பூலோக மெல்லாம் பொய்யான மாகலியால்
மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்

சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர்
ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய்

பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து
மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில்

மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து
ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க

வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி

மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால்
இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை

ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா

என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க
அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று

எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து
வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து

மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும்
எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம்20 

கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க
அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன்

அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று
மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே 

சோழன் வினை 

கோளனென்ற மாநீசக் குலத்தி லுதித்துவந்த
ஈழனொரு பொல்லாதான் என்சொல்வா னம்மானை

மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும்
இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே

தெய்வகுலச் சான்றோராய்ச் சித்திர மாகாளி
கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார்

அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து
இந்த அணையடைக்க ஏலுமென்றா னம்மானை

அப்போது சோழன் அந்நீசக் கலியதினால்
இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும்

மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா
தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி

வாருமென்று சொல்லி மன்னவ னேவிடவே
சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து

அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித்
தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ40 

வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான்
செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார்

நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க
இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே

வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்

மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே

குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக்
கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே

என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை
நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே

இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல்
எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார்

கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித்
திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை

அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார்
இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை

நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு
தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன்60 

வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான்
தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள்

சூழ வளைந்து துய்யசான் றோர்களையும்
வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே

சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல்
மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே

அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து
இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம்

சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே
நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக

குட்டையெ டென்றிடவே கூடா தெனவுரைக்கத்
தட்டினான் வைகையிலே தலையைச் சாணான்றனக்கு

ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழமன்னன்
சேனைத் தலைவர் சிறந்தசான் றோர்கள்தம்மில்

கொன்றா னொருவனையும் குளக்கரையி லம்மானை
பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான்

குட்டை யெடென்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர்

முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம் 80 

பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும்
கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி

நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன்
கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை

அப்போது வித்யா தரமுனிவர் தானறிந்து
செப்போடு வொத்த திருமா லருகேகி

மாயவரே உம்முடைய மதலையேழு பேரில்
காய மழித்தான் கரிகாலச் சோழனவன்

என்ற பொழுது எம்பெருமா ளப்போது
அன்றுபுட் டேயருந்தி அவளாட்போல் கோலமது

கொன்று குமாரர்களைக் குசல்செய்த தும்பார்த்து
அன்றுவை கையடைத்து அடிகள்மிகப் பட்டவரும்

ஸ்ரீரங் கந்தன்னில் சிறந்தகோ பத்தோடே
சாரங்கர் வந்து தானிருந்தா ரம்மானை

மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால்
ஓகாளி சோழன் ஊர்வறுமை யாகிடவும்

பன்னிரண் டாண்டு பாரில்மழை பெய்யாமல்
உன்னினாள் மனதில் உடனே மழைசுவறிப்

பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால்
அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே100 

இறந்தசான் றோர்களுட ஏந்திழைமா ரெல்லோரும்
சிறந்த தவம்புரிய சென்றனர்கா ணம்மானை

சென்ற தவத்தின் செய்திகே ளன்போரே
அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல்
இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும்

இறந்த மன்னவர்கள் எழுந்திருந் தெங்களையும்
சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும்

பழிசெய்த சோழனுசர் பகலநரி ஓடிடவும்
அழிவாகிச் சோழன் அவன்மாண்டுப் போயிடவும்

வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்துப்
பரமானப் பெண்கள் பாரத் தவசுநின்றார்

   ஸ்ரீரங்கம் விட்டுச் சுவாமி அனந்தபுரம் ஏகல்   

இப்படியே மாதர் இங்கே தவசிருக்க
அப்படியே மாயன் அவர்ஸ்ரீ ரங்கமதில்

இருக்கும் பொழுது இரணியநீ சக்கலியன்
கருக்காக லோகம் கண்டவிட மேபரந்து

ஸ்ரீரங்க மானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள்
நீதங் குளறி நெறிதவறிப் போனதினால்

முறைவைத்த பூசை முந்தி முறையெனவே
மறையவனும் பூசை வந்தே முகித்திடவே

பொறாமல் மற்றொருவன் பூசையெனக் கென்றுசொல்லி 120 
மறவாத மாயவரை வணங்கிநிட்டை செய்யவென்று

முப்பது வேள்வி மொகுமொகெனத் தான்வளர்த்து
இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால்

என்றவ னெண்ணி ஏற்றவோ மம்வளர்த்து
அன்றவன் வீழ ஆர்ப்பரிக்கு மவ்வளவில்

மறையவனை மாயன் வந்தெடுத்துப் புத்திசொல்லி
நிறையொத்த மாயன் நெடுமறையோ னைக்கூட்டி

ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந் தம்நோக்கிச்
சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே

நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும்
அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில்

வந்த பொழுது வானமதி லுள்ளோரும்
நந்நகோ பால நாரா யணரிடத்தில்

சென்று தொழுது தேவரெல்லாந் தெண்டனிட்டு
இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி

வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி
அந்தமுனி தேவர்களும் அச்சுதரோ டீதுரைக்க

நல்லதென்று அய்யா நாரா யணர்மகிழ்ந்து
வல்ல பரமே சுரரை மிகவாழ்த்தி

ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல்140 
தேச மதைப்பார்த்துத் திருவ னந்தமேகி

இருக்கவே யென்று எழுந்தருளி வந்தேன்காண்
மருக்கிதழு மீசுரரும் மாமுனிவர் தேவர்களும்

நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த
தேசத் திருவனந்தம் செல்லவகை யேதுவையா

அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால்
எல்லா மவன்றனக்கு ஈடாகிப் போகுமல்லோ

கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி
மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன்

பரிகாசங் செய்வானே பார்முழுது மாநீசன்
ஆனதா லங்கேக அச்சுதரே ஞாயமில்லை
மான மழிந்தாச்சே மாகலியன் வந்ததினால்

எல்லாங் கழியை ஈடழிக்கப் பாருமையா
இல்லையே யானால் எங்களுக் கிங்கேதான்

சென்ற இடமெல்லாம் சிறைபோ லிருக்குதையா
என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே

அன்று அவர்களுக்கு அச்சுதரு மேதுரைப்பார்
நன்றுநன்று வானவரே நல்லபர மேசுரரே

கலியேது நீசம் காணேது வையகத்தில்
சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன்160

அனந்தபுரம் போக ஆதியி லென்றனக்குத்
தனந்தசுக முனிவன் சாபமுண் டானதினால்

கொஞ்சநா ளானாலும் குடியிருக்க வேணுமங்கே
வஞ்சகங்க ளில்லாத மாயன்வழி கொண்டனராம்

ஈசர்தனை யனுப்பி எம்பெருமா ளச்சுதரும்
வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந் தேவர்களும்

சங்க மதுகூடித் தத்திதத்தி யாய்வரவே
வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே

   பிரம்ம ரிஷிகள் 

வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக்
களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார்

மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய்
ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார்

அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று
செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து

மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில்
ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர்

பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி
வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால்

அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச்
செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார் 180

அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம்
எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே

வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத்
தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே

வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார்
சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன்

தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப்
பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார்

அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி
இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே

மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று
தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை

உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத்
தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து

அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம்
இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே

எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே
திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார்

நல்லதுதா னென்று நாரா யணர்மகிழ்ந்து
வல்ல இருஷிகளே வாழ்வெங்கே வேணுமென்றார்200 

மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால்
பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார்

அப்போ திருஷியெல்லாம் அவனியி லெங்களுக்கு
இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா

நல்லதுதா னென்று நல்ல இருஷிகட்கு
வல்லத் திருமால் வரங்கொடுப்பா ரம்மானை

பிச்சையது வாங்கிப் பெருமை யதாயருந்தி
மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல்

சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியெனத்
தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து

பூசை பெலிகள் பீடமிட் டேராதிருந்து
ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய்

மாசணு காமல் மனதில் நமைத்துதித்து
ஓசை யுடனே உலக மதில்நீங்கள்

வைகுண்ட மென்று வையகத்தே வாழுமென்று
பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ

தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால்
வந்தங் கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம்

அவரவர்கள் செய்த அக்குற்றந் தான்கேட்டு
எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார்220

நல்லதுதா னென்று நாடி இருஷியெல்லாம்
செல்லப்பர தேசிகளாய்ச் சென்றாரே சீமையிலே

இருஷி களையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து
துரிச முடனனந்த சீமைநோக் கிநடக்கத்

தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத்
தாவமுட னனந்தம் தானோக்கி மால்நடக்க

       எக்காள துர்க்கை
அனந்த புரம்நோக்கி அச்சுதனா ரேகுகையில்  
புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்கக்

கண்டெம் பெருமாள் கால்கொண் டுதைத்திடவே
குன்றுபோ லேயுடம்பும் குஞ்சரம்போல் கைகாலும்

துண்டு மலைபோல் துய்யமூக்கு முலையும்
வாய்கண் ணொருமலையாம் வயிறுமூணு மலையாம்

கொண்டை பன்னிரண்டு குறுக்கமுண் டன்போரே
பண்டே திருமால் பம்பழித்தத் தாடகைபோல்

நின்றாளே யண்டபிண்டம் நிறைந்த சொரூபமதாய்
கண்டாரே எம்பெருமாள் கனத்தவி சேடமென்று

தேவர்களே வானவரே சேத்திரனே வேதியனே
பாவலரே கல்தான் பரும்பெண்ணாய் வந்ததென்ன

சொல்லுவீ ரென்று திருமா லுரைத்திடவே
வெல்லும் புகழ்தேவர் விளம்புவா ரம்மானை240 

ஏம னிணையான எக்காளத் துர்க்கையிவள்
சாமி சிவனார்தன் சொல்லையிவள் தட்டினதால்

கோபித் திவளைக் குன்றுபோல் சாபமிட்டார்
ஏகி வரும்போது இவள்தானு மீசுரரை

வணங்கியிச் சாபமெப்போ மாறுமென்றாள் மாயவரே
அணங்குக்கு ஈசர் அருளினது கேளுமையா

அனந்த புரமதிலே ஆனநதி மேலே
வனந்தமால் பள்ளிகொள்ள வருகின்ற அவ்வழியில்

உன்சாபந் தீர்த்து உன்னை உலகதிலே
பின்சாப மிட்டுப் போக விடைதருவார்

என்று சிவமுரைக்க இப்படியே வந்தவளும்
குன்றுபோ லேகிடந்தாள் குருவேயுன் பாதமதால்

அவள்சாபந் தீர்ந்து ஆயிழை போல்வடிவாய்
இவள்தானும் வந்தாள் எனச்சொன்னார் தேவர்களும்

நல்லதென்று நாரணரும் நாரிதனைக் கொண்டாடி
வல்லவளே யெக்காள மடந்தையே யுன்றனக்கு

ஏதுனக்கு வேணுமென்று என்னோடு கேளுஎன்றார்
வாதுக்கு வல்லகியாள் மாய ருடன்கேட்பாள்

நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில்
பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன்260 

அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா
செப்போடு வொத்த சிவகாமி போலழகு

நன்றாக என்னுடைய நல்லபர்த் தாவுடனே
ஒன்றாக வாழ்ந்து உறவா டிருக்கையிலே

என்பேரி லிச்சை ஏமன்மிகக் கொண்டாடி
வம்புசெய் தென்னுடைய மன்னவனைக் கொன்றான்காண்

ஆனதா லேமனுக்கு அழிவுவர வேணுமென்று
மானத் தவமிருந்து வருந்தினே னீசுரரை

அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி
இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில்

நருட்பெருத்துப் பூலோக நாடுதரியா தெனவே
பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையே யென்றுரைத்தார்

என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும்
மன்னனை வதைத்ததுதான் மறவாம லெப்போதும்

திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கிப்
பவத இயமனுக்குப் பகையாகக் கேட்டிருந்தேன்

ஆனதா லீசர் அறிந்தே யெனைநோக்கி
ஈன முடன்பேசி இகழ்த்தினா ரீசுரரும்

கொஞ்சம் பொறுக்கவென்று கூறினேன் பெண்கொடியே
மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண் டாதிபரன்280 

மலைபோ லுடம்பும் வயிறு மிகப்பெருத்து
அலைபோற் பரந்த அங்கம் பெரும்புடமாய்க்

கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை
வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லிக்

கோபித்தார் முன்னே குன்றுபோ லேகிடக்கச்
சாபித்தா ரென்னை சாமியுன் பாதமதால்

தோன்றினே னென்சாபத் துயரறுத்தேன் மாயவரே
வீன்றிய அந்தகனை வேரோ டறுத்திடவே

வரந்தா ருமையா மாயவரே யென்றுசொல்லி
சிரமுரத்தப் பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை

அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி
இப்போது பெண்கொடியே யான்சொல்லக் கேட்டிடுநீ

அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ
வந்த யுகமாறி வலியபெலத் தர்மயுகம்

உதிக்கும் பொழுதில் உன்தவ சின்படியே
சதிக்குகந்து தானால் சண்டனழி வாகுமென்றார்

அப்போது பெண்கொடியும் மானத் தவம்வளர
இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள்

நின்றாள் தவத்தில் நீலியாய்ச் சண்டனுக்கு
வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க300 

ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே
சோதித் திருமால் திருவனந் தம்நோக்கி

நடக்கத் திருமால் நளின முடன்மகிழ்ந்து
வடக்குக் கயிலாச வழியே வருகையிலே 

வானோர்க்கு அருளல் 

தெய்வலோகத் திலுள்ள தேவாதி தேவர்களும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்

சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில்

கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில்
இருக்கின்ற வானவர்கள் எல்லோரு மெண்ணமுற்று

மான வரம்பு மகிமைகெட் டேகுமுன்னே
வான மதுவிட்டு வடகயிலை போவோம்நாம்

கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால்
அகில மழிவதற்கு அடையாள மித்தனைதான்

அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக் கலியன்வரை
எல்லாஞ் சரியாகி எவ்வோர்க ளானாலும்

கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால்
நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று

வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில்
நாதாந்த வேதம் நழுவிமிகப் போகாதே320 

இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே
முப்படியே யுள்ள ஊழிவி தியெனவே

கடைச்சாதி யான கலிச்சாதி யானதிலே
படையாமல் நம்முடைய பங்குவம்மி சத்தோராய்

ஒண்ணா மதுகுலந்தான் உயர்தெய்வச் சான்றோரில்
வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய

ஒன்றாக நாமளெல்லாம் உவந்துதவஞ் செய்யவென்று
நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி

தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில்
எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று

பிறந்திறந்த போதும் பின்னுமந் தப்பிதிரில்
மறந்திடா வண்ணம் மனுவி லுதித்திடவும்

ஆதிமகா மூலத்து ஆதிநா ராயணரே
நாதியா யெங்களையும் நாடிமிக வந்தெடுத்து

எங்கள் துயரம் எல்லா மவர்மாற்றி
சங்கடங்க ளில்லாத தர்ம பதியருளிக்

கிரீடமுஞ் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும்
வீரியமாய்த் தந்து மேலோக முமகிழ

எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து
மண்விண் புகழ வரந்தாரு மென்றுசொல்லி340 

நின்றா ரதையும் நெடியோன தையறிந்து
கொண்டாடி யேதெனவே கூறினார் தேவருடன்

நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க
அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி

நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான்
வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார் 

பசுவும் பெண்ணும் 

அச்சுதரும் தானடந்து அனந்தபுர மேகுகையில்
பச்சுடம்பாய் நின்ற பசுவுமோ ரேந்திழையும்

நாராய ணாவெனவே நாடித் தவமிருக்கச்
சீராய்த் திருமால் சிறந்ததவங் கண்டருளி

ஏது பசுவே ஏந்திழையே வுங்களுக்கு
நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன்

அப்போ துபசுவும் அச்சுதருக் கேதுரைக்கும்
இப்போது மாயவரே என்னுடைய புத்திரனைக்

கொல்லும் படியாய்க் கோதை யிவள்தவசு
செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி

புத்திரனு மாண்டால் பிள்ளையா யென்றனக்கு
உத்திரக் கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று

நின்றேன் தவசு நீலவண்ண ருண்டெனவே
என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையும்360 

நன்றாகப் பார்த்து நாரா யணருரைப்பார்
ஒண்டொடியே உன்றன் உற்றவழக் கேவுரைநீ

அப்போது பெண்கொடியும் அச்சுதரைத் தானோக்கிச்
செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள்

அய்யாவே யெனக்கு ஆளான வீரனைப்போல்
மெய்யா யொருமதலை விமல னருளினர்காண்

மதலை வளர்ந்து வயதுபதினா லாகுகையில்
குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து

இருக்குமந் தநாளில் இப்பசுவின் புத்தினர்தான்
உருக்கமுட னென்பேரில் உள்ளாசை கொண்டான்காண்

அதட்டினே னானதற்கு ஆகட் டெனவுறுக்கி
மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி

ஆனதி னாலடியாள் அறமெலிந்து தான்வாடி
போனேன் பிரமா பூசாந்திரக் கணக்கில்

உள்ள விதியோ ஊழி விதிப்படியோ
கள்ளக் கணக்கன் கண்மாயமோ எனவே

பார்த்தேன் மகன்தான் படவிதி யங்குமில்லை
ஆர்த்தேன் நான்கோபம் அக்கினிபோ லெமீறி

சிவனுக் கபயம் செவியறிய விட்டேனான்
இவளுக்கு வேண்வடி ஏதுசெய்வோ மென்றுசொல்லி 380 

ஒருவரு மென்னுடைய ஊழிவிதி கேட்கவில்லை
வருவது வரட்டெனவே வந்தே தவசுநின்று

மகன்பழிதான் வாங்க மாயவரே உம்மருளை
அகமிருத்தி நானும் அருந்தவசு செய்தேனான்

என்றுரைக்க ஏந்திழையும் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்றுநன்று பெண்கொடியே நல்ல தவம்புரிந்தால்

நினைத்த படியே நிறைவேறு மென்றுரைத்துக்
கனத்த பசுவேநீ கட்டாய்த் தவமிருந்தால்

உன்றனக்குச் சித்திரனும் ஒருகன்றாய்த் தான்பிறந்து
உன்றன் மகனார்க்கு ஏவல்செய்ய வைத்திடுவேன்

என்று பசுவதுக்கும் ஏந்திழைக்குந் தானுரைத்து
அன்று திருவனந்தம் அவர்நோக்கித் தானடந்து 

சேத்திர பாலனுக்குச் சொன்னது 

கேத்திரனும் வேதியனும் கிருஷ்ண ரடிபணிந்து
மூர்த்திகளுங் காணாத முதலே முதற்பொருளே

உன்மகவாய் வந்துதித்த உயர்ந்த குலச்சான்றோர்
தன்கமவோ ரங்கே தவித்துமுகம் வாடிருக்க

நீசனுட குடியில் நீர்போகக் காரியமோ
தேசமெல்லாம் நீசனுட செய்திகேட் டேயிருந்தும்

போவதோ தேவரீர் பொல்லா தவன்குடியில்
தேவரீ ரும்முடைய சிந்தையெள் போலறியேன்400 

என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று கேத்திரனே நான்சொல்லக் கேட்டிடுநீ

சான்றோர்க் குபகாரம் தான்செய்யு முன்னாகப்
பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்ல வேணுமென்றும்

அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும்
எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவை யாதபடி

சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து
ஆன்றோர்தா னெங்களையும் அழியவைத்தீ ரென்றுரைப்பான்

ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல்
ஈன முறுநீசன் இடம்போறே னென்றுரைத்தார்

அப்போது கேத்திரனும் அன்பா யகமகிழ்ந்து
செப்போடு வொத்த திருமாலைத் தெண்டனிட்டு

மாயனே உன்றன் மகிமையதை யாரறிவார்
ஆயனே வும்முடைய அளவறியக் கூடாது

என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று
மன்று தனையளந்த மாயப் பெருமாளே

பூசை புனக்காரம் பெரியதீ பத்துடனே
நீச னுமக்கு நினைத்துநிதஞ் செய்வானே

எந்தனக் கென்ன இலக்குக் குறியெனவே
சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும்420 

என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக் கக்கேளு

கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்து அன்றுமுதல்
சலிவாகி யென்மேனி தண்ணீ ரறியாது

எண்ணை யறியேன் இலட்சுமியை நானறியேன்
வண்ணத் துகிலறியேன் மறுபுடவை தானறியேன்

பூசை யறியேன் பொசிப்பறியேன் பூவறியேன்
ஆசை யறியேன் அக்கக் கிளையறியேன்

மெத்தை யறியேன் மேவுஞ் சொகுசறியேன்
ஒற்றைபோ லானேன் உட்கார்ந் திருக்கறியேன்

மேடை யறியேன் மகிழுஞ் சிரிப்பறியேன்
தோழமையை நானறியேன் சுருதி மொழியறியேன்

ஆளவை குண்டம் அரசுமே டையறியேன்
இத்தனைகள் தானறியா(து) எண்ணமது நானறியேன்

புத்தியுள்ள கேத்திரனே பூசைபூ ஏற்பதெல்லாம்
மாயக் கலியறுத்து வாய்த்தநா டாள்வார்க்கு

ஞாயமுள்ள பட்டம் நான்சூட்டித் தர்மமதாய்
இராச்சியத்தை யாளவைத்து இத்தனையு மேற்பதல்லால்

அதற்குமுன் பூசை புனக்காரமுத லேற்பதில்லை
இதற்குமுன் னேற்பவர்கள் எனக்காகா தேபோவார்440

என்றந்தக் கேத்திரனுக்(கு) இத்தனையுந் தான்கூறி
அன்றந்த நீசன் அவ்வூரி லெம்பெருமாள் 

புலச்சிக்கு அருளியது 

நீச னிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான்
தேச மறிய செச்சை புலச்சிகண்டு

ஒளித்தா ரொருஇடத்தில் ஊர்தேச முமறிய
விழித்தாள் புலச்சி விதமறிந் தெல்லோரும்

நீச னறிந்து நெருங்கமணி மேடைவைத்து
வீசை முறுக்கி விசையாக அந்நீசன்

கோவில் சிவாலயங்கள் கொந்துகொந் தாயமைத்துப்
பாவித்துப் பூசை பண்ணத் துணிந்தனனே

மேடைக்குக் கால்கள் மிகுத்தத்தங்கத் தால்நிறுத்தி
வாடைக் கமகமென வாத்தியங்கள் நின்றதிர

தீபம் புலச்சி தீவட்டித் தான்கொடுக்கப்
பாவக் குடும்பத்தோர் பண்ணினார் பூசையது

நம்பூரி வேதியர்கள் நாடி யகமகிழ்ந்து
பம்பைப் பரத்தை பகட்டுக்கை காட்டலோடு

நாடி மகிழ்ந்து நல்ல அனந்தபுரம்
கோடிநூ றாயிரம்போல் கூண்டரிய தீபமொடு

தேடரிய மாமறையோர் சிந்தைகளித் தேயிருக்க
நாடதிக மாகி நல்ல அனந்தபுரம்460 

மாத மும்மாரி வருசிக்கத் தான்பொழிந்து
வாரமுடன் செந்நெல் மாறாம லேவிளைந்து

தென்னங் குலைசிதறித் தேர்ப்போ லலங்கரித்து
என்னென்ன பவிசு எல்லா மிகப்பெருத்து

ஒப்பில்லாத் தேசம் உற்ற அனந்தபுரம்
செப்பத் தொலையாது சிறந்தப் பெருமையது

நன்றாகச் சீமை நாடோறு மேவாழ்க
அன்றுஸ்ரீ ரங்கர் அங்கே யகமகிழ்ந்து

நீசன் நினைத்த நினைவுபோ லெம்பெருமாள்
தேசப் பவிசும் சிறப்பு மிகக்கொடுத்து

நீசன் தனக்கெதிரி நீணிலத்தி லில்லையென்று
தோசக் கலிப்புவியைச் சூட்டியர சாளுகையில் 

கலியரசன் தவம் 

மதலைய தில்லாமல் மனஞ்சலித்து மாநீசன்
குதலையி னேதுவினால் கொஞ்சஞ் சடைவாகி

ஆதித் திருமால் அடியை மிகப்போற்றிச்
சோதியே யென்றனக்குச் சிறுவனொன்று தாருமென்றான்

அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை

கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில்
திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால்480 

மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப்
பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை

கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி
நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப்

போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில்
சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க

நீசன் தவசு நிற்க வொருமறையோன்
வாசக் குழலோடு மருவினன்கா ணம்மானை

கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல்
தண்டுமீ றிக்காமம் சலத்தில் விழுந்ததுவே

இரைநமக் கென்று எட்டியொரு கொக்காவி
விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்ப முண்டாகித்

தண்ணீரில் பிள்ளை தான்பெற்று தம்மானை
வெண்ணிற மான மிகுத்தபிள்ளை தான்மிதந்து

போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன்
தாப முடன்சிசுவை தானெடுத்தா னம்மானை

