You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 9

201. விருத்தம்
சூழ்ந்தே நமது துகிலைமுன்னஞ் சுழியஞ் செய்த மாமுனியைப்
பூந்தே நெருங்கித் துயிலுரியப் பிடித்தே இழுத்து நாமீன்ற
சாந்தோர் மக்க ளேழுவரையும் தரவே என்ன செய்தியென்று
ஓர்ந்தே கேள்ப்போ மென்றுசொல்லி ஒன்றுபோலே வளைய லுற்றார்

202. விருத்தம்
வளைந்த போது மாயவரும் மனது ளுபாய மொன்றெடுத்து
இழந்த மொழிகள் சொன்னாக்கா விளம்ப மிதுவே யாகுமென்று
குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழுமினவழியும்
நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார்.
தரு (பல்லவி)
பிள்ளையை நாம் தாறோம் நீங்கள்பெற்ற பிள்ளையை நாம் தாறோம்
அனுபல்லவி
பிள்ளையை நாம் தாறோம் கிள்ளை மடவாரே
கள்ளமொழியில்லை வுள்ளதை சொல்கிறோம் – (பிள்ளையை நாம் தாறோம்)
காட்டுவனத்திலே கண்டுங்கள் தன்னையும் லோட்டுகள் பார்த்து நீர் வுடுகலை தோற்றதும்
மேட்டுகளா யென்னை யெரிக்கத் துணிந்ததும் பூட்டுகள் சொல்லாமல்
பெண்ணே நீர் பெற்றிடும் – ( பிள்ளையை நாம் தாறோம்)
அருவனமீதிலே அமுர்தவாழ் கெங்கையில்
சொருவமாய் நீங்கள் சுனையாடும் வேளையில்
வருமொழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு
கருவதுகொண்டு நீர் காட்டினிலீன்றிடும்(பிள்ளையை நாம்தாறோம்)
உருவன மீதிலென் வுபாயத்தையறியாமல் முறுவல்செய்தென்னை நீர் மொழிந்தது கண்டு நான்
இறுவான மேலோக யேழுபூவி உயிரென–பெருகநான் செய்திடப் பேணியே நீர் பெற்ற – (பிள்ளையை நாம்தாரோம்)

203.விருத்தம்
மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருங்கவேண்டாம்
தொடவும் நீர் ஞாயமில்லை தூரவேயகல நின்று
அடவதில் பெற்றபிள்ளைக் கடையாளமறியச் சொன்னால்
உடனிப்போ மதலைதந்து வுலகமு மருள்வோ மென்றார்

204.விருத்தம்
அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான
மெய்யனே வொப்பில் லாத வேதநல் மணியே கேள்மோ
வெய்யநல் மதலை ஈன்று வெட்கமு மிகவே யாகிக்
கையது தப்பியோட கண்டமோ மதலை யென்றார்
சிந்து
மதலையைத் தாருமையா – நாங்கள் பெற்ற மதலையைத் தாருமையா
அனுபல்லவி
மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது
குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குளைந்திருக்க (மத)
சரணம்
பெற்றநாளின்று வரை பிள்ளைதனைக் காணாமல்
மெத்தம னதுநொந்து மெய்யுந் தளருதையா –மதலை

வாலைப்பருவத்திலே வனத்தில் மயக்கமிட்டு
கோலமழித்த வேத கோல்கால மாமுனியே – (மதலை

பாலர்பெற்ற நாள்முதலாய் பன்னிரண்டாண்டு வரை
காலதிளகாமலேக் காட்டில் தவசிருந்தோம் (மதலை )

ஊணு வுறக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை
மூனுநாலு காலம்வரை மூண்டத் தவசிருந்தோம் (மதலை

சிங்கங்கரடி புலி திரியும் வனத்தினூடே
நங்கைமாரேழு பேரும் நாடித்தவசிருந்தோம் (மதலை

இத்தனைநாளுந்தவமிருந்து பின்னுமே நாங்களுந்தான் பெற்றமனு வயிற்றில்
பிறந்து வுதித்து வந்தோம் (மதலை

முன்னிருந்த செல்வமென்ன மூதூர் சிறப்புமென்ன
மன்னுகந்த மாதுமையை மறந்துகலியில் வந்தோம் (மதலை

ஆண்டசிறப்பு யென்ன அருஞ்சுனையாடலென்ன
காண்டம் நிறைவேறுதற்கோ கலியுதித்து வந்தோம் (மதலை

உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுயில் ஞாயமென்ன
கொண்டிருந்த விதிப்பயனோ கூறுங்கலியில் வந்தோம் (மதலை

பொன்னுபந் தலாரமென்ன பூத்தொடுக்குஞ் சாரமென்ன
முன்னுரைத்து விட்டது வோ மூண்டகலியில் வந்தோம் (மதலை

பந்தடிக்கும் வீரமென்ன பைம்பொன்னிற மேடையென்ன
குந்தடிக்க மாவுலகில்க் குதித்துபிறந்து வந்தோம் (மதலை

கன்னிய ழியுமுன்னே காதல்தனைப் பெற்றதனால்
நின்னுபிள்ளைப் பாறாமலே நெடுகநடந்து விட்டோம் (மதலை)

கண்டுபிள்ளைத் தானெடுத்து கமலமுகத் தோடணைத்து
பெண்டேழும் பால்கொடாமல் பெருகவனத்தில் சென்றோம் (மதலை

பாலிளகி நல்லமிர்தம் பாலாய் சொரியுதையோ
மாலழகக யெங்களுட மனக்கவலையை தீர்க்க(மதலை

வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும்
கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை

அங்கமெல்லாஞ் சோறுதையோ ஆவிமெத்த வாடுதயோ
தங்கமணி நாங்கள் பெற்ற தவமணியைத் தாருமையா (மதலை

மங்காத தெய்வகுல மக்களேழு யேழ்வழியும்
சிங்கார மாகஇப்போ சீக்கிரம் நீர்தாருமையா (மதலை )

205.விருத்தம்
மதலையுந் தந்து யெங்கள் மனச்சட வெல்லா மாற்றி
குதலை தனக்கு யிந்தக் குருமுடி சூடித் தர்ம
பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்னராக
நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீறென்றார்

206. விருத்தம்
தருவீ ரெனஉரைக்கு மடமாதே நீங்கள்
சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும்
பெருகியே வாழ்ந்திருப்பார் அங்கே சென்று
பெற்றிடத்தில் பார்க்குகை யிலுண்டு அங்கே
மருவி யென்னைக் கேளாதே காட்டினுடே
வளர்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னேன்
சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாஞ்
சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே
செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே
சீமானே நாமாது புரக்கும் மாலே
பல்லுயிரு மிகபடைத்தப் பாக்கிய வானே
பருவனத்தில் எங்களைநீர் பற்றி வந்து
தொல்லைவினை செய்தேநாம் சுமந்தே பெற்ற
சுற்றகுல மானதெய்வச் சான்றோர் தன்னை
இல்லிடத்தி லிப்போது தருகி லானால்
இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே

207 . விருத்தம்
சந்தியி லேத்துவோ மென்ற மாதேகேளு
தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ
பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும்
பகருவே னுங்களைப் பார்பழித்துப் ஏச
முந்தியிதை உரைத்திட்டே னோடிப் போங்கோ
உலகநரு ளறிந்தாக்கால் சிரிக்க லாகும்
சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம்
தேன்மொழியே மறுவிடப்போய்த் தேடு வீரே

208. விருத்தம்
தேடுவீ ரெனமொழிந்த யிந்திர ஜாலம்தெய்வமட வாரோடுநீர் செலுத்த வேண்டாம்
நாடுபதி னாலறியு முமது கள்ள
ஞாயமது யெங்களோடு நவில வேண்டாம்
வீடுவழி தோறும்விருந் துண்டு முன்னே மெல்லிமட வார்சிலரைக் கொள்ளை கொண்டு
பாடுபட்ட பாட்டையினி நாங்கள் சொன்னால்
பாரிலுள்ளோர் உமைப்பேசிப் பழிப்பர் காணும்

209. விருத்தம்
பழிப்ப ரெனச்சொன்ன இளம்பாவை மாரே
பாரிலுள்ளோர் அறிவார்கள் பச்சை மாலின்
களிப்பதுவுங் காண்டமுறை நூல்க டோறுங்
காரணத்தை சொல்வார்கள் கருதிக் கேளு
சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள் ளாகும்
தோகையரே யிதுயெனக்கு சொந்தவித்தை
குழிப்பதுவில்ச் சுனையாடி மதலை ஈன்ற கோலமதைச் சொன்னாக்கால் குறைவ தாமே

210. விருத்தம்
குறைவதா மெனவுரைத்த குறவா கேளும் கோவேங் கிரிவாழும் குலமா மாதர்
மறைமுதல்வா னோர்சிவ னார்க்கு நாங்கள்
வந்துசுனை யாடிக்கங்கைத் திரட்டி யேகத்
துறையறியாக் களவாண்டுத் தோய்ந்த கள்வா
தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம்
இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும
ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார்

211. விருத்தம்
கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள் களவாண்டீர் கைலையதி லீசர் முன்பில்
வெள்ளமது திரளாமல் கள்ளத் தாலே வெம்மருண்டு நின்றவித வெட்க்கங் கண்டு
வள்ளல்சிவ னாரறிந்துக் கலியில் சான்றோர்
மேல்வழியதிலே பிறக்கவென்று சபித்தார் முன்னே
உள்ளதெல்லாஞ் சொல்லிடுவே னோடிப் போங்கோ ஓகோகோ வெனச்சொல்லி உறுக்கி னாரே

212. விருத்தம்
உறுக்கிநீ ருரைத்தசுணை உமக்கே அல்லால்
ஓவியங்கள் ஏள்பேர்க்கு முண்டோ சொல்லும்
இறுக்கிவைத்த நீரிளகச் செய்த கள்ளம் ஈசர்முதல் வானோர்கள் எவருஞ்சொல் லுவார்
சிறக்கஇடை மாதருட வீட்டில் வெண்ணைய்த்
திருடியுண்டக் கள்வரெனச் சொல்வா ரும்மை
பொறுக்க இனி மாட்டோங்கானுமது ஞாயம்
புகன்றிடுவோம் இனி அண்டம் பொடியத் தானே

213. விருத்தம்
புட்டுக்காய் வைகை தன்னில் மண்சுமந்து பிரம்படிகள் பட்டதுவும் போதா வண்ணம்
கெட்டுமிகப் பட்டீரே இடச்சி கையால் கேள்வியில்லா முப்புரத்தில் கிழவன் போலேக்
குட்டுமிகப் பட்டுமது மீசை தன்னில் குறுங்கண்ணி போட்டிழுத்துக் குனிய வைத்தப்
பொட்டதுவுங் குலைத்திடுவோம் நாங்கள் பெற்ற பிள்ளைத்தனைத் தந்துபுவி யாள
வைப்பீர்

214. விருத்தம்
ஆடெடுத்தக் கள்வரல்லோ உமக்குச் சூடு அணுவளவுந் தோற்றாமல லலைந்த யெந்த
நாடெடுத்த இடமெல்லாம் வேசம் போட்டு நாணமதொன் றில்லாமல் நாரி மார் தன்
வீடடுத்த மனைதோறு மிருட்டுவேளை வேசையுடன் கூடிவிளை யாடிக் கள்ளக்
கூடெடுத்த முறையல்லோ எங்கள் தன்னைக் குவலயத்தில் கள்ளியெனக் கூறி னீரே

215. விருத்தம்
இன்னமுண்டு வுமக்குவெகு பங்கந் தானு
மெடுத்துரைத்தால் இப்போது இளப்ப மாகும்
முன்னமைத்தப் பாலரையு மினத்திற் சேர்க்கை
முளுவதையுந் தந்துபுவி யாள வைப்பீர்
இன்னமிப்போ தராம லிருந்தீ ரானா லீரேழு யுகமறிய யிழுத்து உம்மை
அன்னமது அருந்தாமல் மறித்துக் கொள்வோம்
அதுவறிந்து பாலரைத் தந்தாளு வீரே

216.விருத்தம்
பாலரைத்தந் தாளுவீ ரெனமொழிந்த பாவைமாரே
பகற்பொழுது களித்துவெள்ளிக் குதிக்கும் நாளை
காலமேநீ ரெல்லோரும் வந்தீ ரானால் கதிரவனும் போயடைந்து கங்கு லாகும்
சீலமுடன் தென்றலுக்கு மழைக்கும் மேலோக
சீட்டெழுதித் தேவரையும் வருத்தி யிங்கே
கோலமண முங்களைநான் புரிந்து கொள்வேன் குடிலதுக்குப் போயமுது குடித்து வாரும்

217.விருத்தம்
வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன்
வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக
ஊருமிக அறிவதர்க்கும் ஓலை தானு முடனெழுதி
யயச்சிடவே வந்தார் வானோர்
பாருடனே சங்கமது திரண்டு கூடிப் பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க
சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டும் தினகரனும் உதித்துவெள்ளிதோன்றிற் றன்றே

218. விருத்தம்
தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது துதிமுகனும் நான்முகனும் தொல்லி மாதும்
கூன்றிரிசி தேவரிசி வேத மானக் குணயிருள்சி கிணயிருள்சி குலமா மாது
தான்றுசர சோதிபக வதியின் மாது சதாகோடி தேவரம்பை சங்க மாக
மன்றுபுகள் நாரணர்க்குந் தெய்வ கன்னி மடவார்க்கு முகூர்த்தமென வந்தா ரங்கே

219. விருத்தம்
வானமதிலி டம்மான முளங்கத் தேவர் மலர்மாரி சலமாரி வானோர் தூவி
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற நாரிமார் குரவையிட நமனுமாற
தானமுறை மாமடவார் வமணங் கூறத் தரணிதனில் நாரணர்க்குந் தைய லான
மேன்முகில் மாதருக்கும் மணமா மென்று மேலோகப் பந்தலது விண்ணோ ரிட்டார்

220. விருத்தம்
பந்தலுக்கு நவனாதி காலதாகப்
பக்கம்பதி னைந்தும்வளை ப்பரப்ப தாக
சந்தமுடன் மேல்க்கட்டி மறைய தாக சாருமேல் மேய்ந்ததுவே சமைய மாக
அந்தமுறை சூரியனும் விளக்க தாக அலங்கிருதம் வானக்கா யதுவே யாகச்
சொந்தமுள்ள சிவமதுவே பீட மாகத்
தேவரெல்லாஞ் செய்துபந்தல் சிறப்பித் தாரே

221. விருத்தம்
சிறப்பித்தோ மென்றுமகா தேவ ரெல்லாம் திருமாலின் அடிபணிந்து சொல்வாரப்போ
பிறப்பித்தப் பெம்மானே எவர்க்கு மாய்ந்துப் பேணி அமு தளித்துவுயி ரனைத்துங் காக்கும்
உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன் உதவியினால் பந்தலது விதானஞ் செய்யும்
நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும் நிசவேலை இன்னதென நிகழ்த்து வீரே

222. விருத்தம்
தேவருரை யதனைமிகக் கேட்டு மாயன் திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார்
மூவருரை மாறாம லெனக்கு முன்னே மொழிந்ததெய்வ மாதர்களை மு கூர்த்தஞ் செய்ய
நாவதுரை வருணனோடு வாய்வு தானும் நளினமலர் தூவியது குளிர வீச
தேவருரை செய்துமிக நில்லு மென்று தெய்வமட வார்வரவே சிந்தித் தாரே

223. விருத்தம்
சிந்தித்த உடனே இந்தத் தேன்மொழி மாதர் எல்லாம்
வந்தவர் அடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற
சந்ததி எழு பேரும் தன்னுட கிளைகள் ஒக்க
தந்துநலம் புவியை ஆள தருவீரென் தலைவா என்றார்

224. விருத்தம்
தருவீரெனச் சொன்னகுல மாதே நீங்கள் தலைவர்எங்கள் மக்களையும் தருக உங்கள்
மருவினிய கருவதிலே உதிக்க ஈன்ற மனுவழியை என்முன்னே வருகச் செய்தால்
தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு தாறதுவுங் கொடுப்பதுவுஞ் சபையிலே பேசி
பெருகவுங்கள் தன்னை மணஞ் செய்துநீங்கள்
பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன்

225. விருத்தம்
புவியாள வைப்பேனென உரைத்தீ ரெங்கள்
பொன்மானே கண்மணியே புரந்த மாலே
கவிஞோர்கள் போற்றுமதக் கன்றே தேனே
காயாம்பு மேனியரே கடவு ளாரே
இவிலோகக் கலியதிலே பிறந்த தாலே இதுநாளு வரையன்ன மீந்த பேர்கள்
செவியாலுன் பதமடைந்தா லவர்க ளேது செய்வார்கள் எங்களொரு சேர்க்கை தானே

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On February 17, 2019