இராஜ நீதம்
வாடி வந்த பச்சினுட்க்கு வாளால் அவனுடம்பை
தேடி வந்த வேடனுக்கு துடையரிந்துயீந்தவன்காண்

                                                                                — அகிலம்.

கடமைக்கும்,கருணைக்கும், கொடைத்திறனுக்கும் பெயர் பெற்ற சிபிச் சக்ரவர்த்தியின் புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப்பார்க்க விரும்பினான்.

அக்கினி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான்.இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி பகவான்  ஒரு புறா வடிவத்திலும்
வந்து சேர்ந்தார்கள். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்தது.

நந்தவனத்தில் இருந்த சிபிச் சக்ரவர்த்தியின் துடையில்  ஒரு புறா வந்து விழுந்தது. அந்தப் புறாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
சிபியின் மடியில் இருந்த புறாவைக் கவ்வி பிடித்துக்கொண்டு போகமுயன்றது கழுகு. சிபி அதைத் தடுத்து ஒதுக்கினான். புறாவின் பயத்துக்கான காரணம் என்னவென்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.

“அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும்.என்னைத் தடுக்காதே! புறாவைக் கீழே விடு. ” என்று அதிகாரமாகப் பேசியது கழுகு. மனிதனைப் போல அது பேசியதைக் கேட்க பெரும் வியப்பாக இருந்தது
சிபிக்கு.

கழுகிடம், “உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் அப்புறாவை விட்டுவிடு.” என்று கூறினான்.

“அரசே! புறாவுக்குப் பதிலாக எனக்கு மாமிசம் உடனே தேவை! அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு உட்பட்ட மிருகம் அல்லது மனிதனைக் கொன்று எனக்குக் கொடுங்கள். என்னால் பசி தாங்க முடியவில்லை!”
என்றது கழுகு.

“உன் பசியை ஆற்ற நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதற்காகப் பிறரைத் துன்புறுத்த என் மனம் இடம் கொடுக்காது. உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே!, அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன்.”
என்று கழுகிடம் உறுதி கூறினான்

ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்தான். மறு தட்டில் தன் உடலின் தொடைபகுதியிலிருந்து  சிறு பகுதியை வெட்டி  எடுத்து வைத்தான். புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. தொடர்ந்து சிபி தன் உடலிலிருந்து பகுதி பகுதியாக வெட்டி எடுத்து வைக்கத் தொடங்கினான். எவ்வளவு வெட்டி வைத்தாலும்
புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை.

கடைசியில் சிபி கழுகைப்
பார்த்து, “புறாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நான் என்னையே கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. நானே தட்டில் ஏறி அமர்ந்து
கொள்கிறேன். என்னை ஏற்றுக்கொள்!” என்று கூறிவிட்டுத் தட்டில்ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது.

மறுகணமே கழுகு இந்திரனாகவும். புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள்.சிபியை அவர்கள் அன்புடன் தொட, அவன் உடல் சிதைவு எல்லாம் மாயமாய் மறைந்து தேகம் புதுப் பொலிவு பெற்றது.

தேவர்களைக் காலில் விழுந்து வணங்கினான் சிபி. ” என்னைக் காணத் தாங்கள் மாறுவேடத்தில் வந்த காரணம் என்னவோ? ” என்று கேட்டான்.

“அரசே! உன் புகழைக் கேள்விப்பட்டு, அதைச் சோதித்துப் பார்க்கவே வந்தோம்.உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோம்..

நீ எல்லா நலமும் பெற்று நீடூழி வாழவேண்டும்!” என்று வாழ்த்தி மறைந்தார்கள்.

அரசாட்சி செய்பவன், தன்னலமின்றி இருக்கவேண்டும். தியாகம் செய்யவேண்டும்
என்று வரும்போது தன்னையே முதலில் அர்பணித்து கொள்ளவேண்டும்.

“எளியாரை வலியார் துன்புறுத்த வந்தால் எளியவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
எல்லாருடைய குறைகளையும் சமமாகப் பாவித்து நியாயம் வழங்கவேண்டும்.

அப்படிப்பட்ட அரசன் ஆளும் நாட்டுக்கு எந்தக் குறையும் ஏற்படாது.இதை எடுத்துச் சொல்வதுதான் சிபிச் சக்ரவர்த்தியின் கதை… 

(இன்றும் இருக்கிறார்களே நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய்)
அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *