அய்யா துணை

இந்த கலியுகத்தில் அநியாயம், அக்கிரமம், ஏமாற்றுதல், கொலை, கள்ளம், கவடு, பொய், புரட்டு, வாது, சூது, பிறர்மோகம், பேராசை போன்ற தீயவை மக்களிடையே பெருகி காணப்படுகின்றது. இதை பகவான் வைகுண்டர் நமக்கு தந்த அகிலத்திரட்டு அம்மானையில் சொல்லும் போது

முப்பிறவி ஆறும் முடித்த வலுமை எல்லாம்
இப்பிறவி தன்னில் எட்டில் ஒன்று பாரமில்லை”

அதாவது முன்முடிந்த ஆறுயுகத்தின் மொத்த தீமையும் சேர்த்தாலும் கலியின் தீமையில் எட்டில் ஒரு பங்கே தீமையாகாதே என அய்யா கூறுவதில் இருந்தே கலியுகத்தின் தீயவையகளின் வலிமையை நாம் நன்கு உணர முடியும். மேலும் நாம் உண்மையை தான் பேச வேண்டும் என முடிவு பண்ணி தீர்க்கமாக இருந்தாலும் கூட பொய் பேசும் வகையில் புத்தி பொலிவு பெற்றிருக்கும் என்பதை அய்யா அகிலத்தில்

மெய்ப்பேச வேணுமென்று மேவி இருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென”

என்று கலியின் மாய்மாலத்தை பற்றி குறிப்பிடுகிறார். அதனால் தான் அய்யோ என் மக்கள் கலியில் அகப்பட்டு கொண்டனரே எப்போது கடைந்தேர போகிறார்களோ என அய்யா நமக்காக வருந்துவார். இதுவே நமது அய்யாவின் துயரமாக உள்ளது. நாம் கலியை தாண்டும் போது அய்யாவின் துயரம் மாற்றப்படும். அப்போது அய்யா நமக்கு அவரின் அனைத்து சொத்தையும் தந்து தர்மயுகத்தை ஆளவைப்பார்.

நம்மை இந்த கலியில் இருந்து மீட்கத்தான் நம் அப்பன் மனு அவதாரம் எடுத்து வந்து பொல்லாத நீசன் செய்த கொடுமை எல்லாம் தாங்கி கொண்டு நாம் எப்படி எப்படி வாழ வேண்டும் என சட்டம் தந்து உபதேசித்தார். அய்யா தந்த சட்டங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து நடக்கும்போது மட்டுமே நாம் கலியை கடர்ந்து தர்மயுக வாழ்வை பெறமுடியும்.

ஆனால் இன்றைய உலகில் நம் கண் முன்னே அநியாயகாரனும், லஞ்சம் வாங்குபவனும், அடுத்தவனை ஏமாற்றுபவனும், நீதிக்கு எதிராக வாழ்பவனும் மிகவும் வசதியாகவும், அதிகார பதவியுடனும், சமுதாயத்தில் மதிப்புடனும் வாழ்வதை காண்கிறோம் . இதனால் நமக்கும் கூட நாம் நேர்மையாக வாழ்வதால் என்ன பயன் என்ற சலிப்பு ஏற்ப்படுகிறது. அப்போது நாம் அய்யா சொன்ன

“சொத்து, ஆஸ்தி, வஸ்து சுகம் என்று எண்ணாதே”
“ஈனருக்குக் காலம் ரொம்ப ரொம்ப உண்டாகும்”,
“வம்பான மாற்றானை வளர்த்தே அறுப்பேன்”
“மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே”

போன்ற அய்யாவின் சத்திய வாக்கினை நினைவில் கொண்டு மன உறுதியுடன் அய்யாவை இன்னும் அதிகமாக பற்றி பிடிக்க வேண்டும். ஆனால் நாம் எக்காரணம் கொண்டும் அடுத்தவரின் சுகமான வசதியான வாழ்வைக் கண்டு நாம் நமது நிலை தவற கூடாது. அய்யா வகுத்த வழியில் நாம் நடந்து வரும் போது நமக்கு ஏதேனும் துன்பங்கள் வந்தாலும் அவைகள் எல்லாம் நம்மை கலியில் இருந்து கடர்ந்தேற்ற அய்யா வைக்கும் சோதனைகளே என்று உணர்ந்து அதனை தாண்டும் சக்தியையும் அய்யாவிடமே கேட்க வேண்டும். அன்பாகி அய்யாவை நாடும் நம்மை அய்யா பல்வேறு சோதனைகள் வைத்தே ஏற்றுக்கொள்ளவார் என்பதை எண்ணி அய்யாவின் கமல பாதத்தை வைராக்கியத்துடன் பிடிப்போம். அய்யாவை நம்பி வந்தவர்களுக்கு எந்த ஒரு தீங்கும் வராது நம்மை பிள்ளை போல் காத்திடுவார்.

“நல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது”

“என்றைக்கும் வாழ்வார் எனக்காகும் பேர்கள் எல்லாம்”

என்னும் அய்யாவின் பரலோக வார்த்தையில் நம்பிக்கை கொண்டு நம்பி பிடிப்போம்

அய்யா சிவசிவா அரகரா

வைகுண்டமணி அய்யா, அ.உ.அ.சே.அ

அய்யாஉண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *