அய்யா சரணம்!!                                              அய்யா துணை                                         வைகுண்டா சரணம்!!

வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு, பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா”… அதாவது அகிலத்திரட்டை படிக்கவில்லை/படிக்க முடியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, யாராவது ஒரு அன்பர் வாசிக்க நாம் கேட்டு கொண்டு, எப்பொழுதும் இறைநினைவாகவே இருந்தாலே, நாம் பிறந்த இப்பிறவியின் பயன் தீர்ந்து, பூரணநிலை அடைந்து தருமயுகம் காணலாம்….
“மலடியும் இக்கதையை மாவிருப்பத்தோடு இளகி, தலமளந்தோனை நாடி தான் கேட்பாளாகில், என்னாணை, பார்வதியாள் ஈஸ்வரியும் தன்னாணை உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா”.. அதாவது தாய்மையடைய தகுதியில்லா ஒரு பெண் கூட, எம்பெருமான் தந்த அகிலத்திரட்டு அம்மானை என்ற ஏட்டை யாராவது படிக்க, மனவிருப்பத்தோடு உள்ளம் உருகி கேட்டால் சத்தியமாக அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று, அம்மையுமையின் மீதும், அவர்மீதும் ஆணையிட்டு கூறுகிறார்….

நாராயணரின் சத்தியவாக்கு

“குட்டமது கொண்டோர் குணம் வைத்து கேட்பாரால், திட்டமது சொன்னோம் தீரும் திருவானை”…. அதாவது ஒரு மிக மோசமான நோயான தொழுநோயால் அழுந்தி பாதிக்கப்பட்டு வருபவர் கூட, மனச்சஞ்சலத்தையும் விட்டொழித்து நாராயணா! எல்லாம் உமது கருணையே என நினைத்து, மனமுறுகி ஒரு நிலை மனதோடு அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்க கேட்டு வந்தால், அவனைப் பிடித்துள்ள அந்நோய் முதல் பிறவிபிணி வரை உறுதியாக தீர்ந்து போய்விடும் என்று அம்மை மகாலெட்சுமி மீது ஆணையிட்டு கூறுகிறார்….

“பாக்கியம் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழ்வோர்க்கு, நோக்கிய கருணையுண்டாம் நோயில்லாது இருந்து வாழ்வார்.தாக்கிய இவ்வாசகத்தின் தன்மையைத் தவறிடாது நம்புவோர்க்கு, வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே”… அகிலத்திரட்டு ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ள அத்தனை செய்திகளின் தன்மைகளையும், சிறப்புகளையும் உண்மை என நம்பி, அதன்படி வாழ்ந்து வந்தவர்கள் பிறவிபிணி நோய் தீர்ந்து, வைகுண்டலோகம் சென்று மீண்டும் பிறப்பு, இறப்பில்லாத வாழ்க்கை வாழ்வார்கள் என்று உறுதியிட்டு அய்யா கூறுகிறார்.நமக்கு பாக்கியத்தை தர அய்யா வந்திருக்கிறார்.நாமும் அப்பாக்கியத்தை பெற்று மீண்டும் பிறப்பில்லா தருமயுக வாழ்வை பெற முயற்சி செய்வோம்….

“தினமொரு நேரம் எந்தன் திருமொழி அதனைக் கேட்டால், பனிவெள்ளம் போலே! பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்!. கனிமொழி சோதிவாக்கும் கையெழுத்து ஆதிநோக்கும் துணிவுடன் கேட்டோர் உற்றோர் தொலைத்தனர் பிறவி தானே”…. அதாவது தினமும் ஒரு வேளையாவது இந்த ஆகமச் செய்திகளை கேட்டு வந்தால், சூரியனைக் கண்டதும் பனித்துளிகள் மறைந்து போவது போல, நம்மளை பிடித்திருக்கும் ஊழ்வினைகள் சத்தியமாக அகன்று போகும் என்றும், இது கலைவாணியின் மனமிர்ந்து வெளிப்படையான வார்த்தையும், அதை தன் திருக்கரங்களால் எழுதுகின்ற எம்பெருமானாகிய மகாவிஷ்ணுவின் விருப்பத்தையும் திடமாக கேட்டு, தெளிவாக புரிந்தோரும், அதற்கு உதிவியாக துணை புரிந்தோரும் பிறவிபிணி எனும் கொடிய துன்பத்திலிருந்து விடுபட்டு நற்பேறுகள் அடைவார்கள்….

“வாசித்தோர்,கேட்டோர்,உற்றோர் மனதினில் உணர்ந்து கற்றோர், ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர், கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும், தேசத்தின் செல்வத்தோடு சிறப்புடன் இருந்து வாழ்வார்”… அகிலத்திரட்டு ஆகமத்தை படிப்பவர்களுக்கும், படிப்பதை கேட்பவர்களுக்கும், அதற்கு உதவியாய் நின்றவர்க்கும், ஏட்டில் சொல்லப்பட்ட உட்கருத்துகளை ஆராய்ந்து, உணர்ந்து இது இறைவனின் போதனை என்பதை உணர்ந்து வாழ்கின்ற யாபேருக்கும் சித்தர்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இந்த சிருஷ்டியை படைத்த எம்பெருமான் நாராயணமூர்த்தியின் திருவடியை காணுகின்ற பாக்கியமும் பெற்று, சிறப்பு பொருந்திய வாழ்வான மலைகளிலே பெரியதான கைலாயமலை (தரும்பூமி) வாழ்வும் பெற்று, எல்லா வகை செல்வ சிறப்போடும் இருந்து வாழ்வார்கள் என்று அய்யா வாழ்த்துகிறார்….

“எந்தன் மொழியும் என்னெழுத்தும் ஏடாய்சேர்த்து, இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்பருக்கு, தெரியத்திடமாய் எழுதி வைத்தேன்.எந்தப்பேரும் என்திருமொழியை எடுத்து வாசத்து உரைத்தோரும் சந்தமுடனே வாழ்ந்து மிக தர்மபதியும் காண்பாரே”… என்னுடைய சொல்லையும், எழுத்தையும் (தமிழ் மொழியின் சிறப்பு. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு -குறள் ) ஏடாய் சேர்த்து இவ்வுலகில் மனம் மகிழுகின்ற அன்பர்களுக்கு, தெரிய திடமாய் எழுதி வைத்துள்ளேன்.யாபேரானாலும் என்மொழியை எடுத்து வாசித்து வாசித்து சொன்னாலும் சங்கடங்கள் தீர்ந்து மனமகிழ்வுடன் வாழ்ந்து தர்ம்பதி வாழ்வும் காண்பார்…..

அகிலம் படிப்போம்!!                            அறநெறி நடப்போம்!!                      தர்மயுக வாழ்வு பெறுவோம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *