கல்யாண வாழ்த்து
மவுனி கல்யாண மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவா
அய்யாவும் நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கித் திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டு
கொண்டாடியின்பம் குளிர்ந்தநதி பாலதுபோல்
சீரானமக்களென்றும் தெய்வச்சான்றோர்களுக்கு
நாராயணர் தாமும் நல்லமுகூர்த்தமிட்டு
கன்னிக்கலியாணம் கைப்பிடிக்க வேணுமென்று
மன்னனுக்கு யேற்றுமதி மந்திரியும் தானறிய
இவனிவளாமென்று யினங்குறித்துப் பெண்பேசி
அவனியறிய அலங்கார மிட்டனரே
கட்டுடைய பந்தலுக்குக் காலொன்பது நாட்டி
பட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான்வகுத்து
சில்விளக்கேற்றிச் சிறந்தபரி பூரணமாய்
நற்சுதி கண்பாட நடசாலை யும்வருத்தி
சங்கீதம்பாட சகலகலையுந் தொனிக்க
மங்கள ஓசையேழு வாத்தியமும் தான்முழங்கக்
கிம்புருடாதி முதல் கின்னரிவா சித்துநிற்க
தம்பூரு வீணைசரமண்டலம் முழங்க
கொலுகொலு வெனத்தெய்வார் குரவைமுழங்கிநிற்க
மலமலென ஆவுநெய்யில் வாடாவிளக்கெரிய
அழகு கொலுவிருக்க ஆலத்தியேந்திநிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்துநிற்க
சத்திமுனி பத்திரத்தாள் சாயூச்சமாயிருக்க இத்தனைப் பண்பும் யிதமுடனே தெய்வார்கள்
பந்தலுக்குள் ளேபரிந்து யிருந்துயெல்லோரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேணுமென்று
தாயாருடன் பிறந்த தன்மா மனைவருத்தி
காயாம்பூ மேனியனார் கட்டிலொன்று தான்கொடுக்க
அதிலே யிருமெனவும் அருகில வரிருக்க
சதிரான வார்த்தையொன்று தான்செவியி லுமூதி
கோப்புக் குண்டான குருமுறையைத் தான்கொடுத்து
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துப் பந்தலிலே
பரம ரகசியமாய் பலகைதனி லேயிருத்தி
அரகரா வென்று அம்மையுமையை தானினைந்து
சிவசிவா வென்று திருச்சரடு சேர்த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்துநின்று
சீதனங்களாக சில வரிசை தான்கொடுத்து
மாதவனை நினைத்து வாழ்த்தினார் பாலர்தனை
சொந்தமாய் உங்களுக்குத் துவரையம் பதியெனவும்
தந்தோ மிலங்கைத் தளவாடம் உள்ளதெல்லாம்
பிள்ளைகளே யிந்த பெரும்புவியை ஆள்வதற்கும்
வெள்ளானை மீதேற விடைதந்தோம் உங்களுக்கு
ஆனாலும் மக்காள்நீர் ஆளுவீர் ராச்சியத்தை
வானோர் அறியவும்பால் வாழ்த்தினோம் நீர்வாழ
வாசவனும் தேவர் மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வார்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ
அன்னை பத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
முக்கந்தன் வாழ முனிமார் கிளைவாழ
தக்கன் தலைதுணித்த தம்பிரான் தான்வாழ
மேலோக நீதி விளங்கி மனுவாழ
பூலோக முள்ளளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் வாழ நவில்வோரும் தான்வாழ
எல்லோரும் வாழயிருந்து நீடுழி வாழ்க
அய்யா உண்டு