You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 8

176. விருத்தம்
ஒன்றுக்கு மலைய வேண்டா முகபர நாத னானை
என்றுக்கு மலையின் மீது லேற்றிய தீபம் போலே
கன்றுக்கு பாலு போலுங் கண்ணுக்குப் புருவம் போலும்
என்றுக்கும் மக்கா உங்க ளிடமிருந் தரசு வாழ்வேன்

177. விருத்தம்
முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால்
என்விதிப் படவே யுண்டு இறப்பொன் றனக் கென்றதினாலே
பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி ஆள்வோ மக்கா
உன்விதி நல்ல தாகும் மொழிவறா வாழ்வீர் தானே

179. விருத்தம்
மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு ஆசை
பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை
எண்ணுட னெழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை
ஒண்ணுட னாசை நீக்கி உடையவ னாசை கொண்டார்

180. விருத்தம்
கொண்டுநல் மனதில் பூண்டு குருபரா தஞ்ச மென்று
பண்டுநல் துவார கையின் பதிவட வாசல் தன்னில்
தெண்டிரை வாவை சூழ்ந்த செகல்கரை தனிலே வந்து
கண்டுநல் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே.

181. விருத்தம்
இருந்தவர் தலமும் பார்த்து யேகநல் வெளியுங் கண்டு
பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதிலெண்ணி
வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும்
தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை அணிந்தார் தாமே.

182. விருத்தம்
அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து
துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கிப்
பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதி லாக்கித்
தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார்

183. விருத்தம்
வந்தனர் பதியின் கூறும் வாரியுஞ் செயலுங் கண்டு
சந்தன வாரி போலுந் தலமிது நன்ன தாகும்
இந்தநல் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்
செந்தமி ழாயன் பாதஞ் செயல்பெற வாழ்வோ மென்றார்

184. விருத்தம்
வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு
தாழ்வது இல்லா வண்ணந் தவமது வளர்வ தாகும்
நாள்வழிப் பலனுண்டாகும் நாரண ரருளி னாலே
ஆள்வது திடனா மென்று அதிலவர் இருந்தா ரன்றே

185. விருத்தம்
வந்தனர் வைந்தர் பாதம் மலரினை முனிமார் கண்டு
செந்தமி ழாயன் பெற்றச் சேயிது கண்ணோ விண்ணோ
கந்தக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள
முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா போற்றி போற்றி

186. விருத்தம்
பொல்லாக் கலியில் வந்திருந்து பெண்ணோ டவனிப் பொன்னாசை
மண்ணோ டுண்ணு மதத்தாசை மாய்கை விழியார் மருட்டாசை
பண்னோர் தவத்துள் ளணுகாமல் பவமே யறுத்துப் பார்வைவிழி
கண்ணோ ஞானக் கருவிருத்திக் கண்டாய்ப் பொருளைக் கண்டாயே

187. விருத்தம்
அய்யா உமது தவமதுவா யரம்பை மாத ரன்றுபெற்ற
மெய்யாஞ் சான்றோர் கெதிகள் பெற்றார் மேவலோரு மிக புகழ்ந்தார்
பொய்யாங் கலிய னுயிரிழந்து போனா னரகில் மீழாமல்
அய்யா முட்டப் பதிதனிலே அழைத்தா ருந்த னப்பனென்றார்

188. விருத்தம்
அழைத்தா ரெனவே சொன்னவுடன் ஆதி முனியை மிகநோக்கிப்
பிழைத்தார் போலே மனமகிழ்ந்து பின்னு முனியோ டுரைபகர்வார்
இளைத்த கலியி னுள்ளிருத்தி என்னைக் கலியன் செய்தவலு
சழத்த மறிந்த வந்தாரோ சமய மிதுவோ தானுரைப்பீர்

189. விருத்தம்
கண்ணே மணியென் கருவூலமே கனக மணியே ரத்தினமே
விண்ணே ஒளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே
மண்ணே ழளந்த மலர்பத்த்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே
இண்ணே முதலாய் உனக்குநல்ல இயல்பே ஆகு எதன் மகனே

190. விருத்தம்
மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும்
செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து
தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும்
அகமே உனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே

191. விருத்தம்
விஞ்சையும் பெற்று வைந்தர் விரைவுடன் தகப்பன் பாதம்
அஞ்சையு முணர்ந்த சோதி அரனையும் வணங்கி போற்றி
நெஞ்சையும் மொன்றுள் ளாக்கி நிர்மலத் தாயைப் போற்றி
கொஞ்சையுங் குணத்தி னாதன் கூறுவார் குருவை பார்த்து

192. விருத்தம்
என்னையாட் கொண்ட நாதா எங்குமாய் நிறைந்த நீதா
உன்னையான் கண்டு பெற்ற உன்னருள் கிருபை தந்தாய்
இன்னமுங் கலியிற் போய்நான் இருந்திந்த முறைகள் செய்தால்
என்னையாட் கொண்டு ரத்தினக் கிரீட மெப்போ யீவீர்

193. விருத்தம்
கிரீடம் எப்போ ஈ.வீர் என்றெனக் கேட்ட மைந்தா
அரிவிதி கொண்டே சூடி அணியிடை மாரைத் தோய்ந்து
தரிவிதி யான போதுந் தாமரை கைநிகழ்ந்த போதும்
பரிவலம் வந்த போதும் பார்மக ளடைந்தா யன்றே

194. விருத்தம்
உன்விதி யதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால்
என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி
மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும்
பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே

195. விருத்தம்
பூமக ளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கும் மேலே
நானுகந் தன்னால் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கி
தானுனைத் தங்க மான தயிலமாம் பதத்தில் மூள்கி
வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருளவே னென்றார்

196. விருத்தம்
முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்தோ மிக்கலியில்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பேறி முனிகையினால்
சென்றோங் கூடும் மிகப்போட்டு சிறிரங்க மேக செல்வழியில்
மின்னே இவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோம் மவ்வனத்தில்

197. விருத்தம்
வனத்தில் புணர்ந்த மாதர்களை மக்க ளேழும் பெறவருளி
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே

198. விருத்தம்
மீண்டோங் கைலைக் கிருந்துபின்னும் மெல்லி யவர்கள் தவம் பார்க்க
ஆண்டோர் சிவனாருமையாளு முவந்தே தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவி செய்து தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே

199. விருத்தம்
தேன்மொழி மாரே எந்தன் சித்திரத் தங்கை மாரே
கான்வன மதிலே நம்மைக் கை கலந் திழிவு செய்த
மான்முனி தன்னைக் கண்டோம் வார்த்தையில் குழைக்கார் சோற்றை
வான்முனி தன்னை நீங்கள் வளையுங்கோ சிணமே என்றாள்

200 . விருத்தம்
செப்பிட மூத்த கன்னி தேவிய ராறு பேரும்
அப்படி ஒன்று போலே அவர்வளைந் தாதி தன்னை
முப்படி எங்கள் தன்னை மொய்வன மதிலே வந்து
கற்பினை இகழச் செய்தக் கள்வரே என்றே சூழ்ந்தார்

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On February 17, 2019