You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 7

151. விருத்தம்
அணையும் படையு முந்தன் அரன்மனைக் கோவில் காலும்
சேனையும் குடையும் வியாழச் செல்வமும் சிறப்பு எல்லாம்
ஏனமு மிகவே தோத்து எரிந்துநீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான்

152. விருத்தம்
என்றிவன் சொன்ன போது யேங்கியே உளறிப் பின்னும்
பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
கொண்டிவன் தன்னைப் போடுங் கொழுவிலங் கதிலே சிங்கத்
தண்டிகை எடுத்து வாருஞ் சாணெனச் சாமி பார்க்க

153. விருத்தம்
பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத்
தார்க்கெனப் பாவி நீசச் சறடனும் ஏதோ சொல்வான்
ஆர்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன
கார்கெதி கெவிட சாஸ்திரி கடிகனை அனுப்பு மென்றான்

154. விருத்தம்
அனுப்புமென் றுரைக்கும் போது அரசனு மேதோ சொல்வான்
துனுப்புடன் சாணான் றன்னைச் சூழ்ந்துநூல் கயிற்றால் கட்டிக்
கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும்
வனிப்புடன் போய்வா என்று வரிசையுங் கொடுத்தா நீசன்

155. விருத்தம்
கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டு
கடுத்தமாய்க் கெவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத்
தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்று
நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான்

156. விருத்தம்
பரிநடைக் காரர் தன்னைப் பக்கமாய் முன்னே விட்டான்
கரிநடைக் காரர் தன்னைக் காவலாய் முன்னே விட்டான்
சரிபரி யேறிக் கெளட சாஸ்திரி முன்னே நின்று
வரிபடைக் கவசம் போர்த்தி வந்தனன் படைக்கு முன்னே

157. விருத்தம்
அம்பெடுத் தெய்வேன் என்று அவனொரு அணிகள் சாட
கம்பெடுத் தடிப்பே னென்னக் காலசன் மிகவே சாட
கொம்பெடுத் துதைப்பே னென்ன குஞ்சரத் தலைவ ரோட
பும்படக் கொல்வே னென்னப் போயினன் கவுடன் றானே

158. விருத்தம்
சென்றவர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்று
நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர்
பண்டெனைப் பெற்ற தாதா பால்கட லுள்ளே என்னைச்
சென்றிட அழைக்கார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும்

159. விருத்தம்
நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளே
பல்லுயிர் யாவும் வாழப் பரமனு மங்கே செல்ல
வெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிழல் குடைகள் போட
வல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வர்

160 . விருத்தம்
அப்பனே ஒப்பில் லாத அலைகடல் துயின்ற மாயா
செப்பவுந் தொலையா நாமஞ் சீமையில் விளங்கப் பெற்றாய்
தப்பர வில்லா யெந்தன் தகப்பனே கேள்மோ வையா
எப்போநான் விளங்கி உந்தன் ரத்தின சிம்மாசனத்தி வேறுவேன்

161. விருத்தம்
ஆண்டு ரண்டாச்சே மாதம் ஆயிரு பதினாலாச்சே
வேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியுள் மூழ்கி
கூண்டுநீர் முன்னே சொல்லிக் குருஉப தேசம் வைத்த
ஆண்டின்னம் வருகி லேயோ அப்பனே மெய்யுள் ளோன

162. விருத்தம்
இப்படி மகன்றான் சொல்ல இருகையால் மகனை யாவி
முப்படித் தவத்தால் வந்த முதவெனத் தழுவிக் கூர்ந்து
எப்படி என்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா
ஒப்பில் லாக்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா

163. விருத்தம்
ஏங்கிப் பதற வேண்டாமே எனது மகனே நீகேளு
மூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து உதித்தன்று
தாங்கி உனைநான் வந்தெடுத்துத் தனது தாயை இடம்நிறுத்திப்
பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே

164. விருத்தம்
வண்ணப் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி
எண்ணத் தொலையா தென்மகனே ரத்தின சிங்கா சனப்பவிசு
கண்ணைப் பறித்து நீசனுட கருவை அறுத்துக் கலியழித்து
என்னும் வளர வாழவைப்பேன் என்னா ணைஇது நிசமகனே

165. விருத்தம்
மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய
கண்ணி லிவர்கள் கண்காணக் கலியில் காட்சி மிகநடத்தி
புண்ணில்க் கருதப் பட்டாப்போல் பொல்லா நீசன் கண்டுழைந்து
எண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே

166. விருத்தம்
மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால்
உகமே அறியக் அறுப்பதற்குத் இச்சணமே நமக்குக் கைவாச்சு
செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பின்னே கட்டிறுக்கிப்
பகையே செய்து மிகவடித்துப் பார விலங்கில் வைப்பானே

167. விருத்தம்
வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்து
செயிப்பாய் கலியை அறுப்பதற்குப் இச்சணமே நமக்கு கைவாச்சு
போய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகஏற்பதற்கு
மெய்ப்பா அவனு முரைத்ததுபோல் மெள்ள உரைத்து இருந்திடுநீ

168. விருத்தம்
மனுவை அடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான்
தனுவை அடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல்
இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லென்னநினைந்து
கனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே எனது கற்பகமே

169. விருத்தம்
அன்பாய் உன்னை அடுத்திருந்த ஆதிச் சாதி அவ்லினர்க்குத்
தன்பா லருந்தும் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்து
என்பால் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப்
பின்பா லவரை அருகழைத்துப் புசத்தி லடுக்க இருந்திடுநீ

170. விருத்தம்
கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே உனக்கு நற்காலம்
கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலுஞ் சிவலாயமும்
தண்டா யுதத்தால் வாகனமுஞ் சக்தி மாத ரிருபுறமும்
பண்டோர் காட்சி உனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே

171 . விருத்தம்
காச்சிக் சிறப்புக் கலியாணங் கவரி வீசிக் கொலுவாரம்
சாக்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி
வாச்சி உனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க
காச்சி உனது முன் காணும் கருணை மகனே கலங்காதே

172. விருத்தம்
பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச்
செல்லப் பதிகள் மிகமுகித்துக் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ
வல்லக் கொடிகள் மரம் நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்
பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்தம் படிவானே

173. விருத்தம்
இப்படி சிறப்ப தெல்லாம் உனக்கென் மகனே மேலும்
எப்படி மலங்கி யென்னோடு இதுரைத் தேது பிள்ளாய்
சொற்படி எல்லாம் அந்தத் தேதியில் தோணுங் கண்டாய்
அப்போநீ அறிந்து கொள்வாய் அப்பனும் நீதா னானாய்.

174. விருத்தம்
இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப்
பொருந்திடுங் கமல மாது பூரண மதுவாய் நிற்கக்
கரிந்திடும் நீச பாவி கயிறுவாள் வெடிகள் சூலம்
புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே

175. விருத்தம்
வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர்
கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்
பொருதிட நீசன் வாறான் பொறுத்துநான் வந்த போது
அருகிலே உங்கள் தன்னை அழைத்துநாம் கொள்வோ மென்றார்.

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On February 17, 2019