைத்துப் புசத்தி லடுக்க இருத்திடுநீ
கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம்
கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும்
தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும்
பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே 900
காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம்
சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி
வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க
காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே
பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச்
செல்லப் பதிகள் மிகமுகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ
வல்லக் கொடிகள் மரம்நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்
பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்த மடிவானே
இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும்
எப்படி மலங்கி யென்னோ(டு) இதுவுரைத் தேது பிள்ளாய்
சொற்படி யெல்லா மந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய்
அப்போநீ யறிந்து கொள்வாய் அப்பனும் நீதாய னானாய்
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பா
என்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பா
உன்னையின்னங் காணார் உலகி லொருமணிக்குக்
கெடுத்தானே யென்று கெடுவார் வெகுகோடி
நடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாது
புழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில்நீயும்
கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல் 920
ஆவி யலுகாமல் ஆடையொன் றில்லாமல்
பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்று
கிடப்பாய்த் தெருவில் கிழவன்வேச மெடுத்துத்
துடைப்பார்கள் நம்மினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர்
சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்று
வீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த் தானகைப்பார்
பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோ ரறிய
மண்சீமை யோரறிய மங்கையொடு சண்டையிட்டுத்
தெருவிற் கரையேறித் தேவியரைத் தான்கூட்டி
கருவி லுருத்திரண்டு கண்ணாளர் தாம்பிறந்து
சீமை நருளறியத் தேசந் தனிலாண்டு
தாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்து
மனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில்
தனுக்க ளுனக்குள்ளே சர்வது மேயடங்கும்
எல்லா மடக்கி யானுன் னிடமிருந்து
நல்லானே யுனக்கு நாட்டில் சிறப்புமெத்தக்
காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னே
ஆணும் பெண்ணோடும் அன்புற்றி ருக்கையிலே
நல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில்
செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன் 940
வாகனத் தேரும் வருமா ஞாலத்திருந்து
கோகனக மாலே குணமாக வேகூடிக்
காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார்
தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய்
இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோ
வன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீ
பதறாதே போயிருநீ பாரத் தவசியிலே
குதறாதே போயிருநீ கூண்டத் தவசியிலே
வாறநீ சன்தனக்கு மலங்காதே நின்றுகொள்ளு
போறநீ சன்தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளு
என்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயென
மன்று தனையளந்தோர் மகனைக் கடல்கடத்திக்
கரையிலே கொண்டு கண்ண ருடனுறைந்தார்
பிதாவை யனுப்பிப் பெரியவை குண்டப்பொருள்
விதானித்து உச்சரித்து வேதவுல் லாசமிட்டுத்
தெச்சணா பூமி சென்று தவத்ததிலே
உச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார்
நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனே
படந்தார மாயன் பண்டு தவமிருந்த
தலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார் 959

கலி சோதனை
இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப்
பொருந்திடும் கமல மாது பூரண மதுவாய் நிற்கக்
கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம்
புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே
வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர்
கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்
பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போது
அருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார்
முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
இப்போது நீசன் இங்கோடி வாறான்காண்
மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ
செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன்
கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம்
என்று மக்களுக்கு இயம்ப அவர்விலக
முன்குறோணி விந்திலுள்ள மூடக் கௌடனவன்
கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச்
சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன்
சூழப் படையைச் சூதான மாய்நிறுத்தி
வேழம் பலரேவி வெடியா யுதத்துடனே
வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில் 20
சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமே
கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க
அவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதை
அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக்
குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்து
சாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்து
வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து
குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசி
சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து
அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து
முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை
இப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்து
மெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார்
ஆளுக் கொருவன் ஆவானோ நீசனெல்லாம்
தூளுபோ லாக்கவென்று துடியா யெழுந்திருந்தார்
சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்து
ஆன்றோரை நெஞ்சில்வைத்து ஆடை மிகஇறுக்கி
உடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டுப்
படைத்திரளாய்ச் சான்றோர் பண்பா யொருமுகமாய்
எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து 40
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிப்
சுவாமி பொறுமையுரைத்தல்
பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்கா
அறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்கு
வம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தை
அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்
மறுத்துரை யாடாமல் மக்களென்ற சான்றோர்கள்
என்னசெய்வோ மென்று இவர்களையைத் தாங்கடித்து
பின்னே விலகிப் பெரியவனே யென்றுநின்றார்
நீசன் கொடுமை
நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்று
பாசக் கயிறுகொண்டு பரமவை குண்டரையும்
கட்டி யிறுக்கிக் கைவெடியா லிடித்துக்
கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டுமிதித்துத்
தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக்
குலையக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக்
குண்டியிலே குத்திக் குனியவிடு வானொருத்தன்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
வெடிப்புடங் கால்சுவாமி மேலெல்லாந் தானிடித்து
அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான்
சாணாருக் காகச் சமைந்தாயோ சுவாமியென்று 60
வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லி
அனைவோரை யும்வருத்தி ஆபரணந் தேடவென்றோ
சமைத்தாய் நீசுவாமியென்று சாணாப் பனையேறி
பனைச்சிரங் கின்னம் பற்றித் தெளியலையே
உனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோ
தாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீ
நாரண சுவாமி நானென்ற தும்நீயோ
வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான்
உன்னோடு நின்றவர்கள் உன்னை யடிக்கையிலே
என்னோடு வந்து என்னவென்று கேட்கலையே
நீசுவா மியென்றால் நெகிழுவ ரோஇவர்கள்
பாசக் கயிறு பற்றுமோ வுன்கையிலே
வகைதேட வென்று மனுச்சுவாமி யென்றாயே
புகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலே
நருளை வருத்திவிட்ட நல்லமந்தி ரத்தாலே
மருளச்செய் தெங்களையும் மண்ணில்விழ வைபார்ப்போம்
அல்லாம லுன்கைக் கட்டு மறுவதற்கு
வல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும் 80
கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்ன
நானன்னா வென்று நகைப்பா ரொருகோடி
ஏசுவார் கோடி எறிவா ரொருகோடி
பேசுவார் கோடி பேயன்வெறும் பேயனெனச்
சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரை
பல்லுயி ரும்படைத்த பரமன்வாய் பேசாமல்
கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந் தேமகிழ்ந்து
சவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார்
வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார்
அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்து
வேதனைகள் செய்வார் வேதநா ராயணரை
சாதனைக ளுள்ள சர்வபர நாரணரும்
எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
இவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
அவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை
இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோ
என்று மனதில் இதமாய் மிகவடக்கி
ஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார்
நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள்
கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி 100
ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர்
கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே
பாவிநீ சனாலே பட்ட துயரறிந்து
ஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமே
அய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமென
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள்
தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம்
வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய்
இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான்
தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம்
என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம்
கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு
அய்யா சான்றோர்க்கு அருளல்
மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே
அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை
இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்
கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்
கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்
இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ
தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால்
நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் 120
ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரே
என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம்
ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய்
ஆளுவோம் மக்கா வையகத்தை நாமாக
ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணை
என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே
கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும்
என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன்
முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால்
என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலே
பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா
உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே
சுவாமி கைது
என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கி
மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார்
கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக்
கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்தி
ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப்
பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை
இப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரை
அப்படியே பேசி அடித்து மிகநடத்தி 140
நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியே
பாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலே
தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம்
வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார்
தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார்
இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம்
குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்த
பம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார்
அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார்
மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள்
இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்
சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்
தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்
குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்
என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை
அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்
ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து
ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ 160
அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு
இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ
என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்
நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி
ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே
கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்
பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை
தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்
சுசீந்திரத்தில் அய்யா
கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்
விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்
அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி
செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே
கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே
கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து
பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே
தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக்
கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்
சழத்தி வருவது தானறியா நீசன்வன்
ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்
ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே 180
அப்போது மாயன் அடக்க மிக அறிந்து
இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்
கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே
தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது
நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்
ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி
எல்லாம் படைத்த ஏகன் கிருபையென
அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்
அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்
இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று
மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு
கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே
என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்
நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ
கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்
உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று
தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து 200
காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து
வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்
ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும்
பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்து
வேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமென
என்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல்
பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால்
கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடு
வெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில்
அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவி
திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து
இருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர்
தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார்
மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டி
அய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்த
பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால்
மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த்
தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள்
அட்டை மித்க அரியத்தேள் ஈமிதிக்க 220
விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க
நாற்றத் துறைகள் நரகத் துறைபோலே
பார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரிய
ஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலே
கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு
சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்
மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார்
ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு
மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்
இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்று
இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக்
கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி
அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல்
எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலே
பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவே
இப்பே யனையும் இங்கேகொடு வாருமென்று
அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே
உடனே சிவாயி உற்றநா ராயணரைத்
திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்
கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே 240
கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய
எறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர்
வெறிப்பேய னென்று விரட்டி மிகஎறியார்
எல்லாம் பொறுதியுடன் எம்பெருமா ளுமடக்கிக்
கல்லாரை யெல்லாம் கமக்கியறுப் பேனென்று
மனதி லடக்கி மாய நெடுமாலும்
கனகத் திருமேனி கண்கவிழ்ந் தேநடந்தார்
நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டுக்
கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டுப்
பத்மனா புரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடே
உற்பனமாய் மாயன் உள்தெருவோ டேநடக்க
ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேநடக்க
ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேபழித்து
வாயாராப் பேசி வைதாரே நீசரெல்லாம்
அதிலு மன்போர்கள் அவரைக்கண் டேபணிந்து
இதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில்
பொல்லாங்கு செய்தாரெனப் பேருநாம் கேட்டதில்லை
எல்லாங் கடைதலைக்கு இட்டதர்ம மேகாக்கும்
என்றன்போர் சொல்லி இவரழுது நின்றராம்
அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரே
போனாரே தக்கலையின் புரைக்குள்ளே யுமிருந்து 260
மானான பொன்மேனி வாலரா மங்கடந்து
வாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும்
சீரிய நாதன் சென்றகண் டேநடந்தார்
நடந்துத் திருவனந்தம் நல்லபுரத் தெல்கைகண்டு
அடர்ந்த மரச்சோலை அடவி வனங்கள் கண்டு
கண்டுகொண் டெம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன்
பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன் றேநடந்து
இவ்வூரைக் கண்டு எத்தனைநா ளாச்சுதென்று
செவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள் ளேயடக்கி
சிங்காரத் தோப்பில் சுவாமி சிறை
அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள்
எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்ற பெம்மானும்
நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவே
நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே
ஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலே
கோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்க
மனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார்
தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்க
ஆகாத நீசன் அழியும் நினைவதினால்
போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில்
போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும் 280
கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவு
அந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல்
சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான்
அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய்
இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார்
நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில்
நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார்
சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்று
நாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார்
சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லி
ஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுது
நன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும்
கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும்
இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க
சந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்து
தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு
முழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள்
நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன்
காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு
தந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க 300
வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில்
என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று
கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ
தர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும்
அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடி
குட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலே
கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே
இப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமை
கொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால்
ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார்
சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு
என்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளை
கண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார்
அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரை
செப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர்
கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல்
நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார்
சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே
தாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப்
பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே 320
தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம்
கடுவாய் சோதனை
சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும்
காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்தி
ஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்து
போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப
வேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான்
ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்க
நல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன்
வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்து
இப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடி
வெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடி
வேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்து
நாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்து
நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத்
தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல்
கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே
விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு
நன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரே
இன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால்
தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன்340
ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம்
என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கி
இன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்து
அனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலே
பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல்
பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக்
குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடு
நாரா யணரே நாங்கள்போ குங்கருமம்
பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலே
உம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம்
ஆனதினால்
செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண்
ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே
போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும்
என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில்
நன்று நன்றென்று நாரா யணர்சிரித்து
விடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும்
படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி
கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி
முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து
காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி 360
வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரே
கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்து
வலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால்
உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து
அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு
உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக்
கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத்
தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால்
நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார்
நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம்
வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித்
தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல்
ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால்
நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம்
சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியே
கடுவாயைக் கொண்டு காலமே போவோமென
வெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச்
சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள்
அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால்
நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு 380
வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள்
சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று
ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்
பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி
போர்க்குத் திரள்போல் போற வகைபோலே
எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து
சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான்
படசி பறவை பலசீவ செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான்
மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான்
விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான்
ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான்
ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால்
நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ
சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ
இந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால் 400
மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோ
என்றே யடக்கி ஏகந் தனைநினைத்து
ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி
இதறாத மாயவனார் இருந்தார்கா ணம்மானை
அப்போ தவரிருக்க அம்மிருக மானதையும்
வைப்போடு நெஞ்ச மாநீச ராசனிடம்
கொண்டுவைத்தா ரந்தக் கோபக்கடு வாய்தனையும்
கண்டு கலிராசன் கனகசந் தோசமுடன்
அன்று சிப்பாயிகட்கு ஆனவரி சைகொடுத்து
இன்றுகடு வாய்தனையும் இப்போது கொண்டுசென்று
கூட்டி லடைத்துவைத்துக் கோப மதுவருத்த
ஈட்டிமை யாயதற்கு இரையொன்றும் போடாமல்
இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின்
சென்றந்தப் பேயனிடம் செல்லவிட லாமெனவே
அடைத்துவை போவெனவே அரசன் விடை கொடுக்கத்
திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலே
அன்றிரச் சென்று அடுத்தநாள் சென்றதற்பின்
இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று
வந்தானே யந்த மாநீசப் பாதகனும் 420
தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமே
கவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும்
மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமே
துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய்
அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும்
காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும்
சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும்
ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன்
மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே
ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
சேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
இந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும்
வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமே
அப்போது ராசன் அருகில்தலை யாடகளை
இப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும்
குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக்
கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதறி
அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப்
பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல்
நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல் 440
வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்து
மட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல்
கிடந்ததுகா øணாய கிருபை யதினாலே
தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க
ஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்று
மேட்டி யொருவன் விசையாகக் குத்திடவே
எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து
விட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக்
குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை
கத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப்
பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான்
நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான்
ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும்
தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான்
என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள்
மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்து
ஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்கு
தோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான்
அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார் 460
இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான்
என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமே
ஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும்
கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானை
வேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு
பார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம்
ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரே
அப்போ சுவாமி அருகில் மிகவாழும்
மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய்
இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான்
அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான்
என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்கு
அன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
ஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ
இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே
முப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும்
இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானை
அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின்
என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே
தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலே
முன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு
அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த
ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில்
தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்து
பத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்க
உத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்ற
மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான்
தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும்
நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில்
எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்
சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன்
ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன்
ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி
ஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான்
வைகுண்டர் விடுதலை
அப்போ தரசன் அவன்மனது தானிளகி
இப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம்
விட்டா லவனும் மேலு மிருக்குமுறை 500
கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப்
போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்க
ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான்
என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள்
மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான்
அப்போ தரசன் எல்லோரு மேகேட்க
இப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும்
ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும்
உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்து
மற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல்
தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல்
இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக்
கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப்
பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான்
மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி
ஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானை
செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து
நம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே 520
சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான்
இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவே
அதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்து
கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி
வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார்
கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து
மாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானை
உன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவே
குன்னுடைய நீசன் கூறினா னம்மானை
அப்போது மாயவனார் அகட்டென வுறுக்கி
இப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோ
தேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப்
போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்து
நல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியது
வல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலே
கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம்
விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ
என்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும்
நன்று நன்றென்று நாதன் பதந்தொழுது
தொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும் 540
முழுது மனந்த மூதூரை விட்டுஇன்று
பழுதில்லாத் தெச்சணத்தில் பரமனமக் கேயருளித்
தந்தயச் சிருந்த தாமரையூர் நற்பதியில்
சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவென
நினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கிக்
கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரைப்
பய்யவே யின்று பயண மெனவுரைக்க
உய்யமிகக் கொண்டோர் உல்லாச மேயடைந்து
சந்தோசங் கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்று
வந்தோர்க ளெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்து
ஏந்தி யெடுத்து இயல்வா கனம்போலே
ஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டுக்
கண்டுநீ சப்பாவிக் கர்த்தாவைத் தானிகழ்ப்பாய்க்
கொண்டுபோஞ் சாணாரைக் கூடிமிகச் சிரிப்பார்
சாமியென்றோன் பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும்
வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார்
பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள்
உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்து
பேயனைச் சுமந்து புலம்பித் திரிவதற்கு
நாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார் 560
என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரை
அன்றதிலே சிலபேர் அல்லகா ணென்றுசொல்லி
நம்மளுக் கென்ன நட்டம்வந்து போச்சுதெனச்
சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால்
ஏனிந்தப் பேச்சு யாம்சொல்லப் போறோமெனத்
தானிந்த வார்த்தை சனங்கள்சிலர் சொல்லவே
சொல்லன்பு வன்பு சுவாமி மிகப்பார்த்து
நல்ல அனந்தம்விட்டு நாடும்வால ராமம்விட்டுச்
செல்ல அரியும் சிறப்பா யகமகிழ்ந்து
வல்ல வழியில் வாழுகின்ற ஊரும்விட்டுப்
பள்ளிவா சல்விட்டுப் பார்வதி யகரம்விட்டுப்
துள்ளிக் கோட்டாறு சுசீந்திரத் தலமும்விட்டு
வேக மடக்கி விளியிட்டு வண்டுறுக்கி
ஆகமத்தின் தேதி அடுத்தாலா கட்டெனவே
சொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலே
வெல்லுவே னென்று விசையடக்கி எம்பெருமாள்
தொட்டிலி லிருந்து சுவாமி விளியுமிட்டு
மட்டி லிருந்த வளர்தா மரைப்பதியில்
வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடி
விந்து வழிகளுக்கு மேற்கெதிக ளாகுதென்று 580
இன்றுமே லெனக்கு ஏற்றவெகு சந்தோசம்
பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே
துவையல் பந்தி-வாகைப்பதி தவசு
சான்றோரை நல்ல தவத்துக் கனுப்பிடவும்
பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களை
நாடு மணங்கள் நல்லகலி யாணமுதல்
வீடுவகை சொத்து விருதுவே டிக்கையுடன்
தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும்
பாரு புகழப் பாவாணர் கீதமுடன்
நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும்
மேட்டிமைக ளாக மிகுவாழ்வு சேர்கையுடன்
வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும்
தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும்
கொடியுமிகக் கட்டிக் கொக்கரித் திகனையுடன்
வெடியெக் காளமுடன் வெற்றியி டம்மானமிட்டு
நாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்று
தாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்குப்போ
அறிவில் வினோதம் அதிகநே ருத்தமமாய்க்
குறியாய் மனதில் குறிக்கும் படியருள
அருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும்
மருளாமல் சாணார் மனதி லுருவாக 600
மூணுநேரத் துவைத்து உச்சி யொருநேரமதாய்
வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்
வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டுத்
தாக மில்லாமல் தவசிருக்க வேணுமென்று
பெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும்
கண்ணான கட்டில் கலருங் கிழவிவரை
சூலி யிளம்பிள்ளை திரண்ட மடமாதும்
மாலி னருளால் வஸ்துவகை தான்மறந்து
வீடு மனைமறந்து விற்று விலைகள்செய்து
ஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை
மண்ணு மறந்து மாடாடு தான்மறந்து
ஆண்டபண்ட மெல்லாம் அகல மிகமறந்து
கூண்டபண்ட மெல்லாம் கூசாம லேமறந்து
அனுபோக மற்று ஆண்பெண் ணிகழாமல்
இனிபோக மற்று இருந்தார் தவசெனவே
எல்லோரு மிக்க இருக்கத் தலம்பார்த்து
அல்லோரு மேக அவர்கள் மனதிலுற்று
நாத னரிநாதன் நாரா யணநாதன்
சீதக்குரு நாதனிடம் சென்றா ரவர்பதத்தல்
சென்றே யவருடைய சீர்பாதந் தெண்டனிட்டு 620
இன்றேக எங்களுக்கு இப்போ விடையருள்வீர்
என்றே சனங்கள் எல்லோரும் போற்றிநிற்க
அன்று பெருமாள் அகமகிழ்ந்து கொண்டாடி
நாம்நினைத் ததுபோலே நடந்து காரியந்தான்
தாம்நினைத் ததுபோலே தாநடந்து வீரெனவே
உத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர்
சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே
தவமது செய்ய வென்று சடுதியிற் சான்றோ ரெல்லாம்
உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதி லாக்கி
வகைபொரு ளாசை யற்று மனைவிகள் மக்கள் கூட
திகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார்
மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசை
பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை
எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை
ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார்
கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்று
பண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில்
தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து
கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே
இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு 640
பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணி
வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும்
தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே
அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து
துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப்
பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித்
தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார்
வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலே
தாழ்ந்தே சனங்கள் சந்தோச மாயிருக்க
அந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம்
நந்தி யருளால் நல்ல துணிதுவைத்து
உவரிநீ ரில்துவைத்து உவரிநீ ரைக்குடித்து
உவரிநீர் தன்னில் உற்றன்ன மேசமைத்து
உச்சி யொருநேரம் உணவு மிகஅருந்தி
மெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம்
உகப்பாட்டு மோதி உற்ற அபயமிட்டு
வகையாய் விடிய வரும்நா ழிகையேழில்
துணிகள் துவைத்துத் தோய மதிலிறங்கிக்
கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றி
இப்படியே நித்தம் இவர்மறவா வண்ணமேதான் 660
அப்படியே வாரி அலைவாய்க் கரையிருக்க
வாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிக
நீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர்
பேரி லிறைத்துப் பெருவாடை யாய்வீசச்
சீருகந்த நாதன் செயலா மெனஇருந்தார்
இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள்
அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய்
வாரிநீ ரல்லால் மறுநீ ரறியாமல்
சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவே
பவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும்
முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப்
பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே
நீச னிடையில் நிறடுசெய் தானதினால்
தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்து
ஆறு வருசம் அதிற்குறைவு வராமல்
வாறு தவசு வகுத்து முடிக்கவென்று
புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன்
சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று
ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி 680
அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை
நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள்
உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று
மகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத்
தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார்
விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே
ஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்து
மோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள்
வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில்
பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும்
வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள்
மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து
மாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில்
ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம்
இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப்
பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்ன
மூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலே
கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன
படுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல்
முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க 700
இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென
சதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித்
தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப்
பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லி
மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே
சேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து
வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை
முந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடு
கூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த்
தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்ட
வேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள்
பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து
நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும்
குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும்
முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும்
அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும்
முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும்
இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும்
உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும் 720
மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க்
காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும்
மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல்
ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார்
வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய்
மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப்
பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும்
காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத்
தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென
வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார்
இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள்
அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே
அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில்
பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே
வெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல்
தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும்
எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி
சங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில்
போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய்
வாயிதமாய்த் திரைதான் வந்துகோபித் தடித்து 740
பாலதியப் பெண்கள் பண்பா யுடுத்திருந்த
சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதே
அய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லை
செய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லை
வீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையது
ஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும்
தேகமதிற் சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லை
தாகத்துக் கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லை
பாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும்
இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லி
மனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய்
இருந்தா ரதிலே ஈசன் செயலெனவே
திருந்தார மார்பன் திரும்ப வொருதலத்தில்
கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரை
பண்டு வொருசணான் படுத்திருக்கு மவ்வேளை
சொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார்
முட்டப்பதி தவசு
இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான்
அதின்நோக்குஞ் சொல்ல ஆராலு மேலாது
துட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு 760
அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாது
வலங்கார மான வாய்த்த கடலதினுள்
தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும்
நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாது
கன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள்
பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும்
மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும்
ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும்
வகையின்ன தென்று வகுக்க முடியாது
தொகையின் தென்று தொகுக்க முடியாது
இப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால்
அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று
தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு
ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே
கேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லி
ஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்த
நடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவே
அடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும்
இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில் 780
வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவே
போவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்து
தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே
வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டு
சந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும்
இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்
செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார்
வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு
தாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும்
நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலே
ஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே
என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய்
அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானை
சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே
நீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்து
வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு
மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து
அன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து
வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்து
நல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து 800
எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்தி
அந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத்
தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார்
கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம்
பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்கு
மூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்க
வேத னவர்க்கு விதித்த விதிப்படியோ
நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ
எப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்து
அப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்து
வாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள்
புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய்
இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு
முந்தை விதித்த விதிவந் தொத்ததுவோ
அவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல்
இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார்
மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல்
தோணுதலா யவர்கள் தேகம் பழபழென
இந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே 820
சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமே
ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்
ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு
பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்
இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலே
பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்
பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு
நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்
பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு
நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்
எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை
அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்
சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே
நாதித் திருமால் நாடுகின்ற சான்றோரை
இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ
அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று
தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்
மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து
இனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத் 840
தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்
நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ
எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்
முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்
தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்
இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை
இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே
விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு
அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்
அப்போ அரிநாதன் ஆகட்டென வுறுக்கி
இப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும்
இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்று
அன்ன மøக்குறைத்து ஆழாக் கரிசியிட்டார்
ஆழாக் கரிசி அலர்மலர்ந்த கோவையுடன்
தாழாமல் சனங்கள் சடையாம லேற்றனரே
துவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ் சேவிப்பதுவும்
உகப்பாட் டோதுவதும் ஓயாமல் செய்தனரே
இன்னம்போ னாரில்லையே இப்படியே செய்திடினும்
இன்ன மொருவசனம் இப்போது செய்யவென்று
உன்னித் திருமால் உற்றவை சூரியைத்தான் 860
ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும்
மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடிப்
பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையே
முற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையே
கும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையே
வெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக் காணலையே
ஐயோநா மெல்லாம் அலைந்து மலைந்திருக்க
வையமதி லில்லாத வைசூரி வளைந்துதல்லோ
என்று சனங்கள் எண்ணம் பெரிதாகிச்
சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவே
பதறி நடுங்கி பரனேநீ தஞ்சமென்று
குதறி யுலகில் கூச்ச மிகவடைந்து
எங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவே
சங்கை வழுகாமல் தாமோ தரனுடைய
நினைவு மயராமல் நிலைதவறிப் போகாமல்
தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்று
போகு முன்னாகப் பெரியோன் பதமணுகிப்
பாகுரைத்து நாமள் பட்டசள முரைத்து
உத்தரவு வேண்டி உற்றிடத்தில் போவோமெனப்
புத்தி யுடனே பெரியோ னடிசேர்ந்தார் 880
சேர்ந்துவா கைப்பதியின் செய்தியெல்லா முரைத்துப்
பேர்ந்துவந்து முட்டப் பதியின் பெருமைசொல்லி
ஊணுகிடை யாததுவும் உயிரழிவு வந்ததுவும்
கோணுத லெல்லாங் கூறி விடைகேட்டார்
அப்போது நாதன் எல்லோரை யும்பார்த்து
இப்போது உங்கள் இல்லிடத்தி லேபோனால்
நாரா யணக்குருவை நாளு மறவாமல்
பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்
அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்
சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு
என்றைக்கும் நல்ல இயல்பே யருள்வோமென
நல்ல விடைகொடுத்து நாரா யணரனுப்ப
வல்ல வளர்சான்றோர் வாழ்த்தி யவர்போனார்
அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன்
இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்று
ஏகபர நாதன் எம்பெருமா ளானவரும்
லோகமதி லெம்பெருமாள் ஒருசொரூபங் கொள்ளலுற்றார்
இரப்ப வடிவாய் எடுத்தா ரொருவேசம்
பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு 900
கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல் லேயெடுத்துச்
சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே
பழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும்
வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன்
அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம்
சொர்ணத் தானமுதலாய்த் துவையல்கா ரர்ககெனவே
சான்றோ ரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள்
ஆண்டோ னருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார்
நித்தம்நித்த மன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லிச்
சித்த மிரக்கமதால் துவையற்கா ரர்க்கெனவே
இடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமது
வடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர்
நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்துப்
பாலு பவிசுடனே பாவித்தி ருந்தனராம்
இப்படியே சான்றோர் இனமா யிருந்தவர்கள்
அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார்
பாங்கா னதுவையல் பண்டா ரங்களெல்லாம்
பூங்கார மாகப் பிச்சையமு துண்டிருந்தார் 918