மதலை தனையெடுத்து வளர்த்துப் பருவமதில்
குதலை தனையாற்றில் குளியோட நீச்சலதும்

தோணியே றுந்தொழிலும் சுருக்குக்கப் பலேற்தொழிலும்
ஆணிப்பொன் முத்து அதுவளருந் தலமும்500 

வெள்ளித் தலமும் மிகுத்தபொன் னுத்தலமும்
உள்ளவித்தை யான உற்றரச வாதமுதல்

கள்ள உபாயக் கபடுபலத் தந்திரமும்
வெள்ளை நீசன்தனக்கு விதமா யவர்வருத்திச்

செங்கோ மட்டியெனத் தேசநசு ராணிகளில்
பெண்கள் ரண்டுபேரைப் பேறாய் மணமகித்து

இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங் கோமட்டியில்
பருத்த வெள்ளைநீசன் பண்பாக அங்கிருக்க

நின்ற தவசு நெறியழிந்து மாநீசன்
அன்றந்தப் பாவி அனந்தபுரம் வந்தனனே

வந்து சடைவாய் மாநீசன் தானிருக்கச்
சந்துபயில் மாயவரும் தானறிந் தேதுரைப்பார்

மன்னவனே யுன்றனக்கு மதலையது கிட்டினதோ
என்ன விதங்காண் ஏகிவந்த தென்றுரைத்தார்

அப்போது நீசன் அவனேது சொல்லலுற்றான்
இப்போது மாயவரே யான்தவசு நிற்கையிலே

மறையவனுந் தேவியோடு மருவினதைக் கண்டாவி
இறையவரே யென்றனக்கு இந்திரியந் தானிளகி

ஆனதால் தவசு அழிந்தே னதினாலே
ஈனமுடன் மதலை இல்லையென்றா ரீசுரரும்520 

மதலையில் லாதிருந்தால் வையகத்துக் கேராது
குதலையல்லோ வேணும் குவலயத்தை யாளுதற்குச்

செங்கோ லரசு செலுத்தியர சாளுதற்கு
முன்கை சிரைத்து முறைகர்மஞ் செய்திடவும்

பிள்ளையில்லா தேயிருந்தால் போதுமோ புண்ணியரே
வள்ளலந்த மாலும் மறுத்துரைப்பா ரம்மானை

சொந்தமுள்ள சோதிரியைச் சுறுக்காய் வரவழைத்து
உந்தனக்குப் பிள்ளை உண்டோதா னில்லையென்று

வருத்திக்கே ளப்போ வகைசொல்வான் சோதிரிசி
பொருத்தமா யாயன் புகன்றாரே நீசனுக்கு 

மருமக்கள் வழி 

நல்லதென்று வேதியனை நாடி யவனழைத்துச்
சொல்லவென்று நீசன் தொகுத்தவனோ டேகேட்க

அப்போது சோதிரிசி அந்நீ சனைப்பார்த்து
இப்போது கேள்நீ ஆகமத்தி லுள்ளமுறை

பெற்றாலு முன்மகவு பேருலகம் ஆளாது
மற்றோர்பெற் றுன்மருகன் ஆளுவான் வையகத்தை

என்றேதான் சாஸ்திரமும் இசையுதுகாண் மன்னவனே
அன்றேதான் சோதிரியும் அந்நீசனுக் குரைத்தான்

நல்லதென்று நீசன் நாடி யகமகிழ்ந்து
வல்ல வகையாலும் வைத்தபங்குக் கிட்டுமென்று540 

சோதிரியைத் தானனுப்பித் துயர்நீங்கி யேயிருந்தான்
ஆதி முறைப்படியே அவன்மரு கன்றனக்குப்

பட்டந்தா னென்று பறைசாற்றி யாண்டிருந்தான்
திட்டமுடன் நீசன் தேசமதை யாளுகையில்

முன்னீசன் விந்தில் உதித்துவளர்ந் தேயிருந்த
அந்நீச னான அசுபக் கிரிவளமை வெண்ணீசன் 

சொல்லவே நாதன் தொகுத்துக்கே ளன்போரே
வல்லசெங் கோமட்டி வையகத்தி லந்நீசன்

வெள்ளி மலையும் மிகுத்ததங்கப் பொன்மலையும்
கள்ளமில்லா வாதம் கைகண்ட வித்தையதாய்

நிதியிற் பெருத்து நெருங்கப் படைகூட்டிப்
பரியானை ஒட்டகங்கள் பலபடைகள் சேகரித்து

ஆளும் படையும் ஆயுதங்க ளஸ்திரமும்
வேழும் பெரிய வெகுவாணு வங்கூட்டித்

தன்னோ டினங்கள் சதாகோடி யாய்ப்பெருத்து
என்னோ டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று

அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து
எவர்தா டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று

அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து
எவர்தா னெதிரியென்று எண்ணமுற்று மாநீசன்

