சம்பூரணன் அவதார சடலத்தை சுமந்தாரா?

அய்யாதுணை

நாராயணரின் பொன்கூட்டு சடலம் சம்பூரணனுக்கு சுமக்க கொடுக்கப்பட்டது என்பது ஒரு சாரர் கருத்து… நானும் அகிலத்திரட்டில் சம்பூரணன் வரலாற்றை மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன்.. ஆனால் நாராயணர் பொன்கூட்டை சம்பூரணனுக்கு சுமக்க கொடுத்தார் என்ற ஒரு வாசகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.. அகிலத்திரட்டு அப்படி சொல்லவும் இல்லை. மேலும் பொதுவாகவே ஒருவருடைய உடலை மற்றொருவர் சுமக்க இயலாது..   ஒவ்வொருவருடைய கர்ம பலனும்(பாவ புண்ணியமும்) அவரவர்களுடைய காரண சரிரங்களில் பதிவுகளாக பதிந்து உள்ளது.. அந்த காரண சரீரத்தை அடிப்படையாகக்(காரணமாகக்) கொண்டே ஒவ்வொருவருக்கும் சூட்சம சரிரமாகிய மனதும் ஸ்தூல சரிரமாகிய (நம்மால் பார்த்து அனுபவிக்கக் கூடிய) உடலும் தீரமானிக்கப்பட்டுகிடைக்கப் படுகிறது..

*பொன்மேனிக் கூட்டை மறுக்க இயலாது:*

*ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம்*
*பேறுபெற்றதில்லையே பேருநாமீந்திலையே*

யுகங்கள் தோறும் நாராயணர் அவதாரம் முடிக்கும் போதெல்லாம் அவரது அவதார உடலை ‘பொய்க்கூட்டு சடலம்’ என்று சொன்ன அய்யா, தனது வைகுண்ட அவதாரத்தை நிறைவு செய்யும் போதுதான் பொன்மேனிக்கூடு என்று சொல்கிறார்… இதுவே பேறு பெற்றதில்லையே பேறு நாம் ஈந்திலயே என்று அவரது அவதாரக்கூட்டுக்கு நாராயணர் கொடுத்த பேறு…
மேலும் *பொன்பழுப்பானதொரு தங்கத்திருமேனி புண்ணாய் உழையுதையோ சிவனே அய்யா* என்ற அருள்வாசகத்தையும் ஒப்பிடுவோம்..

*ஆறு தரம் நம்மை அகம் வைத்துக் கொண்ட சடம்* என்ற வாசகத்தை நாம் பார்க்கும் போது ஆறு தரம் என்றதும் இறைவன் ஆறுமுறையா அவதரித்தார் ? இல்லையே பத்துமுறை அல்லவா என்று நமக்கு குழப்பம் வரும் போது *எடுத்த பிறப்புக்கு எல்லாம் என்னை சுமந்து திரிந்தாய்* என்ற அகில வாசகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆறுதரம் என்பதனை ஆறுயுகமாக எடுத்து கொள்ளலாம் என்பது எனது எண்ணம்..
மேலும் *கண்டாரே காயாம்பு கண்ணர் முக்கூடதையும்* என்பதற்கு பொன்மேனிக் கூட்டை மறுப்பவர்களால் எந்த பொருள் சொன்னாலும் அது பொருத்தமாகாது..

*சம்பூரணனுக்கும் பொன்மேனிக்கூட்டுக்கும் என்ன சம்பந்தம்?*
சம்பூரணன் பொன்மேனிக்கூட்டை சுமக்கவில்லை ஆனால் அது வெயிலால் மணிவயிற்றில் பிறவி செய்யப்பட்டது… கீழ்வரும் அகிலவாசகத்தை கவனமாக படிப்போம்..

*அவர்கள்பிறக்க ஆனதெய்வ பூரணனை*
*திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது*
*செய்யச்சிவமுஞ் சிவவேதனு மகிழ்ந்து*
*வையமளந்த மாலும் பிறவிசெய்தார்*
*கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்க*
*தர்மச்சம்பூரணனை தரணிப்பிறவிசெய்தார்*

*செய்தச்சடமதையுஞ் சுமக்கச்சடம் பார்த்து*
*மெய்யிசையுநாதன் மேதினியில்ச் செய்தனராம்*
*சடம்பிறக்க லோகந்தட்டு மிகமாறி*
*உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோன் கற்பனையால்*
*அன்றுபிறவி செய்தார் அவனிசோதனைக் கெனவே*

மேற்கண்ட வாசகங்கள்  பொன்மேனிக் கூட்டை சம்பூரணன் சுமக்கவில்லை என்பதை தெளிவாக சொல்லுகிறது.. எப்படியெனில் சம்பூரணன் அவனது கர்மகடன்களை கழிப்பதற்காக மட்டுமே பிறவி செய்யப்படுகிறான்.. அதாவது அவனது காரண சரீரத்தில் பதிந்துள்ள பாவங்களை போக்கி இறைவனால் ஆட்கொள்ள படுவதற்காக மட்டுமே பிறவி செய்யப்படுகிறான்.. *தர்ம சம்பூரணனை தரணியில் பிறவி செய்தார்* என்பதுவரை மேலுள்ள அகிலவாசகம் சம்பூரணனை பற்றி பேசுகிறது.. ஆனால் அதற்கு பின் வரும் வாசகங்கள் அவதாரக்கூடு பற்றி பேசுகிறது.. இரண்டையும் நாம் குழப்பி கொள்ளக்கூடாது…  சடம் என்றால் அழிவுக்கு உட்பட்ட ஒரு பொருள்… அப்படி பார்க்கும் போது ஆத்மா அழியாதது அநாத்மா அழிவுக்கு உட்பட்டது.. ஆகவே சடம் என்பது அநாத்மாக்களான காரண மற்றும் சூட்சம மற்றும் ஸ்தூல உடலாகிய மூன்று உடல்களையும் பொதுவாக குறிக்கும் பெயர்.. வழக்கத்தில் யாரேனும் இறந்து விட்டால் அவர் உயிர் பிரிந்து விட்டது என்று நாம் சொல்வோம்.. இப்படி உடலில் இருந்து பிரியும் உயிர்தான் ஜுவாத்மா அல்லது சூட்சம சரீரம் என்று அழைக்கப்படுகிறது.அகிலத்திரட்டிலும் சூட்சம சரிரம் உயிர் என்ற வார்த்தையில் பயன்படுத்தப் பட்டுள்ளதை நாம் காணலாம்.. உதாரணமாக கலைஞான முனிகளிடம் நாராயணர்… *கொண்டு வந்தோம் என்றீரே கூர்மையுள்ள நற்சடலம்*
*பண்டு முறை எல்லாம் பகருவீர்* என்றவுடன்
*”நல்ல சடலம்” இது நாடும்  முற்காலமதில்*
*வெல்லமோர் கோன் வாழும் வெற்றி தெய்வ லோக *உயிர்** என்று வரும் வாசகங்களை கவனிப்போம்.. சடலம் மற்றும் உயிர் என்ற இருவாசகங்களும் சூட்சம உடலை குறிப்பதை உணரலாம்…

மேலும்  *செய்தச்சடமதையுஞ் சுமக்கச்சடம் பார்த்து* என்ற வாசகத்தில் ‘செய்த சடம்’ என்று நாராயணர் சொல்வது கண்டிப்பாக சம்பூரணனின் உடலை குறிக்கவில்லை காரணம் சம்பூரணனின் ஜீவாத்மா/சடத்தில் எந்த மாற்றமும் அப்போது நாராயணர்  செய்யவில்லை   செய்யப்படவில்லை.. அவனது உயிர் அல்லது சடம் ஏற்கனவே உள்ளது போலேதான் உள்ளது.. அப்படியென்றால் நாராயணர் அப்போது செய்த சடம் எது என்றால் அதுதான் அவதாரச்சடலம்.. ஆம் அவதாரசடலத்தை தான் *தேற்றி உயிர் கொடுத்து* அங்கே ஒரு செயல் செய்கிறார்.. அவர் செய்த அந்த சடத்தை *வயிற்றில் ‘சுமக்கும்’* பொறுப்பை வெயிலாளிடம்  கொடுக்கிறார்.. ஆனால் சம்பூரணனின் உடலுக்கும் அவதார சடலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… அது சம்பூரணன் உடன்பிறக்கிறது ஆனால் சம்பூரணன் உடலாக பிறக்கவில்லை..  கீழுள்ள வாசகம் இதை தெளிவு படுத்துகிறது.
*சடம் பிறக்க லோகம் தட்டு மிகமாறி*
*உடன் பிறக்க செய்தார் உலகளந்தோர் கற்பனையால்*
இந்த வாசகத்தில் சடம் என்பது சம்பூரணின் சடம்.. நாராயணர் தனனு அவரது அவதார சடலத்தை சம்பூரணன் சடத்து(உ)டன்பிறக்க செய்தார் .. உடன் பிறத்தல் என்றால் சம்பூரணன் உடலாக பிறத்தல் என்று பொருள் ஆகாது.. நம்முடன் பிறந்த சகோதரனை உடன்பிறந்தவன் என்று சொல்வது போன்ற பொருள்.. உடனே நமக்கு  அப்படி என்றால் அவரது சரீரம் சம்பூரணன் வாழும் போது எங்கே இருந்தது என்று புரியாமல் இருக்கலாம்.. நாராயணரே மாயையின் அதிபதி.. அவரே எனது கற்பனையில் தோற்றுவித்தேன் என்று சொல்லும் போது நமது சிற்றறிவால் அறியாதது ஒன்றும் அதிசயமல்ல.. ஆகவே அதுகுறித்த பெரிய ஆராய்ச்சி இப்போது தேவை இல்லை.   பொன்மேனிக்கூடாகிய நாராயணரின் அவதாரச்சடலம் ஒன்று உண்டு என்பதையும் அதை சுமக்கும்பொறுப்பு சம்பூரணனுக்கு கொடுக்க படவில்லை. 

அய்யாஉண்டு

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *