அய்யாவழி

அய்யாவே என்றும் துணையாக உண்டு.

This slideshow requires JavaScript.

இந்து என்ற வார்த்தை நமது வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், பகவத்கீதை, சைவ சித்தாந்தம், அகிலத்திரட்டு அம்மானை போன்ற எந்த இந்து மத புனித நூல்களிலும் சொல்லப்படாத போதும், வழக்கத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் இவர்களின் தேவியர்கள், நாராயணரின் அவதாரங்கள், பிள்ளையார், முருகன், ஐயப்பன், பகவதி அம்மன், பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன் அம்மன், அனுமன் போன்ற தெய்வங்களையும், மற்றும் அந்தந்த பகுதிகளின் பல்வேறு பெயருடன் காணப்படும் சிறு தெய்வங்களையும் வழிப்படும் மக்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு வேதத்தினை அடிப்படையாக கொண்ட நமது இந்து மதம் வைதீக மதம் என்றும், சனாதன தர்மம்(என்றும் அழிவில்லாத,நிலையான அறம்) என்றும் ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு இருந்தது. பின்னரே வெளிநாட்டினரால் நமது தர்மம் இந்து மதம் என்று அழைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி முஸ்லிம், கிருஸ்துவர்கள் தவிர்த்து மற்ற எல்லோரும் இந்து மதத்தவராக கருதப்படுவார்கள்.

அய்யா யார் என்பதை நாம் முதலில் அறிந்தால் மட்டுமே அய்யா வழி இந்து மதமா இல்லையா என்று சொல்லமுடியும். அய்யா நமக்கு தந்த அகிலத்திரட்டு அய்யா யார் என்று கூறும்போது “ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுப்பண்ணி” என்கிறது. மாயோன் என்றால் நாராயணர் ஆவார். அந்த ஆதி நாராயணர்தான் நமக்காக கிருஷ்ண அவதாரத்தை முடித்து கலியுகத்தில் வைகுண்டராக வந்ததாக அகிலம் கூறுகிறது.

“பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்த தரணியில் வந்த ஞாயம்”.

“நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு”
என்ற அகில வாசகத்தின் மூலம் நாரணரும், சிவனும் ஒருவரே என நமக்கு உரைக்கிறார்.

“தாணுமா லயனும் நானே” என்ற இறைவனின் வாக்கின் மூலம் மும்மூர்த்தியும் ஒரே மூர்த்தியாக வைகுண்டமாக வந்ததை அறியலாம்.

அய்யா நமக்கு அருள்நூல் மூலம் எப்படி கட்டளையிடுகின்றார் என்றால்

“ஒரடியால் உலகளந்த உண்மை தனைச் சொல்மகனே”
“அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே”
“ஆலிலை மேல் பள்ளிகொண்ட அருமை சற்றும் சொல்வாரில்லை”
“பத்தவதாரம் பிறந்த பாதைகளைச் சொல்மகனே”
“ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒரு பதினாயிரத்து உற்ற பெண்கள் தங்கள் முன்னே
மாப்பிள்ளைய் நானிருந்த மாயச்சித்தைச் சொல்மகனே”
“வேதாந்தம் சித்தாந்தம் விளம்பி வைத்தேன் வையகத்தில்”
நமது இந்து மத புராண கதைகள் பலதை ஒற்றை வரியில் அகிலத்தில் அற்புதமாய் தந்துள்ளார். ,

“காமனை எரித்த ஈசன்…..,”
நாரணரும் வேதா நாடிப் பெரும் போரில்
காரணரே நீரும் கனல்கம்ப மானோரே”
“குடைப்போல் குன்றை எடுத்தாய் முப்புரகோட்டை தனை எரித்தாய்”
“புட்டுக்காய் வைகை தனில் மண்சுமந்து
பிரம்படிகள் பட்டதுவும்..”
“ஆறு முகமானதொரு ஆண்பிள்ளை யைதான்
பேறுடனே நமக்குப் பிறக்க வேணுமெனவே
சரவணப் பொய்கையிலே சாம்புவனை நினைத்து
அரகரா அவள்தான் அன்று நின்ற தவமும்”
“காலனைக் காலால் உதைத்தக் கடவுளார் தான்மகிழ்ந்து “
“மூன்றோரை நெஞ்சில் வைத்து ஓங்கார மாகாளி தக்கனையுங் கொன்று. ..”
“மாடேமேய்த்துத் திரிந்தாய் மாவெலியைச் சிறைவைத்தாய்”

இந்து மத இதிகாச, புராணங்களில் வருகிற நாரதர், நந்தீஸ்வரர், அகத்தியர், வியாசர், கலைக்கோட்டு மாமுனி, ரோமரிஷி, பராசரமுனிவர், போகர், பரிசித்து, மார்கண்டேயன் போன்றோர்களுடன், தருமிகளும், தேவர்களும், வானவரும், முனிவரும், ரிஷிகளும், கிம்புருடரும் அகிலத்திரட்டிலும், அருள்நூலிலும் வருகிறார்கள்.

மேலும் இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, வருனன், வாயு, எமன், காலன், தூதன், சித்திரபுத்தன் போன்றவர்களும் அகிலத்தில் உண்டு.

இப்படியாக அய்யா நமக்கு தந்த வழியானது இந்து சமயத்தில் உள்ள அனைத்தையும் ஒன்றிணைத்து இறைவன் ஒருவரே என்ற உண்மையை காட்டுகிற வழியாகவே உள்ளது.
நமது இந்து மதத்தில் இறை வழிப்பாட்டு முறைகளில் வெவ்வேறு வழி முறைகள் காணப்படுகிறது. உதாரணமாக பெருமாள் கோவிலில் வழிப்படுவதை சேவைசாயித்தல் என்றும் கூறுவர், பக்தர்கள் மூன்று நாமம் பூசுவர், துளசி தீர்த்தம் கோவிலில் கொடுக்கபடுகிறது. சிவன் கோவிலில் வழிப்படுவதை பூசை என்றும், வில்வ இலையும், விபூதியும் கொடுக்கப்படுகிறது. வழிப்படும் முறை மாறுப்பட்டாலும் மதம் ஒன்று தான்.

இதுபோன்றே அய்யா வழி இறைவனை வழிப்பாட்டு முறையில் மட்டுமே மாறுப்படுகிறது. சிலை, பூஜை, புனஸ்காரம், பத்தி, சூடம், தீபாரனை போனற சரியை, கிரிகையை முறையை தாண்டி எங்கும் நிறைந்த இறைவனை நமக்குள்ளே காணும் வழிப்பாடு ஆகும். நம்மை படைத்த இறைவனை நமது அன்பினால் மட்டுமே காணமுடியுமே அல்லது காணிக்கை, கைகூலி, போன்றவையால் காணமுடியாது என்பதை வலியுறுத்தும் வழி ஆகும்.பல இறைவன் இல்லை என்றும், பல்வேறு பெயருடன் நாம் வழிப்படுவது ஒருவரே என காட்ட ஒன்றாக வந்தவர்தான் நமது அய்யா.

அய்யா வழி என்பது
சைவம் – சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடுவது
வைணவம் – திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடுவது
சாக்தம் – உமையை முழுமுதற்கடவுளாக வழிபடுது
காணாபத்தியம் – கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடுவது
கௌமாரம் – முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடுது
சௌரம் – சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடுது
என தனிதனி மரங்களாக உள்ளதை ஒன்றாக இணைத்து எல்லாம் ஒன்றுதான் என்று தோப்பாக தந்துள்ளார் நமது தோப்புபதி அய்யா.

மொத்தத்தில் அய்யாவுக்குள் சிவன், விஷ்ணு, பிரம்மா, பார்வதி, பகவதி, லஷ்மி, சரஸ்வதி, கணபதி, முருகன் என அனைவரையும் காணலாம்
அய்யா எல்லோருக்கும் ஒரு போலே ஈசனாக இருக்கிறார்.

அய்யா உண்டு