நட்சேத் திரத்தை நகட்டிருபத் தெட்டாக்கி
வைத்தானே மாதம் வருசமது மாறாய்560 

முன்னீசன் வைத்த முறைமை யிலுங்கூட்டிப்
பின்வந்த நீசன் பிரித்தானொன் றேற்றமுடன்

அரிநமா வென்ற அட்சரத்தை விட்டவனும்
விரியாய் அனாதியென விளம்பினான் வையகத்தில்

இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள்
அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று

பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச்
சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில்

இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி
அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான்

ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய்
வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப

படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான்
தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி

ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே
பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச்

சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த

தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே580 

வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்

மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே

சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால்

அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே

ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்

மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே

சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு

வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
செந்தார மாயன் சேனை வருவதையும்

அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார்
வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி

நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத்
துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால்600 

எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே
மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான்

அப்போது அந்த அன்னீத மாநீசன்
இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று

கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித்
தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே

வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கிச்
செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக்

கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு
மெய்க்குணம்போ லுள்ள விதமான சாதியொன்று

வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்கத்
தருவித்து நல்ல சாதியொன் றென்றுரைத்தான்

அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார்
இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய

ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார்
வேகுன்ற நீசன் விளம்புவா னமைச்சருடன்

ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய
ஏரையொத்த மந்திரியே இயம்பு மெனக்கேட்டான்

அப்போது மந்திரிகள் அந்நீசனுக் குரைப்பார்
இப்போது வேறொருவர் இருந்தாலா காதெனவே620 

நல்லவகை யான நாடுஞ்சான் றோர்களைத்தான்
வல்லவகை யாலும் வருவித்து வைப்பீரால்

ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக் குரைத்தார்
வேகும் பொழுதில் வெற்றிசான் றோர்களுக்கு

ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து
வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்துப்

பட்டயமுங் கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டுச்
சட்டைக்குல் லாகொடுத்துத் தலைப்பா மிகக்கொடுத்து

வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே
வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள்

ஊழி விதியால் உடையோனை நெஞ்சில்வைத்துக்
காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார் 

கலிநீசன் சாபம் 

அப்படியே காத்திருந்து அவர்வருகும் வேளையிலே
முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால்

அந்தநீ சன்தனக்கு அழிவுவரும் வேளையிலே
இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே

நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து
வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே யவ்வினத்தோர்

சீவன்போ கும்வேளைச் செப்புவான் சாபமொன்று
காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத் தீரேயென்று640 

கோபித்தான் சான்றோரைக் கூறழியப் பேசியவன்
சாபித்தான் சான்றோர்க்குச் சத்தியில் லாநீசன்

என்குடும்பத் தோர்கள் இராச்சியத்தை யாளுமட்டும்
உன்குடும்பத் தோர்கள் ஊழியங்கள் செய்துமிக

அழுந்தப்படு வாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு
விழுந்த மொழியாய் விரைந்துரைத்தா னேநீசன்

சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தா னவன்றன்
வல்லி யுடன்பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான்

நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு
மாய வலையாய் வளைந்ததுகா ணன்போரே

தேவ ரதையறிந்து திருமா லிடமேகி
மேவலர்கள் வந்து விளம்பினா ரப்போது

மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்குப்
பாவிநீ சன்சபித்த பழிசாபங் கேட்டீரோ

சாபத்துல்ப மெல்லாம் தானுரைத்தா ரச்சுதற்குத்
தாமத் திருமேனி தானுரைப்பார் தேவருக்கு

மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு
அந்நீசன் சாபம் அதுவுங் குறிதான்காண்

வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு
அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது660 

எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும்
அத்தனையும் நீசன் அவனேற்கக் காரியந்தான்

நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான் றோர்களுக்குத்
தொல்லைவந்தா லுந்தீர தொகைவைத்த லக்குமுண்டு

சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு
வேழமிட் டிருப்பேரை வெட்டினான் பாரறிய

நீசனுக்குச் சான்றோர் நித்திரைக ளில்லாமல்
வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச் சாபமிட்டான்

எல்லா மறிவார் ஈசர்முதல் லோகம்வரை
வல்லாண் மையான வாயத்ததே வாதிகளே

நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்குப்
போமென்னத் தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து

மாயவரு மங்கே மனஞ்சடைத்துத் தானிருந்தார்
வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருக்க

நீசனிட்ட சாபம் நீதிச்சான் றோர்களுக்கு
மாயவினை போலே வளைந்ததுகா ணன்போரே

தம்பி தமையனுக்குச் சத்துருப்போல் தானாகி
வம்புக்குங் கோளு மாநீச னோடுரைத்து

அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து
முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான் 680 

இப்படியே சான்றோர் இவர்கள்நிரப் பில்லாமல்
அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய் 

கலிநீசன் கொடுமை 

பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார்
அறிந்துதான் நீசர் அவர்கள்தொக் காச்செனவே

தாலிக்கு ஆயம் சருகு முதலாயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம்

தாலம தேறும் சான்றோ ருக்காயம்
தூலமுட னரிவாள் தூருவட் டிக்காயம்

தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே

வட்டிக்கும் ஆயம் வலங்கைசான் றோர்கருப்புக்
கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே

பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற
ஊழியங்க ளெல்லாம் உரைக்கக்கே ளன்போரே

பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான்

நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்

நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான்
கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான்700 

சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக்
கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்

மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு
வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான்

வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு
வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு

தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை
வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான்

காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும்
மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர்

கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே

இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும்
பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே

பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே
வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும்

சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று
மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே

உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம்
நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே720 

இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம்
அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும்

ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால்
நீசக்குலத் தோர்விரட்டி நெடுந்தூரங் கொண்டடிப்பார்

பின்னுமந்தச் சான்றோரைப் பொல்லாதான் கொள்ளுகின்ற
அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே

உப்பா லுவரா உபய மெடுத்தவரை
ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான்

குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல்
களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான்

சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம்
வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான்

வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக்
கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து

சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப்
பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான்

ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம்
வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால்

ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி
வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல் 740 

நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி
நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ

ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர்
நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர்

கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர்
பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை

பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே
விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார்

இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி
அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து

அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு
வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக்

கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும்
தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும்

ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும்
நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை

அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு
இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப்

பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து
மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன்760 

சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல்
வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப்

பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த்
தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே

பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம்
மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே

முக்காலி கட்டி முதுகி லடித்துமிக
மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே

சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம்
ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது

கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள்
நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும்

சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம்
வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண்

சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும்
வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல்

சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம்
கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான்

தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும்
மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல்780 

சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம்
ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும்

பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை
கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான்

நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம்
வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது

அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும்
எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை

எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும்
அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை

பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து
மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து 

ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல் 

கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு
வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான்

உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும்
என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும்

சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது
வாணாள்க் கிடறு வருமடா மாநீசா

முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும்
உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா800 

ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா
மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில்

பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில்
நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண்

அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக்
கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண்

கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன்
பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில்

மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும்
நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான்

கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே
தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும்

வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார்
தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான்

அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச்
செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது

சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன்
பத்து தலையான பார அரக்கனுக்குத்

தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது
வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே820 

பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில்
மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார்

கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி
தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து

நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச்
சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா

உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன்
தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால்

சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு
நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக்

காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு
ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால்

அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய்

கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால்
அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா

சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்

தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால்840 

கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு

சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா

திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா

ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய

அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து

இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்

குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து
வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா

கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே
வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு

தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய்

என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே
அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்860 

மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான்
ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே

சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு
வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே

சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை – என்
வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை

என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு
வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை

நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின்
ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும்

கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை
தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை

என்றந்த நீசன் இத்தனையு மாயருடன்
தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும்

பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி
ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே

இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா
உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே

ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும்
மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார்880 

அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து
வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான்

மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச்
சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு

நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே
அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால்

அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன்
எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ

என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப்
பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள்

இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா
அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ

வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ
ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ

என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே
உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா

முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு
இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா

அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச்900 

சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி
பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும்

இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது
நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ

பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத்
தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது

ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம்
தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ

பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம்
பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான்

அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான்
வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ

என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே
அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்

நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால்
என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன

போபோ நீதானும் போகு மிடந்தனிலே
நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை

அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே
இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை 920 

அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல் 

போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில்
வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு

எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும்
நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா

எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து
வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி

நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப்
பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும்

நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித்
தாடாண்மை யான சத்தியமா யென்றனையும்

ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்

வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு
நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி

மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய
திரமான வாயு சேடன் முதலறிய

வருண னறிய மதியு மிகவறிய
தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன்

அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால்
பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார் 940

என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான்
அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி

நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய
தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட

ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி
வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய

வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க
வீசுவீ சென்று உலாவி யதுவீச

வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க
மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று

மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம்
தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை

கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து
பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம்

உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி
கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே

சிப்பாயி யோட சுபேதாருந் தானோட
அப்பப்பா வென்று அந்நீசன் தானோட

பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது
ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ 960 

அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள்

மாய னனந்த புரத்திலே வாழுமட்டும்
நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில்

ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன்
பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம்

என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக
அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள்

நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி
வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார்

இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே
அப்படியே மாயவரும் ஆனதெய் வாருடனே

இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம்
ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று

சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப்
பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே

திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப்
பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி

அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே980 

அன்றந்த சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே

அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல்
நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித்

தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும்
மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக்

கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை
வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி

வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க
நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார்988

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *