You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 10

226. விருத்தம்
சேர்க்கைஉண்டோ எனமொழிந்த மானே பெண்ணே
தேன்மொழியே உங்களுக்குத் தெரியா வண்ணம்
வார்த்தையது சொல்லாதே நமது வாழ்வும் மக்களுட வாள்வதுவு மொன்று போலே
மார்க்கமுடன் வைத்தரசு ஆள நானும் மனதிலே நினைத்திருக்கும் வளமை யாலே
கோர்க்கையிது அவர்கொடுக்கல் வாங்கல் தன்னை
கூறிமிகக் கேட்டுமணங் கூடு வேனே

227. விருத்தம்
மணங்கூடு வேனெனவே யுரைக்க மாயன் மனுவழியி லுதித்தகுலச் சான்றோ ரெல்லாம்
அணங்குஇன வழிபோலே அவர்கள் வந்து ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்க
குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சிக்
கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால்
பணங்கள்மிகப் பொன்காசு நிரம்ப நிரம்பப்
பாவையர்க்குச் சீதனங்கள் பகரு வீரே

228. விருத்தம்
பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும் பரிசமென்ன எங்களுக்கு பண்பா யீவீர்
உகரமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம்
உடையகுல சொக்கருமே உரைப்பார் பின்னும்
தகருமோ நான்தருகுந் தங்கக் காசு சதாகோடி யெண்ணமது தானோ யில்லை
நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம்
நினக்கறிய சொல்லிடுங்கோ நிசமா யென்றார்

229. விருத்தம்
ஆண்டவரே யிப்பதியந் தருவீரா னால் யாமடியார் ஆளுகின்ற வஸ்த்து வெல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடமை ஆடு மாடு குருபரனே யாங்கள்வரை உமக்குச் சொந்தம்
மீண்டிம்மை முக்காலும் முமக்கு நாங்கள் விலையடிமை ஆனோம்காண் விரைய மாலே
பாண்டவரைக் காத்துரக்ஷித் தாண்டாப் போலே
பாவையரும் மக்களுமுன் பக்கந் தானே

230. விருத்தம்
பக்கமது என்றவுடன் மாயன் தானும் பதறாதேஉங்களைங் காத்துக் கொள்வேன்
ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வேன்
ஒண்ணுபோலே யிருந்துபுவி ஆள்வோம் நாமும்
தர்க்கமது இல்லையப்பா இந்த வார்த்தை தந்ததுவும் ஈந்ததுவுந் தவறே யில்லை
மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய
மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே

231. விருத்தம்
கைப்பிடித்துத் தாருமென உரைத்தீ ரையா
கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே
மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ
மேதினிகள் அறியதவ தாரஞ் செய்தீர்
எப்படித்தான் னாங்கள்கைப் பிடித்து யீய இவ்வுலகில் அவதார இகனை தானோ
எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி
ஏந்திளைமார் கைப்பிடித்து ஈய லுற்றார்

232. விருத்தம்
ஈந்திடவே மாயவரும் தங்கத் தாலே
ரத்ன ஒளி போல்வீசும் தாலிதன்னை
மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ
ஏந்தும்புவி தர்மமது தழைத்து வாழ ஈசர்முத லெல்லோரு மிகுந்து வாழ
சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி

233. விருத்தம்
தாலிமிகத் தரிக்குகையில் மாத ரோடுத் தாமனியநா தன்மகிழ்ந்து தானே சொல்வார்
கேலிமிக உரையா துங்கோ எனக்கு இன்னும் கெணிமடவார் அனேகமுண்டு மணங்கள் செய்ய
சோலியல்லோ ஆச்சுதென்று நினையா துங்கோ
தொல்புவியை அரசாள்வீர் நிசமே சொன்னோம்
மாலினுட சூட்சமகா கோடி யுண்டு மனதுசடை யாமல்மிக வாழுவீரே

234. விருத்தம்
வாழுவீர் கூடுவிட்டுக் கூடு பாய்வேன் மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன்
மாளுவேன் முழித்துப்பின் வருவே னுங்கள்
மனதலைந்து எனை இகழ்ந்து மாளா துங்கே
தோழிலே இருந்துபல சூச்சஞ் செய்வேன் தோகையரே நீங்களெல்லா மெனது வாயம்
நாளிலே யறிந்துமிகக் கண்டு கொள்ளும் நாரணரின் நடப்பிதுவே ஞாயம் சொன்னோம்

235. விருத்தம்
சொன்னமொழி தனைமறந்து நீங்க ளெல்லாம்
தூசணித்து எனைக்கபட மெண்ணா துங்கோ
என்னுடையத் தொழிலிதுவே உங்களோடு யிருந்துதர்ம முடிசூடி ஆளு மட்டும்
பொன்னுடைய நாடதுக்கு வானோர் தம்மைப்
போகவிடை கொடுக்கஅவர் போனா ரங்கே
கன்னிமட வார்கையைப் பிடித்துக் கொண்டு
கருணைப்பதித் தெரு வீதி வருகின்றாரே

சிந்து
தெருவீதி நாம்வருவோம் – மெந்தன் தேவிமாரே கன்னி நாயகமே
மருவினியக் கன்னியரே – பதி
வலங்கள்சுற்றி நாம்வருவோம்

கண்மணியே காரணரே – ஒகோ
காயாம்பு மேனியரே
மண்ணேழும ளந்தவரே – ஓகோ
மாயவரே நாம்வலம் வருவோம்

பெண்ணாசை மாமயிலே – நமது பொறுமைபதி வலம்வருவோம்
தண்ணமுள்ளத் தேவிமாரே -நமது தர்மபதி வலம்வருவோம்

ஆண்டமணியேநாயகமே – உலகு
ஆண்டருளு மெங்கள் கண்மணியே
காண்டம்நிறைவேற்றவந்த – யெங்கள் கணவனாரே நாம்வலம் வருவோம்

பொறுமைபதி வலம்வருவோம் – கலிப் பொடிய யாமம் போட்டிடுவோம்
தருமமது தழைக்கச் செய்வோம் – பதி தானேவலம் நாம் வருவோம்

பொல்லாத வகையழித்து – சுவாமி புதுப்பூமித் தோணவைத்து
கல்லாதார்க் கருவறுத்து – சுவாமி அதிகபதி வலம் வருவோம்

நாடும் பதித்தலங்கள் வாழும் – பெண்ணே நம்முடைய இனங்கள்வாழும்
கேடுகலி கோடுஅறும் – பெண்ணே
கிளர்ந்தபதி வலம் வருவோம்

ஆகாத்தப்பேரை யெல்லாம் – சுவாமி அக்கினிக்கு விருந்தளித்து
வாகாகத் தர்மபதி – சுவாமி
வாழும் பதிவலம் வருவோம்

முன்குறோணி யுதிரமதால் – பெண்ணே
உதித்துவந்தக் குலங்களெல்லாம்
தன்குணத்தால் மாண்டுபோக – பெண்ணே
தர்மபதி வலம் வருவோம்

மாற்றானொ ழியவேணும் – சுவாமி
மக்களெல்லாம் வாழவேணும்
காத்தோரைக் கைவிடாமல் – நாமள்க் கருணைபதி வலம்வருவோம்

தெண்டமிறை பொய்களவு – பெண்ணே செய்யும்வண்டக் குலங்களெல்லாம்
கொண்டகலி கூடமாண்டு – குரு
நாதர்பதி வலம்வருவோம்

வீணான கலியுகத்தை – சுவாமி வெய்யோனுக் கமுதளித்து
சாணாரை வைத்தாள – சுவாமி
தர்மபதி வலம் வருவோம் (338)

நாடுபதி துலங்குதடி – பெண்ணே நல்லசிலை குதிக்குதெடி
ஆடுமாடு அருகுதடி -கர்த்தா
ஆவினங்கள் தோணுதடி

நல்லபதி துலங்கணுமே – சுவாமி நாடுதர்ம மாகணுமே
பொல்லாப்பது ஒழியணுமே – சுவாமி புத்தியொன்றாய்க் குவியணுமே

கோவில்தெரு துலங்கணுமே – நம்மள் கோட்டை வெளி யாகணுமே
தேவருட நல்த்திருநாள் – பெண்ணே தினமும் வந்து கூடணுமே

தங்கத்தொட்டில் தண்டயமும் – சுவாமி தாண்டும்பதி வீதிகளும்
சங்கமுடன் டம்மானமும் – சுவாமி
தலத்தில்வந்து தோணணுமே

கோட்டையிட்டுக் கொடியுங்கட்டி – பெண்ணே
கொத்தளமாய் மேடைசெய்து
நாட்டையெல்லாந் தான்கிலுக்கி – பெண்ணே
நமக்குப்பதி யேறணுமே

நம்பினோரைக் காக்கணுமே – சுவாமி நாடுகட்டி யாளணுமே
அம்பலங்க ளேறணுமே – சுவாமி
அவதாரங்கள் நடத்தணுமே

சிங்காசன மேறணுமே – பெண்னே
தீவெட்டிகள் போடணுமே
கண்காட்சைகாணணுமே – பெண்ணே கன்னியரைக் கைப்பிடித்தால்

பாக்கியங்கள் பெருகணுமே – சுவாமி பாரிலுள்ளோர் காணுதற்கு
ஆக்கிநாங்கள் படைக்கணுமே – சுவாமி அமுதருந்தி வாழணுமே

மக்கள் பெற்று வாழணுமே – பெண்ணே வந்து மெந்தன்கால்பிடித்து
ஒக்க நின்றோ ராட்டணுமே – பெண்ணே உற்றபள்ளி மெத்தைசூழ

பால்பவிசு பெருகணுமே – சுவாமி பஞ்சணையில் கொஞ்சணுமே
தூலருமை யறியாமலே – கலி தொல்புவியும் மயங்கணுமே

சமுசாரி யாகணுமே – பெண்ணே
தலையில்சோறு சுமக்கணுமே
ஒவுதாரி யாகணுமே – பெண்ணே
உங்களைநா னடிக்கணுமே

அயலூரு போகணுமே – சுவாமி
அழைக்கநீரும் வரவேணுமே
கயல்விழிமா ரொருவர்க்கொருதர் – சுவாமி
கத்துதல்கள் கொள்ளணுமே

நானும்வந்து நிரத்தணுமே – பெண்ணே நல்லமொழி சொல்லணுமே
தேனும்பாலும் போலே நாமள் – பெண்ணே
தேசமதில் வாழணுமே

கண்டுயிந்த நீசக்குலம் – சுவாமி
களிப்புசொல்லி யேசணுமே
பெண்டுகட்கு வீங்கியென்று – சுவாமி பொல்லாப்பய லேசணுமே

காரணத்தை அறியாமலே – பெண்ணே
கலிப்பயக்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில் – பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்

செம்பவள நர்ப்பதியின் – சுவாமி தெருவலங்கள் சுத்திவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி – மறு
பொழுது வந்தால் வருவோமையா.

சோபனம்

சோபனமே சோபனமே – சுவாமி திருநடன சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும் அவர்தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசொரிக்குங் நல்ல பொன்தேவி மாதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும் தெய்வக் கன்னியர்க்குஞ் சோபனமே
பூமடந்தை நாயகிக்கும் நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை லட்சுமிக்கும் சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வகன்னி நாயகிக்கும் சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
ஐவர்குல நாரணர்க்கும் கன்னி அரிவையவர்க்குஞ் சோபனமே

236. விருத்தம்
துடியிடைக் கன்னிமாரை திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராக
படிமிசைப் பதியினுள்ளே பதிந்து வந் திருந்தா ரன்றே598

237. விருத்தம்
கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்

238. விருத்தம்
போத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப்
போத்தியே உமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன்
ஏத்துநீ ரிளைப்பு மாறி இன்றுரா கழித்து ஏகும்
சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போற்றி

239.விருத்தம்
வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்
சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்
செந்தமிழ்த் தர்மச் சீருஞ் சிவாலயத் தெருக்கள் நேரும்
புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே

240.விருத்தம்
போத்திநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்
சாத்திநீர் பின்னுந் தெய்வத் தார்குழ லுண்டு மென்று
பார்த்துநீர் நமக்குக் காட்டி பைங்கிளி மாரை யெல்லாம்
சீத்துவ மாக எந்தன் சிந்தை அறிய என்றாள்

241.விருத்தம்
உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே என்று
மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் காட்டி
குடதன முடைய ரான கோதையர் கோவில் புக்கி
நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா னென்றார்

242.விருத்தம்
பார்த்ததந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்
சேர்த்திந்த மடவார் தன்னைத் திருமணஞ் செய்த மன்னன்
எந்தெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்
சாத்திந்தத் தலமும் காட்டித் தன்பதி போவோ மென்றாள்

243. விருத்தம்
புலம்பிடத் திருமால் மாதை பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற உனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய நலம்பெற
வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் னானே

244. விருத்தம்
நானென்ற ஈச ரானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றிச் சடாச்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணர் நீதா னென்றாள்

245. விருத்தம்
நாரணன் நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண யுகத்துக் கெல்லாங் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணக் குயில்போல் அன்ன மயிலென உரைத்தா ரையா

246. விருத்தம்
உரைத்திட மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிப்போல் சீறி மங்கையும் மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச ரென்று
துரைத்தன மாகச்சொல்லச்சுணையுண்டோ உனக்கு என்றாள்

247. விருத்தம்
சாதிக்குச் சாதி நீயுஞ் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போல சடமெடுத்துத் துடல்கள் போட்டு
வாதுக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழிமுந்தன் குலமே கந்தன்
சாதிக்குகக் சரியோ உந்தன் தன்குல மறிவே னென்றாள்

248. விருத்தம்
அறிவே னானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறுமொழி சொல்ல வேண்டாந் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே யுகமதை ஆள நானும்
மறுமொழி இல்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே

249. விருத்தம்
இப்படி யிவர்தான் பரரி லெண்ணிய கரும மெல்லாம்
ஒப்புடன் முடித்துத் தன்னா லூணிய தெல்லாந் தோன்ற
வைப்புடன் யாமங் கூறி மனுக்களைத் தெளிந்து ஏத்து
இப்புவி விட்டுக் குண்ட மேகிட மனதி லுற்றார்

250. விருத்தம்
ஏகிட மனதி லுற்று யிருக்கின்ற உபாயந் தன்னை
வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர்
தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம்
கோகிடக் குண்டஞ் செல்ல குருவையும் நாட்ட மானார்.

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On February 17, 2019