அய்யாவை முட்டப்பதிக்கு அழைத்தல்

இந்தப் படியே இவர் வாழும் நாளையிலே
சொந்தத் திருமால்க்கு சுவாமி யுரைத்தபடி
ஆண்டாறு சென்று அதிகத் தவமதுதான்
கூண்டாய் முடித்துக் குருநாதக் கண்மணியும்
இனிநாம் செய்யும் இயல்பென்ன என்றுசொல்லி
மனிதவ தாரன் மனதில் நினைத்திருக்க
நன்றான முட்டப் பதிதலத்தில் நாரணரும்
மன்றாடும் நல்ல வாய்த்தபர மேசுரரும்
வேதப் பிரமன் விளங்கு மறையோனும்
நாத ரிஷிமாரும் நல்லசங்கத் தோர்களுமாய்ச்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
வித்தை முகத்து வேழ முகத்தோனும்
எல்லோரும் வந்து இருந்தார் கடலருகே
அல்லோரும் வந்து அங்கே யிருந்துகொண்டு
ஏற்ற முனியில் இரண்டுபே ரைவருத்திச்
சித்த முடனே திடீரெனவே நீங்கள்சென்று
நம்முடைய பாலன் நல்லவை குண்டரையும்
எம்முடைய அருகில் இப்போ கொடுவரவே
சொல்லி யயைச்சார் சுவாமிதா னென்றுசொல்லி
நல்லியல்பாய்ச் சொல்லி நாரணனை யிங்கழையும் 20
வாருங்கோ முனியே வாய்த்த தவத்தோரே
சேருங்க ளங்கே திடீரெனவே யிப்போது
என்று விடைகள் இருவருக் குங்கொடுக்க
அன்று முனிகள் அவ்வாயு போல்விரைவாய்க்
கடிதாய் நடந்து கரியமால் நற்றவசு
முடிவாகச் செய்த முகுந்தன் பதியில்வந்தார்
வந்தனர் வைந்தர் பாத மலரிணை முனிமார் கண்டு
செந்தமிழ் ஆயன் பெற்றச் சேயிது கண்ணோ விண்ணோ
கந்தரக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள
முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா பேற்றிப் பேற்றி
பொல்லாக் கலியில் வந்திருந்து பெண்ணோ டவனிப் பொன்னாசை
மண்ணோ டுண்ணு மதத்தாசை மாய்கை விழியார் மருட்டாசை
பண்ணோர் தவத்துள் ளணுகாமல் பவமே யறுத்துப் பார்வைவிழி
கண்ணோ ஞானக் கருவிருத்திக் கண்டாய்ப் பொருளைக் கண்டாயே
அய்யா வுமது தவமதுவால் அரம்பை மாத ரன்றுபெற்ற
மெய்யாஞ் சான்றோர் கெதிகள்பெற்றார் மேவலோரு மிகப் புகழ்ந்தார்
பொய்யாங் கலிய னுயிரிழந்து போனா னரக மீழாமல்
அய்யா முட்டப் பதிதனிலே அழைத்தா ருந்த னப்பனென்றார்
அழைத்தா ரெனவே சொன்னவுடன் ஆதி முனியை மிகநோக்கிப்
பிழைத்தார் போலே மனமகிழ்ந்து பின்னு முனியோ டுரைபகர்வார் 40
இழைத்த கலியி னுள்ளிருத்தி என்னைக் கலியன் செய்தவலு
சழத்த மறிந்து வந்தாரோ சமய மிதுவோ தானுரைப்பீர்
நல்ல முனியே நம்மைக் கலியதனுள்
செம்மைகெட்ட நீசத் தீபாவிக் கையதிலே
கண்ணியிட்டு வைத்துக் கடக்கே நகண்டிருந்த
புண்ணியவா னின்று பிழைத்துக் குதித்தாரோ
நான்பட்ட பாடு நாடுபதி னாலறியும்
ஏன்பட்டா யென்று இன்றுகேட்க வந்தாரோ
ஏதோ தெரியலையே என்னுடைய நாயகமே
பாதகன்தான் செய்த பாராத்தியங் களெல்லாம்
பார்க்கும் படியாய்ப் பாரிக்கி றேனெனவே
ஆர்க்க முடனே அந்நீசன் செய்தபடிக்
கட்டுங் கயிறும் கையில் விழுந்திடத்தில்
முட்டுக்கு மேலே ஊற்ற மிகநினைத்தார்
வெடிப்புடங்கு தன்னால் விலாவி லிடித்திடத்தில்
துடிப்புடனே ஊற்றம் தோன்றும் படியேவைத்தார்
மேலில் பிரம்பால் மிக்க அடித்திடத்தில்
சீல முடனே சிணந் தோணவைத்தனரே
கன்னமதில் கம்பால் கனக்க அடித்திடத்தில்
உன்னித மாக உடன்தோண வைத்தனரே 60
கூண்ட முடியைக் குலுக்கியசைத் திடத்தில்
வேண்டு முடியை மிகக்கழிய வைத்தனரே
இப்படியே நீசன் செய்த இடறதுபோல்
அப்படியே தோணவைத்து ஆங்காரங் கொண்டனரே
பால்மாட்டை நீசன் பற்றிக்கொண்டே யடைத்து
மால்பா லேற்கும் மாதிரியைப் பார்ப்போமென
இந்தநாள் வரைக்கும் இருந்ததொன் றானதுக்குள்
அந்தநீ சன்தான் அநியாய மாகவேதான்
கொண்டு அடைக்க கோவேங் கிரிநாதன்
அன்றுமுத லிருபத் தொருநாள துவரைக்கும்
கோல மெடுத்துக் குருச்சமைந்த நாரணரும்
பாலுமுதல் வேறு பண்டமொன் றேராமல்
இருக்குந் தறுவாய் இதுநல்ல தாகுமென
அருக்காக நீசன் அவன்செய்த வேதனைபோல்
எல்லா முறைபோல் எடுத்தார் சொரூபமது
நல்ல முனிமார் நாரணா என்றுநிற்க
கைக்குள்ளே நின்ற கரியசீ சன்மாரில்
மெய்க்குள் ளறிய விளம்பினா ரெம்பெருமாள்
அய்யா முட்டப்பதி ஏகல்
இன்றைத் திவசம் இசைந்தமுட் டப்பதியில்
நன்றிப்போ போக நல்மணிக ளாகுதெனச் 80
சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து
நல்லதெனச் சொல்லி நாடி யவரிருக்க
அன்றிரா தன்னில் ஆரு மறியாமல்
நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய
வந்த முனியும் வளர்ந்த இருமுனியும்
சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி
சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க
வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவரத்
துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
வடிவான முட்டப் பதிதலத்தில் வந்தனரே
முட்டப் பதியில் முகுந்த னரிநாதன்
கிட்ட வருகும் கிருஷ்ணர்வந்து சேர்ந்திடவே
மகனை மிகக்கண்டு மாவிருப்பத் தோடிளகி
உகமாள வந்த உடையமக னேயுனத
சடமெல்லாம் வாடி சடைப்பானே னென்மகனே
வடவெல்லா மென்னோடு வகுத்துரைநீ யென்மகனே
கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே
விண்ணே வொளியே வேதத் திருவிளக்கே
கலியில் மிஇருந்து கலக்க மிகஅடைந்த
மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே 100
அடித்ததா ருன்னை அவனிதனில் பேயனென்று
கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார்
சொல்லென்று மாலும் சிவமு மெடுத்துரைக்க
வல்லபெல மான வைகுண்ட ரேதுரைப்பார்
செந்தூர்க் கடலில் செகலதுக்குள் ளென்னைவைத்து
முந்த எனக்கு மொழிந்த வுபதேசம்
கப்பாம லாறு வருசந் தவசாக
மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத் தெண்ணாமல்
கலிக்காசி யாசை கனாவில் நினையாமல்
அலிக்கியானப் பெண்ணின் ஆசை யணுகாமல்
பக்கக் கிளையாசை பாவித் தினிதாசை
அக்கத்தி னாசை அனுப்போல் நினையாமல்
நல்ல துணியாசை நளின மொழியாசை
சொல்லினிய ஆசை தீன்பண்டத் தினாசை
தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை
தாற்பரிய மானச் சந்தோசத் தினாசை
பூமியா சைமுதலாய்ப் பேராசை யும்வெறுத்துச்
சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத்
தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல்
மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான் 120
நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன்
வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன்
தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன்
பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன்
கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன்
வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும்
குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன்
ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில்
வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு
ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி
தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய்
ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம்
மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால்
பூசை படைப்புப் பெலிதீப மேராமல்
வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச்
சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
வையகத்தை யாளும் மாநீச னுமறிய
மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன்
இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம் 140
மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும்
அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி
வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை
நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை
வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும்
சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள்
இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலை யுங்காட்டி
இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே
பொருந்தாத காரியங்கள் புத்திக் குளறிமிகச்
செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே
நிசமிதுவோ என்று நீரவரோ டேகேளும்
இத்தனையுந் தர்மமதாய் யான்செய் திருக்கையிலே
புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும்
கட்டி யடித்துக் கைவெடி யாலிடித்து
இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே
நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சா ராயமதில்
கொஞ்சுங் கடுவாய்க் கூட்டி லடைக்கவென்றான்
நீச னவன்சாதி நிசமாகத் தான்கூடி
ஏசி யெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது
ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம் 160
வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை
மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும்
கோந்திர மாகக் கொல்லவகை செய்தார்கள்
பாவிகள் செய்த பலவினைகள் சொல்லவென்றால்
தாவு முலகில் தாலமதி லோலையில்லை
என்னைத் தவத்துக்(கு) இருத்தியிது நாள்வரையும்
இன்ன மிரங்கலையோ என்தவசு காணலையோ
அன்றருளித் தந்த ஆண்டு திகையலையோ
இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா
நம்மாற் கலியில் நனின்றிருக்கக் கூடாது
சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது
நன்றிசற்று மில்லா நாற வெறுங்கலியில்
கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும்
இனியென்னாற் கூடாது இக்கலியி லேயிருக்கப்
பனிதவழு மாயவரே பகர்ந்தமொழி மாறாமல்
ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன்
தாறுமா றுண்டானால் சாட்சியோ டேகேளும்
என்று வைகுண்டர் இத்தனையுஞ் சொல்லிடவே
நன்றினிய மகனை நல்லமுகத் தோடணைத்து
கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே 180
விண்ணே வொளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே
மண்ணே ழளந்த மலர்பதத்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே
இண்ணே முதலா யுனக்குநல்ல இயல்பே யாகு தென்மகனே
மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும்
செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து
தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும்
அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே
செல்ல மகனே சீமானே நீகேளு
நல்ல மகனே நாரணா நீகேளு
தவவேடம் பூண்டு தவமா யிருக்கையிலே
சிவஞான மல்லால் செல்வம்போல் காணாது
தவசு நிறைவேறித் தமோதரர்க் கேற்று
பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள்
மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை
செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே
கள்ள யுகத்தைக் காணாம லேயறுத்து
உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக
ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு
வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி
மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து 200
வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த்
தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப்
பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை
அன்பாக வைத்து ஆள முடிசூடிப்
பண்பாக வேண்டும் பவிசு மிகவாகச்
சாகா வுலகத் தர்ம பதியாள
வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே
ஆங்கார மாமோ ஆணுவங்க ளங்காமோ
ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு
தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி
பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே
அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும்
துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார்
இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு
சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே
அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து
தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு
நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை
மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா
தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன் 220
சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து
முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன்
அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே
வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால்
மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை
என்று முனிமார் இசையத் திருமாலும்
கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல்
இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம்
குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார்
உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து
படபடென நின்று பணிந்து மிகப்போற்றித்
தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை
என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய்
அன்று உரைக்க அதகத் திருநெடுமால்
நல்ல தெனவே நன்மகனைத் தானாவி
செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென
மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத்
தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர
பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட 240
நாவாணர் போற்ற நாரா யணர்மகனை
பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி
ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி
அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி
முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து
வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த
நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில்
தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே
மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும்
எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட
நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க
முட்டப்பதி விஞ்சை 2
வல்ல திருமால் மகனை முகம்நோக்கி
செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால்
திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும்
ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல்
நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே
சத்தகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக்
கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும் 260
சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால்
வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு
ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல்
பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும்
மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும்
மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து
மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு
இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள்
அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து
எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி
நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத்
தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே
மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக்
கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத்
துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து
பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற
தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து
பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும்
சரியா யுலகோர் சங்கை யதுபோலே
தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ 280
மங்கள மதாக மாலையிடு என்மகனே
என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி
தன்னோ டினங்கள் தலைவன்மா ரேழ்வரையும்
எடுத்துக் கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி
கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே
இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு
அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு
வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத்
திகையாம லவர்க்குச் சொல்லு முறைபோலே
கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும்
வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச்
சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம்
ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து
முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப்
பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி
விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி
திருந்து புகழ்கிளைபோல் சிலவீட் டமுதருந்தி
பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி
மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே
வெற்றியி டம்மானம் விருதுக் கொடிகள்கட்டிப் 300
புத்திர ரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லிப்
பாடித்தீர் வைதீர்த்துப் பரசோ தனைபார்த்து
ஆடித்தீர் வைதீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு
நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரைச்
செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே
செந்தா மரையா ளுடனே சிறப்பிருந்து
ஆனை கன்றீணி அதினா லுலகமெல்லாம்
தானாக நீயும் தலைவ னெனச்சமைந்து
முரணிக் கலியழிய முச்சுடரு மொன்றாவாய்த்
தரணி யீரேழும் தடதடெனத் தானசைத்து
நீயதின்மே லாளும் நிண்ணயத்தைக் கேள்மகனே
தங்க முடிசூடிச் சான்றோர்க்கு நால்வரமும்
அங்கவர்க்குத் தானருளி அழகு மிகக்கொடுத்து
நல்லதர்ம மாக நாடும் புவியதிலே
அல்லல்வினை யற்று அவனியதை நீயாள்வாய்
அப்போ நீயரசு ஆளுகின்ற நாளையிலே
செப்பொண்ணாச் செல்வம் சிறப்புமிக வுண்டாகும்
பூமடந்தை வீட்டில் புகுந்து கொலுவிருந்து
தாமுனிந்து நீயும் தரணிதனில் வந்தவுடன் 320
நான்வந்து உன்னை நாடி மிகஎடுத்துத்
தான்மகிழச் செல்வத் தலைவ னுனையாக்கிச்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
எல்லைக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
தீர்த்து உனக்குத் திருவம்ப லமருளித்
தோற்றும் பதிகள் துலங்கும்வெகு ரத்தினமாய்
எல்லா மருளி ஏழுமாதர் தாஞ்சூழ
வல்லோனாய் நீயும் வாழுவா யென்மகனே
மலங்காதே யென்மகனே மாதவங்கள் பெற்றவனே
கலங்காதே யென்மகனே கண்ணேயென் கற்பகமே
என்று மகனுக்கு ஈதுரைக்கு மிவ்வளவும்
மன்று குலுங்காது வாரி யலுங்காது
மேகங் குடைநிழற்ற மேவலர்கள் போற்றிநிற்க
யோக முனிமார் ஓதித் தமிழ்கூற
ஈசர் மகிழ்ந்து இரத்தின மதிலிருக்க
வாசவனுந் தேவர்களும் வாய்பொற்றித் தாழ்ந்துநிற்க
இப்படியே சங்கம் எல்லா மகிழ்ந்துநிற்க
அப்படியே விஞ்சை யருளினா ராதியுமே
விஞ்சையும் பெற்று வைந்தர் விரைவுடன் தகப்பன் பாதம்
அஞ்சையும் புணர்ந்த சோதி அரனையும் வணங்கிப் போற்றி 340
நெஞ்சையு மொன்றுள் ளாக்கி நிர்மலத் தாயைப் போற்றி
கொஞ்சையுங் குணத்தி னாதன் கூறுவார் குருவைப் பார்த்து
என்னையாட் கொண்ட நாதா எங்குமாய் நிறைந்த நீதா
உன்னையான் கண்டு போற்ற உன்னருள் கிருபை தந்தாய்
இன்னமுங் கலியில் போய்நான் இருந்திந்த முறைகள் செய்தால்
என்னையாட் கொண்டு ரத்தினக் கிரீட மெப்போ தீவீரோ
கிரீட மெப்போ தீவிரென் றெனக் கேட்ட மைந்தா
அரிவிரி கொண்டே சூடி அணியிடை மாரைத் தோய்ந்து
தரிவிதி யான போதும் தாமரைக் கைநிகழ்ந்த போதும்
பரிவலம் வந்த போதும் பார்மக ளடைந்தா யன்றே
உன்விதி யதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால்
என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி
மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும்
பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே
பூமக ளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கு மேலே
நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கித்
தானுனைத் தங்க மானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி
வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருள்வே னென்றார்
மகனே யுனக்கு மகாசெல்வ மாகிவரும்
சுகமேபோ யிரெனவே சொல்லி யனுப்பலுற்றார் 360
அனுப்பத் திருமால் அமைமக வேதுரைக்கும்
மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும்
பாவி வெறுநீசன் பண்ணிவைத்த பாட்டையெல்லாம்
ஆவியறிந் தென்னுடைய அங்கமெல்லாஞ் சோருதையா
என்று வைகுண்டர் இசையத் திருமாலும்
அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே
இந்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும்
மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்
செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே
மைதான மான வாக்குநமக் காச்சுதெனக்
கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க
மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு
அன்பான் சீமை அரசாள நாளாச்சு
தன்பா லடைய சரியாச்சு தென்மகனே
மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில்
கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே
முட்டப்பதியிலிருந்து அய்யா தோப்புப்பதி திரும்புதல்
என்று விடையருள ஏற்ற திருமாலும்
அன்றுதிரு மாலும் அன்பாய் விடைவேண்டி
அலைவாய்க் கரையில் ஆதி வருகுமுன்னே
நிலையான சான்றோர் நிரம்பவந்து கூடினரே 380
கண்டந்தச் சான்றோரைக் கரியமா லுமகிழ்ந்து
நன்றென்று சொல்லி நாராயணர் கூட்டிப்
பண்டிருந்த நல்லப் பதியில்வந்து சேர்ந்தனரே
கண்டெந்தப் பேரும் கனபிரிய மாய்மகிழ்ந்து
தாமோ தரனார் தலத்தில் மிகச்சேர்ந்து
நாமோ முனிகூட நாடி மிகஇருந்தார்
இருந்து மிகப்பாலும் ஏற்றநல்ல பச்சரிசி
திருந்து சிறுமணியும் தேங்காய்ப்பூ தன்னுடனே
கொல்ல மிளகு கூண்டப் பொடியுடனே
நல்லாக இவ்வகைகள் நாடியொரு நேரமதாய்
காவி மிகப்புரிந்து கனத்திருத்தி ராட்சமிட்டுத்
தாவமுடன் மாத்திரைக்கோல் தானிதுவோ டேயிருந்தார்
கொஞ்சநாள் கழித்துக் கூண்டதிவ சம்பார்த்துப்
பஞ்சகரு ணாதிகளைப் பண்பாகத் தானிறுத்திக்
கந்தை மிகச்சூடிக் காவித்தொட்டில் மீதிருந்து
விந்தை யுடனுகத்து விவரிப்பெல் லாமெடுத்துக்
கூறினா ரந்தக் கூண்டரியக் காரணத்தை
பேறிருக்கும் நல்லோர் பெரிய பெருமானும்
நாடழியப் போறதுவும் நன்னாடு தோன்றுவதும்
பாடழிய நீசன் படப்போற செய்தியதும் 400
நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும்
வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும்
சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து
எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான்
நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார்
சடத்தமுள்ள நீசச் சண்டாளப் பாவியெல்லாம்
காசு மிகவேண்டக் கபடுசெய்கி றானெனவே
பேசி யிவனும் பிதற்றுகிறா னென்றுசொல்லி
நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம்
சிக்ப்பா னதுவால் தெய்வகுலச் சான்றோர்கள்
சான்றோர் பக்தி
கூடிக் குவித்து குணமாக வேகூடித்
தேடிவைத்த பண்டம் சுவாமி தனக்கெனவே
நம்முடைய சஞ்சலங்கள் நாடும்பிணி தீர்த்தவர்க்குத்
தம்முடைய பாலு தாங்கொடுக்க வேணுமென்று
பசுவைக் கொடுப்பார் பாலாடு தான்கொடுப்பார்
கசுவிரக்க மாகக் காசு பணங்கொடுப்பார்
கஸ்தி மிகத்தீர்த்த காயாம்பு வண்ணரென்று
வஸ்திரங் கொடுப்பார் வழங்கு மிலைகொடுப்பார்
நெல்லு சிறுமணிகள் நெய்த்தேங் காய்கனிகள்
நல்லமைப்புச் சான்றோர் நாடி மிகக்கொடுத்தார் 420
கொடுக்க அன்பரெல்லாம் குணமாய் மிகவேண்டி
அடுக்க அவரருகில் அன்பாக நின்வரில்
பணிவிடைகள் செய்வோர்க்குப் பரிந்து மிகஈந்தார்
மணியாம் பரனும் மகிழ்ந்துபா லேற்றனரே
ஏற்று உகத்துக்கு உகத்தீர்ப் பும்புரிந்து
சாற்று மொழிகூறித் தானிருக்கு மப்பொழுது
மாயத் திருமால் மால்வேச மேயெடுத்துத்
தேயமதில் நம்முடைய தெய்வகுல மாதர்களை
வருவிக்க வென்று மாஞால வித்தையினால்
உருவிக்க வென்று உலகநரு னானதிலே
தாக்கி உடலுள் தமனிய மாய்ப்பொதிந்து
நோக்கு முறைகாண்டம் நேர்மை மொழிமொழிந்து
பெண்ணாண் வரைக்கும் பெருங்கிழவி தான்வரைக்கும்
கண்ணா னமதலை கைக்குழந்தை முதலாய்ப்
பாட்டு வித்தேசம் படிப்புவித் தேசமுதல்
ஆட்டுவித் தேசம் ஆட்டி மிகவருத்தி
முன்னமைத்த பெண்ணை எல்லா மிகப்பார்த்துச்
சொன்ன முறைபோல் சிணம்செய்ய லாமெனவே
இட்டா ரொருசூட்சம் ஈசர்முத லெல்லோரும்
மட்டாரும் சூட்சம் வையகத்தி லேயாவி 440
சாதிபதி னெட்டும் ஆராட்டுப் பார்த்தனரே
ஆதிச்சா திதனிலே அமைப்புபோ லுள்ளவர்கள்
தானிறைந் தாடித் தண்மை மிகக்கூறி
வானிறைச் சோதி மயமாய்க் குதித்தனரே
இப்படியே சான்றோரில் ஏற்றபெண் ணாண்வரையும்
அப்படியே நன்றாய் ஆராதனை யாகி
ஊருக்கூ ரேயிருந்து உற்ற நருட்களெல்லாம்
பாருகங் காணப் பண்பாகக் கொண்டாடி
உமைபார் வதியெனவும் உற்றமுத் தாரெனவும்
இமையோர் புகழும் இலட்சுமி நானெனவும்
சத்திகன்னி மாதரென்றும் தார்குழலார் தோழியென்றும்
பத்தியுள்ள நல்ல பரமே சொரியெனவும்
மண்டைக்காட் டாளெனவும் மாதுநல்லாள் தோழியென்றும்
பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கிய வாட்டியென்றும்
வள்ளிதெய் வானை வாய்த்தபக வதியெனவும்
பூம டந்தையென்றும் பெரிய பிராட்டியென்றும்
பார்ம டந்தையென்றும் பத்திரமா காளியென்றும்
நாகக் கன்னியென்றும் நல்லதெய்வக் கன்னியென்றும்
பாகைக் கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்றும்
இப்படியே நல்ல ஏந்திழைமா ரெல்லோரும் 460
அப்படியே நல்ல அவனிப்பெண் ணார்பேரில்
ஆரா தனையாய் அங்கங்கு தான்கூடி
சீராகக் கூடிச் சேர்ந்துவரு வார்தினமே
ஆண்பிள்ளை கள்பேரில் ஆனசிவன் மாலெனவும்
நான்பிரமா வென்றும் நல்ல அனுமனென்றும்
காலனென்றும் ஏமனென்றும் கடியபெலக் கந்தனென்றும்
மாலவனின் மக்களென்றும் மாமுனிமார் நாங்களென்றும்
தேவ ரிஷியெனவும் சிமிள்கருட சேவனென்றும்
தாவமுள்ள நல்ல சன்னாசி மார்களென்றும்
ஆரா தனையாய் அவர்கள் மிகஆடிச்
சீராகக் காண்டம் செப்பிமிகப் படிப்பார்
வருவார் தினமே மாயோனிட மதிலே
கருவா யுதித்த காண்டம் மிகப்படிப்பார்
இப்படியே பெண்ணாணும் யாம முறைப்படியே
அப்படியே வந்து ஆடி மிகப்படிக்க
நல்லநா ராயணரும் நாட்ட மிகஅறிந்து
வல்லப் பொருளும் மனது ளறிந்திருப்பார்
அறிந்து சிலநாள் அகமகிழ்ந்து தான்பார்த்துச்
செறிந்த குணநாதன் தேதி கணக்கதிலே
இகனை நடத்த எண்ணமுற்றி ருக்கையிலே 480
உவமை பலசொல்லி உற்றதெய்வக் கன்னியர்கள்
அனைவோ ரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும்
சுனையாடப் போனதுவும் தூயோ னடத்தினதும்
பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும்
வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து
உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்த மானமெல்லாம்
சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார்
அப்போ திருமால் அடக்கி மிகமனதில்
செப்புவ தெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார்
உமைமண்டைக் காட்டாள் உற்ற பகவதியாள்
இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள்
சீதை மடந்தை சேயிழைமா ரெல்லோரும்
மாதவனை நோக்கி வளங்கூறி யேபடிப்பார்
பாவிக் கலியன் பழிநீசன் தோன்றினதால்
மேவிக் கலியில் மிகமூழ்கி மாயமதால்
மாயக் கலியை வதைக்குமந்த நாளையிலே
தேசமதி லெங்களையும் திருக்கல்யாண முகித்து
எங்களுட நாயகனார் இங்குவரு வோமெனவும்
எங்களையு மிங்கே இக்கோல மாய்வரவே
சொல்லி யயைச்ச சுவாமிநீர் வந்தீரோ 500
பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ
என்று மடவார் இப்படி யேயிசையப்
பண்டு முறைபோல் பிரப்பிரம மாயிருக்கும்
எண்ணித் திருமால் இருதயத்தி லேயடக்கி
மண்ணி லுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க
மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப் பார்த்துநிற்கப்
பூலோக மெல்லாம் புதுமையெனப் பார்த்துநிற்க
அப்போது மாயாதி ஆகமத் தின்படியே
செப்போடு வொத்த தேசத் திருப்பதியில்
வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து
நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே
நடத்தாம லிப்போ ஞாயமீறி நீங்கள்
அடத்தமாய்ச் செய்வதென்ன எல்லோருஞ் சொல்லுமென்றார்
உடனே யெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து
திடமே குளறிச் சொல்லவா யில்லாமல்
புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம்
சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து
நின்ற நிலையை நெடியதிரு மாலறிந்து
குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து
மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும் 520
இன்றுமுதல் லக்குவரை இருங்கோ பாராவதிலே
வைத்தாரே நல்ல வடவா முகமதிலே
செய்த்தான் விதியெனவே தேவரெல்லா மிருந்தார்
அந்த அவதாரம் அதிக முடனடத்திச்
சந்தான மான சப்தகன்னி மாரையினி
மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும்
தாமதங்க ளின்றி சந்ததிகள் தாங்கொடுத்து
இராச்சிய முங்கொடுத்து ஏற்றபவி சுங்கொடுத்(து)
இராச்சிய மாளச் செய்யவே ணுமெனவே
நினைத்துத் திருமால் நின்றிதயத் தேயடக்கித்
தனத்தனங்கள் பாடித் தந்தனங்கள் போடலுற்றார்
தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்
சத்தகன்னிமார் வருகை
முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால்
சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில்
மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில்
வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப்
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே 540
மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே
முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று
வேடம திட்டார் வீரநா ராயணராய்
நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச்
சீரான காவிச் சீலை மிகப்புரிந்து
ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும்
துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து
கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே
மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து
மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து
ஆகமத்தி லுள்ள அறிவுஞா னம்பேசிப்
பாகமதில் நிற்கும் பாலதியச் சான்றோரைப்
பார்த்து அருகழைத்துப் பச்சைமா லேதுரைப்பார்
நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே 560
உங்களுட தாய்மார் உற்றகன்னி மார்களைநான்
எங்க ளுடவிதியால் இப்போமணஞ் சூட்டுதற்கு
விதிவந் திருக்குதுகாண் வேளையி தானதினால்
பெரியவுங்கள் தாய்மாரைப் பேயழைத்து வாருமென்றார்
நால்திசையும் நீங்கள் நடந்துமிக சத்தமிட்டு
மாலதியப் பெண்ணை வரவழைத்து வாருமென்றார்
சீரான நூல்முறைக்கு தேனெயெங்கள் தாய்மாரே
நாரா யணர்க்கு நல்லமணஞ் சூட்டுதற்கு
நாளான நாளிதுவாம் நன்னுதலே தாய்மாரே
தாழாமல் வாருமென்று சத்தமிட் டழையுமென்றார்
இப்படியே சொல்லி ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
அப்படியே சொல்லி அழைத்தாரே சத்தமிட்டுப்
பாலருட சத்தம் பாவையர்கள் கேட்டுமிகச்
சீல முடனெழுந்து தெய்வமட மாதர்வந்தார்
வந்துமிக நாரணரை வாழ்த்தி மிகவணங்கி
சந்துஷ்டி யாகத் தங்கள்தங்கள் வாக்கில்நின்று
முன்முறைகள் சொல்லி மொழிந்துமிகப் படித்தார்
தென்பதிக ளான தெச்சணா பூமியிலே
நான்வந் திருந்து நானிலத் துள்ளவர்க்குத்
தீனம் பலதீர்த்து ஸ்ரீபண்டா ரமெனவே 580
நாம மிகக்கூறி நாட்டிலிருப் போமெனவே
சொல்லி யெங்கள்தம்மைத் தொல்புவியில் வாருமென்று
நல்லவராய்ச் சான்றோருள் நாடிப் பிறவிசெய்தீர்
பிறந்து வளர்ந்து என்பேரு கேட்டவுடன்
மறந்திடா வண்ணம் வாருங்கோ என்றுசொல்லிப்
பிறவிசெய்த நாயகரே பெரியவரே வந்தீரோ
கங்கை திரட்டி கறைகண்டர் தன்சிரசில்
பெண்க ளேழுபேரும் பிரியமுடன் வாழ்ந்திருந்து
எங்கள்கற் பெல்லாம் ஈடழிய வேதுணிந்து
சங்கை யழித்த தலைவனேநீர் வந்தீரோ
எங்களுட பிள்ளை ஏழு மினவழியும்
அங்கங் குறையாமல் அவ்வழிகள் தாமுழுதும்
கொத்தோ டேசேர்த்துக் குடும்பத்தோ டேயடக்கிப்
பெற்றோர்க்கு எல்லாம் பெருவாழ்வு தான்வகுத்து
எங்களையுஞ் சேர்த்து இரட்சிய முமருளி
மங்களமாய் வாழ்வோமென்ற மாதவரே வந்தீரோ
இனியிப்போ தேழ்வரையும் ஏற்ற மணம்புரிந்து
வனிதவழு மாயவரே வைத்தாளு மென்றுசொல்லிப்
பாடியே மாமடவார் பாதம் பணிந்துநிற்க
நாடியே யெம்பெருமாள் நல்லதா கட்டெனவே 600
அருகில் மிகநிற்கும் அன்பான சான்றோரை
வருக அழைத்து வார்த்தைமிகக் கூறலுற்றார்
எந்தனக்கு முன்னமைத்த இளங்குழலா ரேழ்பேரும்
வந்தன ரேயிவர்கள் வளப்பமென்ன சொல்லுமென்றார்
கன்னிதானோ யிவர்கள் கள்ளிகளோ பாருமென்று
உன்னி மனதுள் உபாயமாய்த் தானுரைத்தார்
நடையுடைகள் பேச்சு நாரியர்கள் தங்குணங்கள்
மடமயிலின் சாடை மாதிரியைப் பாருமென்றார்
அப்போது சான்றோர் எல்லோரு மேமகிழ்ந்து
இப்போது எங்களுக்கு ஏதுந் தெரியாது
படைத்தவர்க் கேதெரியும் பாவையரின் தங்குணங்கள்
செடத்தமெல்லா மெங்களுக்குத் தெரியா தெனவுரைத்தார்
மாயவர் தான்பார்த்து மாதுகளைத் தாநோக்கித்
தூயவர் தான்வார்த்தைச் சொல்லுவார் பெண்களுடன்
நானெப்போ துங்களையும் நடுவனத்தில் கண்டதுதான்
தானெப்போ வந்தேன் தார்குழலே நானறியேன்
காட்டிலே வந்ததெப்போ கற்பை யழித்ததெப்போ
பேட்டிசெய்து பிள்ளை பெற்றதெப்போ நானறியேன்
ஒன்றுந் தெரியாது உங்களைநான் கண்டதில்லை
பெண்டுகளே யிப்பேச்சுப் பேசாதே போய்விடுங்கோ 620
மாயமாய் நீங்கள் மருட்டி விழியாதுங்கோ
பாயமா யுங்கள் பகட்டி லடங்கேனான்
பண்டாரத் தோடே பழிமொழிகள் பேசாதே
அண்டாது உங்கள்மொழி அகலநின்று போய்விடுங்கோ
என்று அடாத்தியமாய் இவர்தான் மிகமொழிந்தார்
நின்று நினைத்து நேரிழைமா ரெல்லோரும்
அடந்து மடவார் ஆகத்திரண் டேகூடித்
தொடர்ந்து நெருங்கித் தொட்டுப் பிடிக்கவென்று
தார்குழலில் மூத்த சாத்திரத்தா ளேதுரைப்பாள்
வாரணியுங் கூந்தல் மடவா ரென்தங்கையரே
கள்ளக் கவுலாய்க் கண்மாயஞ் செய்துஅன்று
மெள்ள நெகிழ்ந்த மெக்குவாய்த் தாதனையம்
சென்று பிடித்துச் செய்தியென்ன கேளுமென்று
தன்றுபுகழ் சாத்திரத்தாள் தங்கையரைக் கண்காட்ட
மடவார்க் ளெல்லாம் மாகோப மாய்வெகுண்டு
அடவாக மாயவரை அடர்ந்து பிடிக்கலுற்றார்
தேன்மொழி மாரே யென்றன் சித்திரத் தங்கை மாரே
கான்வன மதிலே நம்மைக் கைகலந் திழிவு செய்த
மான்முனி தன்னைக் கண்டோம் வார்த்தையில் குழைக்கார் சோற்றை
வான்முனி தன்னை நீங்கள் வளையுங்கோ சிணமே யென்றாள் 640
செப்பிட மூத்த கன்னி தேவிய ராறு பேரும்
அப்படி ஒன்று போலே அவர்வளைந் தாதி தன்னை
முப்படி யெங்கள் தம்மை மொய்வன மதிலே வந்து
கற்பினை இகழச் செய்தக் கள்வரே யென்று சூழ்ந்தார்
சூழ்ந்தே நமது துகிலைமுன்னம் சுழியஞ் செய்த மாமுனியைப்
பூந்தே நெருங்கித் துகிலுரியப் பிடித்தே யிழுத்து நாமீன்ற
சாந்தோர் மக்க ளேழ்வரையும் தரவே யென்ன செய்தியென்று
ஓர்ந்தே கேட்போ மென்றுசொல்லி ஒன்றுபோலே வளைய லுற்றார்
வளைந்த போது மாயவரும் மனது ளுபாய மொன்றெடுத்து
இளந்த மொழிகள் சொன்னாக்கால் இளப்ப மிதுவே யாகுமென்று
குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும்
நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார்
தரு (பல்லவி)
பிள்ளையை நாம்தா றோம்-நீங்கள்பெற்ற
பிள்ளையை நாம்தா றோம்
அனுபல்லவி
பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே
கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை)
சரணம்
காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும்
லோட்டுகள் பார்த்துநீ ருடுகலை தோற்றதும்
மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும்
பூட்டுகள் சொல்லாமல் பெண்ணேநீர் பெற்றிடும் (பிள்ளை) 660
அருவன மீதினி லமிர்தவாழ் கெங்கையில்
சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில்
வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு
கருவது கொண்டுநீர் காட்டினி லீன்றிடும் (பிள்ளை)
உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல்
முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான்
இறுவான மேலோக எழுபுவி உயிரெனப்
பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்றப் (பிள்ளை)
மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம்
தொடவும்நீர் ஞாய மில்லை தூரவே யகல நின்று
அடவதில் பெற்ற பிள்ளைக்(கு) அடையாள மறியச் சொன்னால்
உடனிப்போ மதலை தந்து உலகமு மருள்வோ மென்றார்
அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான
மெய்யனே வொப்பில் லாத வேதநன் மணியே கேள்மோ
வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவே யாகிக்
கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார்
தரு(பல்லவி)
மதலையைத் தாருமையா-நாங்கள் பெற்ற
மதலையைத் தாருமையா
அனுபல்லவி
மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது
குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க (மதலை) 680
சரணம்
பெற்றநா ளின்றுவரைப் பிள்ளைதனைக் காணாமலே
மெத்தம னதுநொந்து மெய்யந்த ளருதையோ (மதலை)
வாலைப்ப ருவத்திலே வனத்தில்ம யக்கமிட்டுக்
கோலம ழித்தவேத கோலகால மாமுனியே (மதலை)
பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரைக்
காலதி ழகாமலே காட்டில்த வசிருந்தோம் (மதலை)
ஊணுஉ றக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை
மூணுநாலு காலம்வரை மூண்டத்த வசிருந்தோம் (மதலை)
சிங்கங்க ரடிபுலி திரியும்வ னத்தினூடே
நங்கைமா ரேழ்பேரும் நாடித்த வசிருந்தோம் (மதலை)
இத்தனைநா ளுந்தவ மிருந்துபின் னாங்களெல்லாம்
பெற்றநல் மனுவயிற்றில் பிறந்துவு தித்துவந்தோம் (மதலை)
முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சி றப்புமென்ன
மன்னுகந்த மாதுமையை மறந்துக லியில்வந்தோம் (மதலை)
ஆண்டச்சி றப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன
காண்டம்நிறை வேறுதற்கோ கலியிலு தித்துவந்தோம் (மதலை)
உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன
கொண்டிருந்த விதிப்பயனோ கூறுகலி மீதில்வந்தோம் (மதலை)
பந்தடிக்கும் வீரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன
முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மிதில்வந்தோம் (மதலை) 700
கன்னிய ழியுமன்னே காதல்தனைப் பெற்றதினால்
நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகந டந்துவிட்டோம் (மதலை)
கண்டுபிள்ளைத் தானெடுத்துக் கமலமுகத் தோடணைத்துப்
பெண்டேழும் பால்கொடாமல் பெருகவ னத்தில்சென்றோம் (மதலை)
பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொ ரியுதையோ
மாலழகா எங்களுட மனக்கவ லையைத்தீர்க்க (மதலை)
வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும்
கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை)
அங்கமெல்லாஞ் சோருதையோ ஆவிமெத்த வாடுதையோ
தங்கமணி நாங்கள்பெற்ற தவமணியை எங்கள்கையில் (மதலை)
மங்காத தெய்வகுல மக்களேழு மேழ்வழியும்
சிங்கார மாகஇப்போ சீக்கிரம்நீர் தாருமையா (மதலை)
மதலையுந் தந்து எங்கள் மனச்சட வெல்லா மாற்றிக்
குதலைகள் தமக்கு இந்தக் குருமுடி சூட்டித் தர்மப்
பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்ன ராக
நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீ ரென்றார்
தருவீ ரெனவுரைக்கு மடமாதே நீங்கள்
சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும் 720
பெருகியே வாழ்ந்திருப்பா ரங்கே சென்று
பெற்றிடத்தைப் பார்க்குகையி லுண்டு மங்கே
மருவி யென்னைக் கேளாதே காட்டினூடே
வாழ்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னோம்
சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாம்
சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே
செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே
சீமானே நாமாது புரக்கு மாலே
பல்லுயிரு மிகப்படைத்தப் பாக்கிய வானே
பருவனத்தி லெங்களைநீர் பற்றி வந்து
தொல்லைவினை செய்துநாம் சுமந்து பெற்ற
சுத்தகுல மானதெய்வச் சான்றோர் தம்மை
இல்லிடத்தி லிப்போது தருகி லானால்
இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே
சந்தியி லேற்றுவோ மென்ற மாதேகேளு
தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ
பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும்
பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச
முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ
உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்க லாகும்
சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம்
தேன்மொழியே மறுவிடம்போய்த் தேடு வீரே
தேடுவீ ரெனமொழிந்த இந்திர ஜாலம்
தெய்வமட மாதரொடு செலுத்த வேண்டாம்
நாடுபதி னாலறியு முமது கள்ள
ஞாயமது எங்களொடு நவில வேண்டாம்
வீடுவழி தோறும்விருந் துண்டு முன்னே
மெல்லிமட வார்சிலரைக் கொள்ளை கொண்டு
பாடுபட்ட பாட்டையினி நாங்கள் சொன்னால்
பாரிலுள்ளோ ருமைப்பேசிப் பழிப்பர் காணும்
பழிப்ப ரெனச்சொன்ன இளம்பாவை மாரே
பாரிலுள்ளோ ரறிவார்கள் பச்சை மாலின்
களிப்பதுவுங் காண்டமுறை நூல்கள் தோறும்
காரணத்தைச் சொல்வார்கள் கருதிக் கேளு
சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள் ளாகும்
தோகையரே யிதுஎனக்குச் சொந்த வித்தை
குளிப்பதுவில் சுனையாடி மதலை யீன்றக்
கோலமதைச் சொன்னாக்கால் குறைவ தாமே
குறைவதா மெனச்சொன்னக் குறவா கேளும்
கோவேங் கிரிவாழுங் குலமா மாதர்
மறைமுதல்வ னானசிவ னார்க்கு நாங்கள்
வந்துசுனை யாடிகெங்கைத் திரட்டி யேகத் 740
துறையறியாக் களவாண்டுத் தேய்ந்த கள்வா
தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம்
இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும்
ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார்
கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள்
களவாண்டீர் கயிலையதி லீசர் முன்பில்
வெள்ளமது திரளாமல் கள்ளத் தாலே
வெம்மருண்டு நின்றவித வெட்கங் கண்டு
வள்ளல்சிவ னாரறிந்துக் கலியில் சான்றோர்
மேல்வழியில் பிறக்கவென்று சபித்தார் முன்னே
உள்ளதெல்லாஞ் சொல்லிடுவே னோடிப் போங்கோ
ஓகோகோ வெனச்சொல்லி யுறுக்கி னாரே
உறுக்கிநீ ருரைத்தசுணை யுமக்கே யல்லால்
ஓவியங்க ளேழ்பேர்க்கு முண்டோ சொல்லும்
இறுக்கிவைத்த நீரிளகச் சேய்த கள்ளம்
ஈசர்முத லெல்லோருஞ் சொல்லு வார்கள்
சிறுக்குமிடை மாதருட வீட்டில் வெண்ணெய்த்
திருடியுண்டக் கள்வரெனச் சொல்வா ரும்மை
பொறுக்கஇனி மாட்டோங்கா ணுமது ஞாயம்
புகன்றிடுவோ மினியண்டம் பொடியத் தானே
பிட்டுக்காய் மண்சுமந்து வைகை தன்னில்
பிரம்படிகள் பட்டதுவும் போதா தென்றோ
கெட்டுமிகப் பட்டீரே இடைச்சி கையால்
கேள்வியில்லா முப்பரத்தில் கிழவன் போலக்
குறுங்கண்ணி போட்டிழுத்துக் குனிய வைத்தப்
பொட்டதுவுங் குலைத்திடுவோம் நாங்கள் பெற்றப்
பிள்ளைதனை தந்துபுவி யான வைப்பீர்
ஆடெடுத்தக் கள்வரல்லோ வுமக்குச் சூடு
அணுவளவுந் தோற்றாம லலைந்து எந்த
நாடடுத்த இடமெல்லாம் வேசம் போட்டு
நாணமதொன் றில்லாமல் நாரி மார்தம்
வீடடுத்த மனைதோறு மிரட்டிக் கொஞ்சி
வேசியொடு கூடிவிளை யாடுங் கள்ளக்
கூடெடுத்த மறையல்லோ எங்கள் தம்மைக்
குவலயத்தில் கள்ளியெனக் கூறி னீரே
இன்னமுண்டு வுமக்குவெகு பங்கந் தானும்
எடுத்துரைத்தா லிப்போது இளப்ப மாகும்
முன்னமைத்தப் பாலரையு மினத்திற் சேர்க்கை
முழுவதையுந் தந்துபுவி யாள வைப்பீர் 760
இன்னிமிப்போ தாராம லிருந்தீ ரானால்
ஈரேழு யுகமறிய இழுத்து உம்மை
அன்னமது அருந்தாம லிழுத்துக் கொள்வோம்
அதுவறிந்து பாலரைத் தந்தாளு வீரே
பாலரைத்தந் தாளுவீ ரெனமொழிந்த பாவைமாரே
பகற்பொழுது கழித்துவெள்ளி யுதிக்கும் நாளை
காலமேநீ ரெல்லோரும் வந்தீ ரானால்
கதிரவனும் போயடைந்து கங்கு லாகும்
சீலமுடன் தென்றலுக்கு மழைக்கும் நானோர்
சீட்டெழுதித் தேவரையும் வருத்தி யிங்கே
கோலமண முங்களைநான் புரிந்து கொள்வேன்
குடிலதுக்குப் பேயமுது குடித்து வாரும்
திருக்கல்யாணம்
வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன்
வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக
ஊருமிக அறிவதற்கு ஓலை தானும்
உடனெழுதி அழைச்சிடவே வந்தார் வானோர்
பாருடனே சங்கமது திரண்டு கூடிப்
பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க
சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டு
தினகரனு முதித்துவெள்ளி தோன்றிற் றன்றே
தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது
துதிமுகனும் நான்முகனுந் தொல்வி மாதும்
கூன்றிருஷி தேவரிஷி வேத மானக்
குணயிருஷி கிணயிருஷி குலமா மாது
தான்றுசர சோதிபக வதிமா மாது
சதாகோடி தேவரம்பை சங்க மாக
மன்றுபுகழ் நாரணர்க்குந் தெய்வ கன்னி
மடவார்க்கு முகூர்த்தமென வந்தா ரங்கே
வானமதில் டம்மான முழக்கத் தேவர்
மலர்மாரி சலமாரி வானோர் தூவ
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற
நாரிமார் குரவையிட நமனு மாற
தானமுறை மாமடவார் சமனங் கூறத்
தரணிதனில் நாரணர்க்குந் தைய லான
மேனமுகில் மாதருக்கு மணமா மென்று
மேலோகப் பந்தலது விண்ணோ ரிட்டார்
பந்தலுக்கு நமனாதி கால தாகப்
பக்கம்பதி னைந்தும்வளை பரப்ப தாகச்
சந்தமுடன் மேற்கட்டி மறைய தாகச்
சாருமேல் மேய்ந்ததுவே சமய மாக
அந்தமுறை சூரியனும் விளக்க தாக
அலங்கிருதம் வானக்கா யதுவே யாகச்
சொந்தமுள்ள சிவமதுவே பீட மாகத்
தேவரெல்லாஞ் செய்துபந்தல் சிறப்பித் தாரே
சிறப்பித்தோ மென்றுமகா தேவ ரெல்லாம்
திருமாலி னடிபணிந்து சொல்வா ரப்போ
பிறப்பித்தப் பெம்மானே யெவர்க்கு மாய்ந்துப்
பேணியமு தளித்துவுயி ரனைத்துங் காக்கும்
உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன்
உதவியினால் பந்தலது விதானஞ் செய்தோம்
நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும்
நிசவேலை யின்னதென நிகழ்த்து வீரே 20
தேவருரை யதனைமிகக் கேட்டு மாயன்
திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார்
மூவருரை மாறம லெனக்கு முன்னே
மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ் செய்ய
நாவதுரை வருணனொடு வாயு தானும்
நளினமலர் தூவியது குளிர வீச
தேவருரை செய்துமிக நில்லு மென்று
தெய்வமட வார்வரவே சிந்தத் தாரே
சிந்தித்த வுடனே யுந்தத் தேன்மொழி மாத ரெல்லாம்
வந்தவ ரடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற
சந்ததி யேழு பேரும் தன்னுட கிளைக ளொக்கத்
தந்துநற் புவியை யாளத் தருவீரென் தலைவா என்றார்
தருவீரென மொழிந்தகுல மாதே பெண்ணே
தலைவருங்கள் மக்களையுந் தருக வுங்கள்
மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற
மனுவழியை யென்முன்னே வருகச் செய்தால்
தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு
தாறதுவுங் கொடுப்பதுவுங் சபையிற் பேசி
பெருகவுங்கள் தம்மை மணஞ் செய்துநீங்கள்
பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன்
புவியாள வைப்பேனென வுரைத்தீ ரெங்கள்
பொன்மானே கண்மணியே புரந்த மாலே
கவிஞோர்கள் போற்றுமதக் கன்றே தேனே
காயாம்பு மேனியரே கடவு ளாரே
இவிலோகக் கலியதிலே பிறந்த தாலே
இதுநாளும் வரையன்ன மீந்த பேர்கள்
செவியாலுன் பதமடைந்தா லவர்க ளேது
செய்வார்க ளெங்களொடு சேர்க்கை தானோ
சேர்க்கையுண்டோ எனமொழிந்த மானே பொன்னே
தேன்மொழியே யுங்களுக்குத் தெரியா வண்ணம்
வார்த்தையிது சொல்லாதே நமது வாழ்வும்
மக்களுட வாழ்வதுவு மொன்று போலே
மார்க்கமுடன் வைத்தரசு ஆள நானும்
மனமதிலே நினைத்திருக்கும் வளமை யாலே
கோர்கையிது அவர்கொடுக்கல் வாங்கல் தன்னை
கூறிமிகக் கேட்டுமணங் கூடு வேனே 40
மணங்கூடு னேனென வுரைக்க மாயன்
மனுவழியி லுதித்தகுலச் சான்றோ ரெல்லாம்
அணங்குஇன வழிபோலே யவர்கள் வந்து
ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்கக்
குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சிக்
கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால்
பணங்கள்மிகப் பொன்காசு ரெம்ப ரெம்பப்
பாவையர்க்குச் சீதனங்கள் பகரு வீரே
பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும்
பரிசமென்ன எங்களுக்குப் பண்பா யீவீர்
உகருமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம்
உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும்
தகருமோ நான்தருகுந் தங்கக் காசு
சதாகோடி யெண்ணமது தாணோ இல்லை
நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம்
நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமா யென்றார்
ஆண்டவரே யிப்பரிசந் தருவீ ரானால்
யாமடியா ராளுகின்ற வஸ்து வெல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடைமை யாடு மாடு
குருபரனே யாங்கள்வரை யுமக்குச் சொந்தம்
மீண்டடிமை முக்காலு முமக்கு நாங்கள்
விலையடிமை யானோங்காண் விரைய மாலே
பாண்டவரைக் காத்துரெட்சித் தாண்டாப் போலே
பாவையரு மக்களுமும் பக்கந் தானே
பக்கமது என்றவுடன் மாயன் தானும்
பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம்
ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம்
ஒன்றுபோ லிருந்துபுவி யாள்வோம் நாமும்
தக்கமதொன் றில்லையப்பா இந்த வார்த்தை
தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை
மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய
மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே
கைப்பிடித்துத் தாருமென வுரைத்தீ ரையா
கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே
மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ
மேதினிக ளறியஅவ தாரஞ் செய்தீர்
எப்படித்தா னாங்கள்கையைப் பிடித்து ஈய
இவ்வுலகி லவதார இகனை தானோ
எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி
ஏந்திழைமார் கைப்பிடித்தங் கீய லுற்றார் 60
திருமுகூர்த்தம்
ஈந்திடவே மாயவருந் தங்கத் தாலே
இரத்தின வொளி போல்வீசுந் தாலிதன்னை
மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ
மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ
ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ
ஈசர்முத லெல்லோரு மிருந்து வாழ
சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ
தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி
தாலிமிகத் தரிக்குகையில் மாத ரோடு
தமனியநா தன்மகிழ்ந்து தானே சொல்வார்
கேலிமிக வுரையாதீ ரெனக்கு இன்னம்
கெணிமடவா ரநேகமுண்டு மணங்கள் செய்ய
சோலியல்லோ ஆச்சுதென்று நினையா துங்கோ
தொல்புவியை யரசாள்வீர் நிசமே சொன்னோம்
மாலினுட சூட்சமகா கோடி யுண்டு
மனதுசடை யாமல்மிக வாழுவீரே
வாழுவீர் கூடுவிட்டுக் கூடு பாய்வேன்
மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன்
மாளுவேன் முழித்துப்பின் வருவே னுங்கள்
மனதலைந்து எனைஇகழ்ந்து மாளா துங்கோ
தோழிலே யிருந்துபல சூட்சஞ் செய்வேன்
தோகையரே நீங்களெல்லா மெனது பாயம்
நாளிலே யறிந்துமிகக் கண்டு கொள்ளும்
நாரணரி னடப்பிதுவே ஞாயஞ் சொன்னோம்
சொன்னமொழி தனைமறந்து நீங்க ளெல்லாம்
தூசணித்து எனைக்கபட மெண்ணா துங்கோ
என்னுடையத் தொழிலிதுவே உங்க ளோடு
இருந்துதர்ம முடிசூடி யாளு மட்டும்
பொன்னுடைய நாடதற்கு வானோர் தம்மைப்
போகவிடை கொடுக்கஅவர் போனா ரங்கே
கன்னிமட வார்கையைப் பிடித்துக் கொண்டு
கருணைபதித் தெருவீதி வருகின் றாரே
சிந்து
தெருவீதி நாம்வருவோம்-எந்தன்
தேவியரே கன்னிநாயகமே
மருவினிய கன்னியரே-பதி
வலங்கள்சுற்றி நாம்வருவோம்
கண்மணியே காரணரே-ஓகோ
காயாம்பு மேனியரே
மண்ணேழ ளந்தவரே-ஓகோ
மாயவரே பதிவலம்வருவோம் 80
பெண்ணரசே மாமயிலே-நமது
பொறுமைப்பதி வலம்வருவோம்
தண்ணமுள்ளத் தேவியரே-நமது
தருமபதி வலம்வருவோம்
ஆண்டமணி நாயகமே-உலகு
ஆண்டருளு மெங்கண்மணியே
காண்டம்நிறை வேற்றவந்த-எங்கள்
கணவனாரே நாம்வலம்வருவோம்
பொறுமைப்பதி வலம்வருவோம்-கலிப்
பொடியயாமம் போட்டிடுவோம்
தருமமது தழைக்கச்செய்வோம்-பதி
தானேவலம் நாம்வருவோம்
பொல்லாத வகையழித்து-சுவாமி
புதுப்பூமி தோணவைத்துக்
கல்லாதார் கருவறுத்து-சுவாமி
கதியபதி வலம்வருவோம்
நாடும்பதி தலங்கள்வாழும்-பெண்ணே
நம்முடைய இனங்கள்வாழும்
கேடுகலி கோடுஅறும்-பெண்ணே
கிளர்ந்தபதி வலம்வருவோம்
ஆகாத பேரையெல்லாம்-சுவாமி
அக்கினிக்கு விருந்தளித்து
வாகாகத் தர்மபதி-சுவாமி
வாழும்பதி வலம்வருவோம்
முன்குறோணி உதிரமதால்-பெண்ணே
உதித்துவந்தக் குலங்களெல்லாம்
தன்குணத்தால் மாண்டுபோக-பெண்ணே
தர்மபதி வலம்வருவோம்
மாற்றானொ ழியவேணும்-சுவாமி
மக்களெல்லாம் வாழவேணும்
காத்தோரைக் கைவிடாமல்-நாமள்
கருணைபதி வலம்வருவோம்
தெண்டமிறை பொய்களவு-பெண்ணே
செய்யும்வண்டக் குலங்களெல்லாம்
கொண்டகலி கூடமாண்டு-குரு
நாதர்பதி வலம்வருவோம்
வீணான கலியுகத்தை-சுவாமி
வெய்யோனுக் கமுதளித்துச்
சாணாரை வைத்தாள-சுவாமி
தர்மபதி வலம்வருவோம் 100
நாடும்பதி துலங்குதடி-பெண்ணே
நல்லசிலை குதிக்குதடி
ஆடுமாடு அருகுதடி-கர்த்தா
ஆவினங்கள் தோணுதடி
நல்லபதி துலங்கணுமே-சுவாமி
நாடுதர்ம மாகணுமே
பொல்லாப்பது ஒழியணுமே-சுவாமி
புத்தியொன்றாய்க் குவியணுமே
கோவில்தெரு துலங்கணுமே-நம்மள்
கோட்டைவெளி யாகணுமே
தேவருட நல்திருநாள்-பெண்ணே
தினமும்வந்து கூடணுமே
தங்கத்தொட்டில் தண்டாயமும்-சுவாமி
தாண்டும்பதி வீதிகளும்
சங்கமுடன் டம்மானமும்-சுவாமி
தலத்தில்வந்து தோணணுமே
கோட்டையிட்டுக் கொடியுங்கட்டி-பெண்ணே
கொத்தளமாய் மேடைசெய்து
நாட்டையெல்லாம் தான்கிலுக்கி-பெண்ணே
நமக்குப்பதி யேறணுமே
நம்பினோரைக் காக்கணுமே-சுவாமி
நாடுகட்டி யாளணுமே
அல்பலங்க ளேறணுமே-சுவாமி
அவதாரங்கள் நடத்தணுமே
சிங்காசன மேறணுமே-பெண்ணே
தீவட்டிகள் போடணுமே
கண்காட்சை காணணுமே-நானும்
கன்னியரைக் கைப்பிடித்தால்
பாக்கியங்கள் பெருகணுமே-சுவாமி
பாரிலுள்ளோர் காணுதற்கு
ஆக்கிநாங்கள் படைக்கணுமே-சுவாமி
அமுதருந்தி வாழணுமே
மக்கள்பெற்று வாழணுமே-பெண்ணே
வந்துவென்றான் கால்பிடித்து
ஒக்கல் நின்றோ ராடணுமே-பெண்ணே
உற்றபள்ளி மெத்தைசூழ
பால்பவிசு பெருகணுமே-சுவாமி
பஞ்சணையில் கொஞ்சணுமே
தூலருமை யறியாமலே-கலி
தொல்புவியு மயங்கணுமே 120
சமுசாரி யாகணுமே-பெண்ணே
தலையிற்சோறு சுமக்கணுமே
ஓவுதாரி யாகணுமே-பெண்ணே
உங்களைநா னடிக்கணுமே
அயலூரு போகணுமே-சுவாமி
அழைக்கநீரும் வரவேணுமே
கயல்விழிமா ரொருவர்க்கொரு-சுவாமி
கத்துதல்கள் கொள்ளணுமே
நானும்வந்து நிரத்தணுமே-பெண்ணே
நல்லமொழி சொல்லணுமே
தேனும்பாலும் போலநாமள்-பெண்ணே
தேசமதில் வாழணுமே
கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி
களிப்புச்சொல்லி யேசணுமே
பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி
பொல்லாப்பய லேசணுமே
காரணத்தை யறியாமலே-பெண்ணே
கலிப்பயல்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்
செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு
பொழுதுவந்தால் வருவோமையா
சோபனம்
சோபனமே சோபனமே-சுவாமி திருநடன சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே 140
துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே 144

மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும்
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்
கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி
பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி
நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று
சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை
எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்
முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென
நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்
செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்
குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே
சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே
வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து
சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது
நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்
வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்
கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்
விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்
பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்
குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம் 20
அய்யா திருநாள் இகனை நடத்துதல்
அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து
இப்போ திருநாள் இகனைநடத்த வென்று
நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்
தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்
இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்
பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை
ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத்
தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள்
பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும்
மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும்
கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும்
தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும்
வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும்
நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென
இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப்
பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக்
காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு
மாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்து
பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக்
கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே 40
மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன்
சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமென
வருவார் கிழமை மாதந் தவறாமல்
திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக்
கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப்
பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கிப்
பிச்சிமா லைதூக்கிப் பெருவாடை தான்தொளித்து
மிச்சம்பழந் தூக்கி மிகுவாடை தான்தொளித்து
சந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனே
சிந்தரெவ ரும்போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள்
வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன்
தத்திதத்தி யாகச் சதாகோடி யாய்க்குவித்துப்
பாலாயி தங்கள்வைத்துப் பாவித்து நற்பதிக்குள்
மாலா யிருந்து மகிழ அலங்கரிப்பார்
தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து
மருவினிய மாதர் மகாகுரவை மலமலென
டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்
மும்மான முளக்கம் போலே மிகமுழங்க
கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு
பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு 60
நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு
மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர
எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம்
கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு
கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்
மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து
உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு
மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து
பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்
சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்
கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து
மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக்
கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு
மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு
அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்
துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம்
காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு
நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே
ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்
நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத் 80
தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
பெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிட
சங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்ற
சிங்கமுக லெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்க
சான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்து
ஆன்றோர் பதியை அலங்கிருத மாகிவரக்
கன்னிமார் நாதன் கைக்குளொழுங் காய்வரவே
மின்னும் பதித்தெருவும் மிக்கஇந் தப்பவிசாய்
உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள்
குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்கு
பூமாரி பொன்மாரி பெரிய சலமாரி
நாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்க
எல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்று
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்தா ரம்மானை
நல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும்
செல்ல மறுநாள் திங்க ளுதித்தவுடன்
காட்சி நடத்திக் கரிய திருமாலும்
நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தார்
நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்து
மாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தா ரம்மானை 100
இப்படியே திருநாள் இகனை மிகநடத்தி
நற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடு
கூடி யிருந்து குலாவி யிருக்கையிலே
வேடிக்கை யாக விதியின் படியாலே
நல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும்
செல்லப்பட் டானதுவும் சிவந்ததங்கக் காறையதும்
இட்டுக் கலியாணம் இலட்சுமியைச் செய்யவென்று
மட்டநிக ரில்லா மாயன் மனதிலுற்றார்
தங்கத்தால் காறை தானதியப் பட்டதுவும்
அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்துத்
திருநா ளிகனைத் திடிமன் முழக்கமொடு
பெருமாளும் லட்சுமியைப் பேறாய் மணமுகித்துத்
தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்து
மருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார்
நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே
வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்
ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே
வைய மளந்த மாயத் திருமாலே
எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய
மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார் 120
அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்
இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு
நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்
வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்
அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ
இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்
வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக
வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்
ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்
நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து
காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்
நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க
எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி
சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத்
தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்
தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்
வைய மகிழ மனுப்போலு மிருந்தார் 140
வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்
ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்
அம்மை மார்களுக்கு மதலை ஈதல்
இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே
நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி
மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்
குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்
ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து
நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி
வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க
ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க
பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்
வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே
கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்
விண்ணாண மாக வீரநா ராயணரை
கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்
நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே
மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே 160
இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்
செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்
நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய
முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த
மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்
குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்
பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்
கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்
என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்
பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ
தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து
மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு
ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து
மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்
தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை
ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்
மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்
மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து
சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று
பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத் 180
துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்
வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்
பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்
சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்
கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து
அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்
பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்
சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்
கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்
பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென
இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து
சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்
பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்
பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்
மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது
என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்
மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்
பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ 200
பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே
ஆரு மொருதர் ஆராட்டங் காணாத
மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்
ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்
கரிய அவரவர்கள் காடு வடவுகளில்
உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக்
கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி
ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று
மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து
பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து
வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து
காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து
மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக்
குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து 220
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்
பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த
உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ
நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை
தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து
பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்
வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்
தந்து புவியாளத் தலைவரே யும்முடைய
விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்
தாருமென மாதரெல்லாம் தாழ்மையுட னீதுரைக்க
ஆருநிக ரொவ்வா அச்சுதரு மேதுரைப்பார்
மாதேநா னிந்த வையகத்தில் வந்தவுடன்
பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில்
தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்து
கூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையது
இன்னாபா ரென்று ஏழுபேரையு மெடுத்து 240
நன்னகரி பார்க்க நாத னிடுப்பில்வைத்து
வட்டமிட்டு ஆடி மாதரொவ் வொருவர்க்கொரு
கிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார்
பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன்
சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும்
ஒப்பமென் றெல்லோரும் உம்பருந் தாமகிழ்ந்தார்
செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்து
அன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண் டானதிலே
மன்றுதனை யாளும் மாபாவிச் சோழனவன்
கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்து
சொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோ
தேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடைய
மானதிய மக்களென மாயவருந் தானுரைக்க
அப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள்
மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே
செப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்று
பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து
நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில்
நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் 260
கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும்
ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலே
தாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத்
தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே
மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது
என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம்
நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்து
மடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக்
கண்ணோ மணியோ கரடரா சன்மகனோ
விண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோ
தோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்ற
சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ
தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ
வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச்
சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும்
புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார்
நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம்
வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டு
நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு
தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து 280
என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று
இன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச்
சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்து
மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காண
மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும்
குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள்
நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள்
வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானை
கதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில்
திருநா ளிகனை செய்து நிறைவேற்றி
மக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்து
மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார்
கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும்
மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
பின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்தி
மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார்
பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத்
தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப்
பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய்
மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி 300

இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி
அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு
பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து
அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில்
பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும்
துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடி
மங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்து
கொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார்
மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால்
வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லை
கூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில்
நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள்
ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து
திருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச்
சண்டை பிடிப்பார் தந்ததுபோ ராதெனவே
கண்டமட வாரோடும் கனிவாகப் போறீரென
அவள்வீட்டில் போறீர் அவளோ டதிகமுமாய்
உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்து
என்னோடு பேச்சு இப்படியே செய்வீரென
மின்னோ வியங்கள் வெகுவாகக் கத்திடுவார் 320
சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்க ள்தான்பேசி
நாமகலப் போவோம் எனநடந்து மக்களுட
வீட்டி லவர்போவார் வீரமால் தானறிந்து
கூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்து
அள்ளித் தருவேன் அனந்தவரா கன்பணமும்
வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும்
உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன்
அந்தப்பெண் ணார்களுக்கு அதுக்கதுபோ லேகொடுப்பேன்
எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்துக்
குளிர்ந்தநய வார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டுச்
சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவே
உருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவிய முமறிவேன்
ஏன்காணு மும்முடைய இந்திரசால மெல்லாம்
கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக் குத்தெரியும்
மருட்டா தேயுங்காண் மாய்மால முந்தெரியும்
உருட்டா தேயும்போம் உமதுதொழி லுந்தெரியும்
எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர்
தனக்கேற்க நெஞ்சம் தானறியா தேயிருக்கும்
கன்னி யுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன்
நின்னு சடையாதேயும் நீர்போவு மென்றுரைப்பாள் 340
அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தைசொல்லி
இப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவே
மாய னழைக்க மாது மெழுந்திருந்து
நாயன் பிறகே நடந்து மிகவருவான்
வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார்
சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய்
இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி
ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே
செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து
முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில்
சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து
மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும்
நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து
வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச்
செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து
தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி
வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத்
திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென
சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று
நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக் 360
கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று
அஞ்சலெனச் சாமளா தேவிதனை யழைத்துக்
கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு
என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே
கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி
மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று
விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள்
திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே
கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி
மின்னி னொளிமதலை வீரத் தனமாக
நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி
உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத்
தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார்
அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியை
உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி
வையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலே
செய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே
ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான்
போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோ
ஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன 380
சோதியே யென்று தொழுதார் மடவார்கள்
அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன்
சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து
அன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுது
நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே
பத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில்
பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய்
வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார்
சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடி
கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலே
அஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும்
மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவே
ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல்
பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்து
கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு
நினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான்
நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு
கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக
எண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்று
நண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு 400
வரவில்லை யானால் மாதருடன் மக்களையும்
சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ
என்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையா
அன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்று
பாவிப் பயலே பகராம லித்தனைநாள்
மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனே
தீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால்
கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனே
முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால்
என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனே
பூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோ
மாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய்
அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல்
இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்று
மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே
கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில்
தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்து
ஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால்
மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே
கெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல்
கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் 420
இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லை
எப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி
எல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்து
அல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம்
தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும்
கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும்
பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும்
துள்ளி யிகனை சுகசோ பனம்வரவே
பூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும்
ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும்
சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து
குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார்
வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல்
ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன்
கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத்
தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித்
தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம்
எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து
ஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்தி
வாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி 440
மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறி
சங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்தி
பாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலே
தாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்து
பொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில்
வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும்
மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும்
தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும்
கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காண
வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று
முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலே
நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று
அய்யா கன்னிபகவதி பதியேகல்
உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கி
வள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியை
மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி
உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார்
கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்று
தளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய்
மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய்
கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி 460
தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப்
பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே
கண்ணு மயிலே கனகவொளி மாமணியே
பெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு
என்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும்
குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே
பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும்
காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து
ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான்
பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய்
எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேது
கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீ
அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே
சும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மா
பரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்கு
விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை
இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி
திலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன்
வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான்
உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன் 480
மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை
செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள்
உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன்
பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில்
இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால்
நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்து
என்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்தி
பொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார்
பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப்
போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன்
ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும்
சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி
அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம்
மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய்
தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா
தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார்
பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி
காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள்
தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுது
நாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள் 500
போற்றி யுமக்குப் போதவய தானதினால்
நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும்
ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது
மாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள்
உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே
மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான்
கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம்
பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான்
இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார்
எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம்
என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள்
விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள்
அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்து
இப்போது வேணும் இவளை மிகஇளக்க
என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து
மன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லி
ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம்
வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து
வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து
கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் 520
தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம்
மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம்
தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம்
புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம்
குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும்
கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம்
மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம்
மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித்
தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம்
தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும்
வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம்
நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள்
மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம்
டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம்
இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம்
காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும்
பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம்
இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால்
எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் 540
அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே
சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த்
தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென
அச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டு
அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது
எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி
போய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார்
வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து
கண்ணரிய போத்தி காரணத்து நற்போத்தி
திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும்
தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று
வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி
மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு
ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர்
கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி
பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன்
செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன்
செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள்
அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார்
இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் 560
ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம்
கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது
பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு
வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு
கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது
சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும்
இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன்
சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால்
ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும்
பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு
நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென
நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார்
அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள்
நற்போடு வொத்த நம்முடைய பேராநீர்
வேறாட்கள் கூடவெளியேறப் போகாது
வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும்
உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு
எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும்
பைய இருந்திருந்து பாதை மிகநடந்து
நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும் 580
பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள்
சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து
அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில்
பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல்
இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல்
கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம்
போக வென்றாலும் பொழுது புறப்படுமுன்
ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம்
அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று
இப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச்
சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னி
அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்று
கரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று
குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து
உன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்து
சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப்
பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலே
மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக்
கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி 600
வந்தவளை யழைத்து வாவா பிறகெனவே
சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார்
முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க
அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே
முட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள்
கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும்
கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க
மலர்மாரி தூவ வாயு மரைவீச
பூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல்
காமி குமரி காலசையா மல்நடந்தாள்
நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார்
வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு
தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும்
பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட
திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி
முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென
வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக்
காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச்
சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள்
அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ 620
வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால்
வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள்
பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி
இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால்
தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும்
நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி
கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம்
விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம்
என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே
அறைந்த வாரி அதற்கு வடபுறமாய்
இடம்மான வோசை டகுடகா வென்றுமிக
இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச்
சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே
மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக்
குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப்
பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப்
பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச்
சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமென
என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும்
நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே 640
தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி
கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள்
குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றி
மின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம்
வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டி
நடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டு
அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி
சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள்
கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி
நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள்
சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால்
எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும்
திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே
பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே
கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப்
பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னே
என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால்
பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான்
உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே
எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில் 660
ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னை
திருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள்
பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன்
காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன்
மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க
கலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன்
என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்து
அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து
ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த்
தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம்
வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்
சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்
செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும்
புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே
போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்
சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ லுண்டு மென்று
பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம்
சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள்
உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று
மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி 680
குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி
நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார்
பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்
சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர்
ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்
சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள்
ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும்
நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம்
செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும்
நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா
என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார்
நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும்
இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன்
பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக்
கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி
நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே
காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை
பகவதிக்குச் சச்சிதானந்த வடிவைக் காண அருளல்
பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது
சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும்
பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் 700
நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலே
தண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும்
தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல்
செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனே
அம்பலத்தே நின்று ஆனந்த மேபுரிய
ஆனந்த மான அழகு பகவதியும்
தானந்த மான சச்சிதானந் தவடிவைக்
கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே
நின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதை
கிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகல
பழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக்
கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார்
மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப்
பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொரு
கூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல்
பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானே
லாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள்
அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை
மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே
எங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான் 720
திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோ
நிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே
குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோ
மான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சே
தான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே
இக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து
மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ
என்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோ
அன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச்
சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று
சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி
புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும்
சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம்
என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று
பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் 740
தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென
உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து
இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி
மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல்
பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று
சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள்
மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள்
சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள்
கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள்
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள்
தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று
வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள்
சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப்
போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி
உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும்
எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான்
சங்குள் பிறந்த சமயத்திருமணியும்
எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும்
தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி
மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள்
கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக்
களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள்
கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும்
காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே
ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே 760
சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ
அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள்
என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித்
தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக
வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு
என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில்
குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம்
வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல்
சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய்
இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத்
தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து
பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன்
சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட
ஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும்
கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார்
நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம்
பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்கு
என்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்து
இன்று இருவென்று எம்பெருமா ளுமாட
நல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல் 780
செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள்
பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்பு
உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி
பத்து வயசுப் பிராயம்போ லேசமைந்து
சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள்
இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி
பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே
நாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே
கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும்
சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனே
முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ
நரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான்
உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம்
மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூட
போய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவே
நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ
சும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோ
படைத்த பரனே பாவியே யென்றலையில்
நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோ
பரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக 800
விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல்
ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்து
கூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடி
திரியும் பொழுது செய்யதிரு மாலவரும்
பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும்
இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடைய
மனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்று
நினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கி
புனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்து
தாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறிய
காண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியை
மனுவறிய அண்ட வானலோ கமறிய
இனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்று
நிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்து
எச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில்
அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப்
படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப்
பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும்
நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான்
புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே 820
உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது
மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி
தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து
ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத்
தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச்
சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித்
தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து
பகவதியம்மை காண்டம் படித்தல்
பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள்
ஆவி மறுக அவனிதனி லெங்களையும்
சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய்
போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே
பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச்
சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும்
வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட
மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப்
பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து
தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே
இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால்
பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை
என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் 840
உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே
என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ
பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ
பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ
எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ
மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ
வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல்
பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும்
சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும்
ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று
அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ
மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ
இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்
சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ
ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ
பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே
போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு
ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு 860
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்
புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே
நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்
நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா
உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்
சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு
வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் 880
சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும்
அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்
மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே
அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி
இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன்
சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப்
பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு
தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது
எங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்து
தங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடு
கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண்
உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல்
எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல்
போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல்
ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே
மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் 900
வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும்
வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே
நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும்
மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம்
உபாய மறிய ஒருவரா லேலாது
என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன்
நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார்
பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே
கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே
அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி
குமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியே
தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே
மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே
கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே
செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே
பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை
கலியழிய வயது காலஞ்சரி யானதினால்
வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான்
பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து 920
சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து
நாடாள நமக்கு நல்லபல னானதினால்
தாடாண்மை யான சத்தி பகவதியே
உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு
தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான்
கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும்
மயிலனையா ளான மாது சரஸ்வதியும்
மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள்
சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள்
மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள்
குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை
பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள்
பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல்
எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில்
வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு
கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும்
திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே
வருகுமந்த வேளையிலே மாமுன சீராமரிஷி
திருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார்
நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன் 940
வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால்
எக்கால மையா இவன்முடி வாவதுதான்
அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை
நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச்
சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ
சிவன் ரோமரிஷிக்கு அருளியது
மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும்
தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு
பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து)
எல்லா மறிய இலக்கறியக் கூறினராம்
இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம்
சிவஞான நினைவு செல்லாது தேசமதில்
கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்
தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார்
நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில்
போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார்
பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும்
கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம்
கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவே
நாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடி
வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் 960
மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும்
கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர்
மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார்
வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும்
அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும்
மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்து
தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
தெய்வ நிலைகள் தேசமதில் காணாது
மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது
இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது
பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார்
தெய்வ மடவார் தேசமதி லேவருவார்
வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார்
பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும்
சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க்
கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம்
உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி
வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே
தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான்
இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே 980
அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும்
பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான்
துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம்
கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில்
சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனே
வாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரே
கூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ் செய்கிறதார்
யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான்
தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு
நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக்
கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத்
தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து
மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத்
தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும்
பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால்
நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம்
தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது
ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால்
திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம்
என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று 1000
நன்று நன்றையா நல்லகா ரியமெனவே
சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே
முந்தோர் மொழிந்த முறைநூற் படியாலே
வந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு
எந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதே
தலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடு
கிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு
கொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள்
பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே
பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசே
கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து
வாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல்
கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல்
தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடி
கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே
என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக்
கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க
அம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்து
நம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லி
இருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள் 1020
பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டு
அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக
ஒழுகாக நிற்கும் உலக நருளழவே
மாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவே
ஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும்
வையா வழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே
சிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும்
மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே
இலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக்
கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே
பொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனே
முன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன்
ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனே
வேண்டும் நருட்கள்வந்து விழுந்திறைகள் தோற்றேனே
தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே
துணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனே
பணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும்
நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே
செகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே 1040
இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்கு
முத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ
அய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரை
வெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனே
பாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்று
ஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோ
மூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்தி
மீண்டென் சரீரம் விழலா யெரியுதையோ
பாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும்
நாலு ரண்டான நல்ல ருசியதுவும்
பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ
ஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரே
என்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவே
மன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித்
தேனினிய கண்ணே தேவி பகவதியே
நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய்
நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோ
மேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன்
பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன்
என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன் 1060
தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக்
கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன்
திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன்
அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும்
அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமை
பொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணை
என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக்
குன்று தனமின்னாள் குமரி மனமகிழச்
சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப்
புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள்
நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்து
மாது குமரி வாயுரை யாதிருந்தாள்
பகவதி திருக்கல்யாணம்
அப்போ திருமால் ஆனந்த மேபெருகி
இப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்று
உன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம்
மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு
எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம்
அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்று
பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச்
சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ 1080
தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாட
ஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாட
பகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச்
சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும்
பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து
மிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண்
பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை
மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக்
கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி
விண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார்
கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு
இன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக்
கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார்
தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக்
கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச்
சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே
எல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானை
நல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்து
செல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார்
அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச் 1100
சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம்
ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும்
நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும்
சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடி
நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே
பார்வதி திருக்கல்யாணம்
ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியை
வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளை
மாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள்
பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும்
மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத்
திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்து
மாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டு
காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார்
மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூற
சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக்
கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர்
உருத்தா யிருந்துஓதுவார் மோகமதாய்ப்
பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையே
கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே
கூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் 1120
நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ
தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது
கனியேயென் மாமணியே கருத்தி லறியீரோ
உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு
தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ
ஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக்
கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே
வாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப்
பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ
அன்னங்காய் வைத் அமுதருந்து மென்றுசொல்லி
முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ
வாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள்
கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ
கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள்
பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே
எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே
கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ
என்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூற
மன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள்
வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து 1140
முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர்
அய்யோஈ தென்ன அடிமாறு காலமதோ
பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம்
இப்பா ருலகில் இப்படியே வந்ததென்ன
முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
பொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோ
வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான்
என்றந்த மாதர் இதுகூற மாயபரன்
நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலே
வந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்று
புந்தி யயர்ந்து பூவை முகங்கோடி
அண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்று
பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று
வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள்
அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில்
இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே
மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல்
தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவே
நின்றார் மடவார் நினைவு தடுமாறிப்
பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத் 1160
தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்கு
ஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டி
சந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார்
வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட
வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட
செய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்து
வாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன்
தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு
பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக
வேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார்
இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள்
நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல்
செய்து இகனை சிவசோ பனம்புரிந்து
பைதுவளை மாதரோடு பண்பாக வேயிருந்தார்
மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த்
தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம்
வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும்
சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து
கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு
சோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி 1180
சேவரசி யான மெல்லியரை நாமணந்தான்
மோகினி வேடம்
புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்று
மதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவே
மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு
சீதுகந்த மாதரென செம்பவள மாயவரும்
காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து
மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச்
சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்து
மாலை யணிந்து மார்பில் கலையணிந்து
கோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத்
தோர்வை படாதே தோகையென வேசமைந்து
மஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்து
செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்தி
எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது
கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று
சொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லி
முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார்
நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்று
தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார்
இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் 1200
பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளை
மயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவ
இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு
சச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமே
கண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமே
கலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனே
வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும்
நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும்
சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே
சத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும்
புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும்
கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து
கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து
கும்மி யடித்துக் குரவை மிகக்கூறி
எம்வடிவு போலே ஏலங் குழலார்கள்
ஆடிப் படித்து அலங்கிருத மாகியவர்
சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன்
பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை
மேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது 1220
என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும்
அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு
கூடி நடந்து கூண்டரிய நற்பதியில்
ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில்
வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடைய
சிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்து
திக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கி
பக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல்
புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே
புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே
வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி
மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக்
குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப்
பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று
சுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள்
உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில்
துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள்
வையகத்தோர் காண வாழும் பகவதியாள்
செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள்
மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல்
அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப்
பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் 1240
இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும்
சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப்
பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக்
கண்ணான என்றன் கற்பு மழிந்தேனே
என்றுமா தேவி இப்படியே சொன்னவுடன்
ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப்
பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக்
கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது
எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன்
முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோ
எனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ
தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ
நாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ
சோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோ
என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள்
குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம்
எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம்
கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே
இராமனாய்த் தோன்றி இராவணசங் காரமது
சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப் 1260
போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலே
மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து
ஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறி
வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில்
போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்க
வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே
ஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச்
சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப்
பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்து
ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த்
தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்து
தொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து
மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து
விளையாடி நீயும் வேறா ரறியாமல்
குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்து
சிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப்
பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய்
உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோ
தன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது 1280
பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க்
குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ
ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே
பாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாது
என்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டு
நன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை
மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம்
பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு
கண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்கு
வேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்க
மானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித்
தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல்
சிலைநுதலிக் கன்னி சொல்லுரையா தேயிருந்தாள்
இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்து
பொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய்
வேச மெடுத்து மேளத் தொனியுடனே
வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க
தேச நருளறியத் தெய்வமட வாரறிய
மாய பரனும் மகாபெரிய நூல்முறையாய்
வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானை
மாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச் 1300
சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை
வள்ளி திருக்கல்யாணம்
மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்து
துணைபெரிய மாயன் சுருதி முறைப்படியே
ஆகமத் திகனை அலங்கிருத மாய்ப்புரிந்து
நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே
கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று
சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து
கேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியைக்
கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து
எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை
மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே
வேலையிட்ட மான வேண்டுஞ் சடங்குசெய்து
நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து
வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து
மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை
தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம்
பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம்
கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார்
வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில் 1320
ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம்
பாலராண் பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக்
கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடு
பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல்
நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார்
நாரா யணர்க்கு நல்லமுது தான்படைத்து
காரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார் 1327
கூடி யிருந்து குலாவி மிகவாழ
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய்
வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள்
சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள்
இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில்
திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல்
காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து
வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில்
பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள்
விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே
நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ
நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது
அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி
இப்போ நமக்கு எழுத்தின் படியாலே
நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல்
கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே
தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன்
மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே
எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை
சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20
மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும்
தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில்
நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று
அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க
விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில்
சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார்
நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய்
ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில்
பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே
கற்றைக் குழலார் கனமான தேவியரை
ஏக மறிய இசைந்த மணம்புரிந்து
வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத்
தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி
நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை
இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச்
சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து
நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று
ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள்
ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே 40
இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து
இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம்
என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து
கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும்
மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து
தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை
அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல்
கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப்
பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே
பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து
மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே
உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த
மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு
நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை
தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு
என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள்
நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே
எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத்
தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி
மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா
பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் 60
ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே
பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத்
தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று
முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப்
பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி
சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி
அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச்
செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக்
கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து
வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும்
வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி
மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து
அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும்
மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும்
கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து
வாட விடாமல் வல்லபல தீனதுவும்
மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே
காளடம் மானம் கடிய சிறப்புடனே
அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி
வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து 80
ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன்
நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே
சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட
மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து
நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக்
காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து
அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும்
செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே
விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த்
திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார்
இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட
மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும்
விருந்து மருந்தி வேதா கமம்போலே
பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து
பூமடந்தையம்மை திருக்கல்யாணம்
இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை
நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று
கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு
நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும்
ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து
பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் 100
பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து
விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச்
சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல்
வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி
நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய்
தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து
பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும்
கண்ணான மாயன் கையார வேகொடுத்து
நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக
இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே
எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப்
பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும்
நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத்
தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து
வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள்
இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே
மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து
அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும்
விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று
மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை 120
உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை
மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம்
கொண்ட அடிமை குலச்சாதி யானோரை
அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச்
சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள்
காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று
பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே
சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம்
உற்று மனதில் உபாய மதுவாக
வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து
பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும்
தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை

அய்யா வைகுண்டம் எழுந்தருளல்

அய்யா வைகுண்டம் எழுந்தருளல்
இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம்
ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண
வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று
இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார்
ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை
வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர்
தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம்
கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் 140
மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு
தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது
என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்
தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே
தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண
நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன்
பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால்
வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம்
என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல்
விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர்
என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம்
குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார்
குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும்
ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி
கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும்
வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர்
ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு
சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே
இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று
அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே 160
இனியா னுமது இலங்கும் பதியில்வர
முனியா னவற்கு முற்ற விடையருளும்
ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே
வேண்டா முலகம் மேலுலக மேயழையும்
அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும்
தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால்
என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே
மன்று தனையாளும் மாயத் திருமாலும்
வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப்
பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த
வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும்
கண்ணு மகனைக் கடிய விமானமதில்
ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச்
சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி
வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க
மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில்
வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும்
தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார்
சற்குரு வான சடாமுனி யிங்குவந்து
மெய்க்குரு வான வீர விசயனுக்குச் 180
நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து
செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென
மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து
தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து
நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து
செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி
மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக்
காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி
கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து
நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து
நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று
சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து
இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப்
பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய்
இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத்
திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து
ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் 200
சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில்
வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக்
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை
வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு
வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ
விமான மதிலேறி மேலோக மீதில்வரத்
தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர
மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத்
தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட
மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார்
வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும்
நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி
எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே
சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே
கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப்
பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த 220
நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம்
இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே
ஆவி மகனை அன்போ டுறவணைத்துத்
தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து
மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத்
தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும்
அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி
இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும்
சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து
வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை
நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும்
தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம்
சரசு பதிமாதும் தாயீசொரி யாளும்
பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார்
கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும்
அகிலமது அறிய ஆனார்வை குண்டமென
எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன்
முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக
ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல்
ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் 240
பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில்
திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ
கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில்
தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ
கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில்
சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர்
பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக்
குதறி மலைந்து கொடுவான மாமுகடும்
கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து
முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி
அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத்
தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில்
முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய்
அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை
செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப்
பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து
சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில்
மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும்
சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும்
இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் 260
சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார்
பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும்
அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக்
மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப்
சான்றோர் கோவில் அமைத்தல்
பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள்
சாமியுட தேவி சுற்றமட மாதர்களும்
அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி
வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க
வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா
என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி
முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா
நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று
மாதத் திருநாளும் வாரமற வாதபடி
நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே
கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச்
சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க
நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும்
சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே
துயரமதாய் வாடி சிவனே செயலெனவே 280
இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல்
நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று
அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார்
இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும்
முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க
அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும்
மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக்
கூண்ட மணியே கோகுலமே கற்பகமே
ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே
என்றன் மணியே என்னாத ஓவியமே
உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில்
இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி
வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத்
களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத்
தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும்
இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப்
பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய
மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து
ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார்
அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் 300
பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து
வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக்
கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள்
தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே
நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும்
புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு
மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக்
கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை
தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய
ஆடிக் களித்து யாம மிகக்கூறி
நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக
வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன்
ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும்
கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன்
அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால்
இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ
என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும்
அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும்
இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் 320
ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல்
தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால்
பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே
எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே
தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி
என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும்
நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு
கலைமுனி, ஞானமுனி சாட்சியம்
கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான
விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி
ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும்
அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ
எறும்புகடை யானைமுதல் பேதா பேதம்
எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக
உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால்
உலகமதி லாருளதோ வுடைய மாலே
செறும்பொருளா முமதுமக னங்கே வந்து
செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும்
தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும்
தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார்
தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி
தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன்
உப்பரிகை மீதிருந்து அரசே யாள
உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை
மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும்
மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம்
நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால்
நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம்
நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே
நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் 340
காங்கரிது எங்களுட கருணை நாதா
கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம்
ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும்
ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப்
பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும்
பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார்.
நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும்
நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு
இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து)
ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக்
கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும்
கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர்
டுண்டுபல மேளமொடு தாளத் தோடு
உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார்
சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச்
சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த
தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித்
தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர்
கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக்
குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற
மன்றலணி மாயவரு மீசர் தானும்
வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே
வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை
வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று
இளங்குருமா னானகுரு வைந்த ராசர்
இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப்
பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப்
பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று
வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று
மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே
வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள
மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப்
பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன்
பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும்
தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து
துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து
மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற
மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்
அய்யா சான்றோர்க்கு இரங்கல்
ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் 360
கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச்
சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே
ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம்
ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன்
நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும்
வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து
தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார்
ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம்
வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ
மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா
செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய்
திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி
கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக்
குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு
மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார்
கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே
வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம்
மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம்
பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய்
கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் 380
வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும்
பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும்
ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார்
இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே
உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும்
கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும்
மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம்
உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய்
முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல்
கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க
அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே
ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த
ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள்
சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி
வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே
ஆணை மகனே அசையாதே கண்மணியே
சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத்
தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய்
வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம்
அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் 400
குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே
மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும்
பொய் வேசம்
பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி
மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே
உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே
பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன்
ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை
அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய்
முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில்
தவம்போ லிருந்து தானாளு குண்டமதில்
ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல்
நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ
அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன்
மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி
நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே
வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே
என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய்
குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப
வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை
நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் 420
முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான்
செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான்
கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான்
பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான்
தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான்
மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான்
கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான்
மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான்
இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள்
செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க
சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம்
தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே
முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்
நல்லவை முழித்தல்
சிவனு முமையாளும் செய்யத் திருமாலும்
தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே
தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக்
கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் 440
வானமது குழவி மண்பூமி யம்மியெனத்
தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும்
உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும்
அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும்
மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும்
தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே
வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி
மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர
முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும்
பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து
ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க
வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி
நல்ல மகனே நாடுந் தவத்தோனே
செல்ல மகனே திருபெற்ற கண்மணியே
உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும்
சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும்
ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும்
பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும்
யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே
நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே 460
நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே
மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர்
முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே
களித்தே யிருந்த கருத்தின் படியாலே
பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும்
அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும்
புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு
குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும்
பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும்
அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார்
எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி
வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார்
தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும்
நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார்
நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால்
வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச்
சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும்
நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும்
விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும்
வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் 480
ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து
சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால்
ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி
வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச்
சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று
கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார்
விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக்
கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக்
கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு
முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக்

நடுத்தீர்ப்பு

குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச்
சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள்
ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை
வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே
இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து
மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத்
தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப்
புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக்
காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி
ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் 500
ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே
இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய்
கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே
அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து
பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம்
நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத்
தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ
வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ
அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு
எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர்
பண்டார மென்று பாரறிய வந்தவரை
அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று
ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால்
கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம்
சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து
ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும்
தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம்
முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே
பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி
அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன 520
சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே
கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன
பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில்
ஆவி யறிய அனுப்போலும் நன்மையது
செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ
மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும்
எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச்
சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி
உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று
படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து
சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே
நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன்
நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய
வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற
சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ
எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப்
பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து
மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும்
உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும்
மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே 540
தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத்
தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே
ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால்
வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே
பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள்
மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே
ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே
நாடதிக மான நல்லபட்டு நீராளம்
தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே
மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப்
பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும்
மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம்
அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப்
பொன்னப்ப நாரணரே பெற்றவரே
வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச்
சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும்
பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள்
ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப்
போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி
ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் 560
தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை
நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே
என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து
பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே
பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து
ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே
ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே
பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே
விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே
சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே
குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே
சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே
தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே
ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே
மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே
தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே
ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே
வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே
துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே
பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே 580
மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே
வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே
ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே
வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே
சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல்
இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில்
சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே
உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது
என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ
உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால்
தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி
உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி
ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே
கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே
பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத்
திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய
உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து
மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் 600
எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன்
நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி
ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக்
கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச்
சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து
அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால்
இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில்
அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய
மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு
முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும்
தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப்
பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில்
அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும்
பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன்
சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர்
ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித்
தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத்
தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு
மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம்
ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி 620
நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து
வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும்
அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி
ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே
பாரேழு தேசம் பண்பாய் முறையமிட
முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து
இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை
மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப்
பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து
ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும்
மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி
ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை
வீறுடனே நல்ல வேலாயுத மெனவே
எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி
விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச்
சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக்
கொல்லுவே னென்று கூண்டப் படையோடு
சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு
கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன்
தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு 640
மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே
அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே
இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை
பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற
செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய்
என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால்
உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே
சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய்
விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து
அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை
முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும்
சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக்
கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக்
கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன்
சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள்
புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல்
என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து
அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன்
அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய்
துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் 660
அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி
மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில்
ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க
மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய்
மகவா யுனக்கு மாய வுருவெடுத்து
உகமே ழறிய உதித்து வளருகையில்
பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே
தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும்
உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும்
தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ
படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால்
சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார்
ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது
மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட
ஏற்ற பேரான இரணிய நமாவெனவே
சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன்
வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே
பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே
இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி
உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் 680
சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய்
வல்லப் பொருளான மாய அரியோனும்
எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி
அங்கெங் குமாகி அளவுக் களவாகி
நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப்
பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே
கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான்
தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக்
கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே
வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும்
தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து
வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே
இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால்
குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே
உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று
செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது
உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது
முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச்
சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் 700
கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது
ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி
மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு
பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு
எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும்
கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும்
புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும்
மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே
கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி
உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால்
கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான்
என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து
அன்றே கிறதா யுகமு மழித்துமிகப்
பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும்
மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய்
மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும்
சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து
வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே
ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை
மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் 720
கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே
மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி
வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே
கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும்
நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை
ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப்
பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே
கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு
மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால்
பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச்
சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச்
சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப்
பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே
மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும்
அல்லாதே போனால் அலக்கழி வாகுமென
எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே
பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன்
காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு
அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம்
இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் 740
ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா
போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே
என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி
அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய்
அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய
செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே
சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும்
மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே
நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும்
கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள்
முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால்
அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற
பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே
தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு
என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள்
அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி
என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால்
உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும்
அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ 760
மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ
என்றாயே நீயும் இருவரையு மப்போது
அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க
அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை
நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி
அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத்
தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து
உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று
என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை
விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல்
படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு
அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும்
நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன்
பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து
எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான்
நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப்
பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே
பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே
தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து
என்கை யினாலே எடுத்து வொருபாணம்
சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் 780
உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு
முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு
அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய்
இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன்
உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச்
சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது
ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய்
மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு
சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று
மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன்
உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு
சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ
கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை
இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய்
துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப்
பவரா யுனக்குப் பக்கத் துணையாக
ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி
இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து
இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென
அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து 800
உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து
என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து
உற்ற திரேதா யுகமழித் துன்றனையும்
சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன்
பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட
அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார்
அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே
முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப்
பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து
தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன்
சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே
பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன்
அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல்
இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது
ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய்
மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ
தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று
சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே
உன்னால் குதித்து உற்ற கலியனென
இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் 820
பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து
போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக்
கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி
வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே

கலி முடிவு

முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும்
மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும்
எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப்
பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம்
மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல்
ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே
எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து
பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும்
தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும்
அந்திர மதான அன்னீத வஞ்சனையும்
மாய்கை பலதும் வளக்கோர வாரமதும்
சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம்
என்னோடு கூட யானு மதுகூட
வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே
வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும்
பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக 840
ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித்
தீயிரத்த மான தீரா தருநரகில்
சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை
இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று
மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப்
பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக
முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம்
தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது
நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை
பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின்

தர்ம யுகம்

உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே
வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே
எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக
கற்பு நெறியானக் கடிய பலவகையும்
நல்லோர்க ளான நாடு மனுவோரும்
நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும்
கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில்
நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம்
தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல்
நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் 860
எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து
நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி
வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி
மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால்
வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச்
செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ
தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி
நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும்
பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும்
கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும்
நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும்
சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும்
தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும்
கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல்
தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம்
முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும்
களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி
நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச்
செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய்
கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் 880
நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து
தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும்
பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து
தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து
வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும்
தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே
ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து
வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே
எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய்
நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம்
ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும்
காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல்
பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல்
ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து
வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம்
சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார்
நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் 900
அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று
தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு
புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று
நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார்
அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே
பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல்
நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார்
வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத்
தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார்
வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே
வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை
நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று
சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு
மானுவ தர்ம வரம்பு தவறாமல்
நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார்
பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து
சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து
மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார்
குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள்
கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் 920
சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக
வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து
என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப்
பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று
நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார்
வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து
நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு
வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச்
செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே
வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு
மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு
நாதக் குருவான நாரா யணமணிக்கு
சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை
கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து
மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து
பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும்
தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும்
நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து
மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும்
ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் 940
இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச்
செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே
சரசு பதிமாது தண்டரள சுந்தரியும்
விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும்
வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும்
ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும்
வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே
தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும்
இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள்
முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும்
சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி
இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார்
போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார்
சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள்
பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால்
ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன்
பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக்
கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன்
கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து
என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் 960
பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும்
சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில்
வருவே னதுமட்டும் வடவா முகமதிலே
குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள்
இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு
நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான்
அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார்
பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி
உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத்
திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது
பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று
மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா
நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து
காரணம தாகக் களிகூர்ந் தினிதாக
வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும்
கைகண்ட நல்ல கலியாண முமுகித்து
மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி
அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப்
பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப் 980
பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு
நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு
ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன்
கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப்
பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து
கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய்
தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும்
மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே
எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன்
நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள்
தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள்
மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க
போவோ மெனவே பெரியவை குண்டரையும்
கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி
தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத்
தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர
மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் 1000
கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக்
கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர
வாரி சங்கூத வாயு மலர்தூவ
நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ
இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி
சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும்
கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து
லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு
நேராக வந்து நெடியோன் பதிதவிலே
சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி
அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும்
சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும்
மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும்
குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற
வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே
சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச்
சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம்
யாம முறையாய் அங்கே குதித்திடுமாம்
என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம்
பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் 1020
நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல்
குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார்

பட்டாபிஷேகம்

இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி
முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில்
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும்
ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில்
மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல்
விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே
சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி
பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில்
ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே
ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி
வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில்
ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே

அய்யா அருள்வாக்கு

ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று
முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் 1040
கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம்
பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர்
வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி
நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது
நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து
ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம்
உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே
ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்
மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு 1060
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக்
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே 1080
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்
ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்
தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்
ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் 1100
பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்
பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்
முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்
சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ
நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ
வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ
காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ
பூமாது வானபக வதியும் வாழ
பொன்மாது சரசுபதி புரிந்து வாழ
நாமாது வானபூ மடந்தை வாழ
நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ
போர்மாது வானமா காளி வாழ
பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ
சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ
சிவவைந்த ராசருமே சிறந்து வாழ 1120
மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி
மாயனுட முகம்நோக்கி மாது தானும்
தீதகலும் நாயகமே சிறந்த மாலே
தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர்
ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும்
இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும்
பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப்
பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே
இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும்
எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும்
நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம்
ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர்
பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும்
பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே
போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்
கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ
மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்
இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் 1140
மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே
இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே
என்றாதி யிருகையால் மாதை யாவிப்
புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப்
பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ
மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ
மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ
உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ
உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ
மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை
வையகத்து மனுவோர்க ளறிய மாயன்
தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித்
தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன்
நாதனருள் மறவாத இராம கிருஷ்ண
நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த
சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச்
செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே
வாறான கதைவகுத்த நாதன் வாழ
வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ
வீறான தெய்வசத்தி மடவார் வாழ
வீரமுக லட்சமியும் விரைந்து வாழ
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்

திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான
இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக
நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம்
நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் 1160
அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *