You are here:
< Back

பத்திரம்

தர்மசீசன் தன்கையிலே தான்கொடுத்து வாமகனே
நாம் ,காப்பிட்டக் கையைக் கடுகச்சொல்லும் பேர்களுக்கு
நாம்,கூப்பிட்டுக் கேட்டுக் குற்றம் தெளிவிப்பேன் மகனே
நாம் ஆடிவந்த ஆட்டமெல்லாம் அறைக்குள்ளே பூத்தொளித்தேன்
இனி,ஆட்டமில்லாக் கூட்டம் இனக்கூட்டம் தேரோட்டம்
இந்தப் படியாக வந்து சொல்லிவா என்மகனே
அந்தந்தத் தலங்களிலே ஆடுமந்தப் பேர்களையும்
ஆடாமலே யிருந்து அறிவு சொல்லி வாமகனே
இது,பரலோக வார்த்தையல்லால் பூலோக வார்த்தையில்லை
இதைப் பொய்யென்று சொன்னவர்க்குப் புலப்பம் வரும் என் மகனே
இது மெய்யென்று சொன்னவர்க்கு மேலோகம் தோணப்படும்
அம்மையுமை பார்வதியும் அறிவு சொன்னாள் என்மகனே
பள்ளியறை தனிலேவந்து பகர்த்தெழுதி தான்கொடுத்து
இதுஉள்ளபடி யென்றுசொல்லி உகந்துவா என்மகனே
நாம், கூப்பிட்டுக்கொண்டு சமுத்திரத்துக் குள்ளிருந்து
நாம், கூப்பிட்டுக்கேட்டுக் குற்றம் தெளிப்பேன்மகனே
கடைசியில் ஒருபதிதான் கடலுக்குள் ளிருக்குதப்பா
அது துவரயம் பதியதுதான் துலங்கும்பதியதுதான்
சட்டங்களும் கூட்டங்களும் தானமா னங்களும்
அதை, பெற்றவர்க்குக் கிட்டிக்கொள்ளும் பேதமில்லை என்மகனே 20

பக்தியுள்ள மக்களுக்கும் புத்தியுள்ள மக்களுக்கும்
பயங்கள் தெளித்துவைப்பேன் பதறாதே என்மகனே
முட்டபதி தீர்த்தம் முழுதீர்த்தம் ஆகவில்லை
கிட்டவரும் நாளையிலே கிட்டும் அதிகப்பதி என்மகனே
வட்டவட்டச் சாலையிலே வழுகாமல் நீயிருக்க
நாம்,இப்படி சட்டமெல்லாம் கூடிவரும் என்மகனே!
நாம், எழுந்தருழும் வேளையிலே அங்கெங்கே உள்ளசனம்
எல்லோருந் தான்வருவார் என்மகனே நீங்களுந்தான்
அத்திபுரந் தனிலே ஐபேருந் தானிருந்தார் புத்தியுள்ள
குருநாட்டில் பிறந்துவந்தேன் என்மகனே பட்சி மிருகங்களும்
பலஜீவ ஜந்துகளும் பாதத்தில் வந்துவிழுந்து பணிவிடைசெய் யும்மகனே
தர்மம் பெரிது அப்பா தான் சொன்னேன் என்மகனே
தண்ணீரது பந்தல்வைத்துத் தலங்கள்சுற்றிச் சேவித்துவந்து
மக்களுக்குப் பசியாற்றி விட்டுவிடு என்மகனே
உகந்தகுடி யென்று உன்னிடத்தில் சொன்னேன் நான்
பயந்து தர்ம மிட்டு அந்தப் பரம்பொருளைத். தேடிடுநீ என்மகனே
கொடுத்தது கூடாது கூடும்படி நீ கொடுத்து
அதிலிருந்து தகையாற்றிப் போவதற்குக் குளிர்ச்சியுள்ள ஓரிடந்தான்
தழைப்பீர்கள் நீங்கள் மக்காள் தான்சொன்னேன் என்மகனே
முன்முகப்பில் நிற்பாயென்று நான்பார்த்தேன் என்மகனே 40

பின்முகப்பிலாக்கி விட்டான் பிற்கிளையை நான்பார்ப்பேன்
பத்தி மறவாமல் பதறாமல் நீயிருந்தால்
புத்திசொல்ல நான்வருவேன் புலம்புவேன் என்மகனே
கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே
சீசன்மார் கண்டு சிரித்து மகிழ்ந்திருந்து
இது,பேதகமில்லை யென்று பேசிடுநீ என்மகனே,
ஆடரவில் பள்ளிகொள்ளும் மாலவனும் ,தேவியுமாய்
பேதக மில்லையென்று பொறுமை சொன்னார் என்மகனே
சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக் கூட்டத்திலே
என்பங்கைத் தாவென்று பகர்ந்துவா நீமகனே
பூலோகப் பங்கதுதான் பொருத்தமில்லை உங்களுக்கு
பரலோகப் பங்கதுதான் பகுதியுண்டு என்மகனே
சாற்றரிய தன்விசயன் தவங்கிடைக்கு மென்றுசொல்லிப்
பூத்து அவர் சொரிந்து பூமியிலு வந்தார் என்மகனே
வேர்த்து அவர்சடைத்துப் பாசுபதம் வாங்கிப்
பகைதீர்ப்பேன் என்மகனே
பள்ளியறை தான் திறந்து பதியேறும் நாளையிலே
உள்ளபடி சொல்லுதற்கு உகந்துவாறேன் என்மகனே
கவிழ்ந்திருந்த மாமுனியும் இந்த அதிசயத்தைக் கண்டிருந்து 60

நிமிர்ந்து அவர் காரணங்கள் செப்புவார் என்மகனே
உள்ளபடி நாமளிந்த உபதேசம் சொன்னாலும்
நல்லதென்று சொல்லியவர் நன்மைகொள்ளார் என்மகனே
உன்னருள்தான் என்று சொல்லி உகந்திடா தேமகனே
என்னருள் தானல்லாது ஏதும்நடவாது மகனே
உனக்கு ஏச்சும் பேச்சுமல்லாது இணக்கமில்லை என்மகனே
மாய்ச்சல்வரும் தானுனக்கு மகிழ்ந்திருப்பாய் நீமகனே
காய்ச்சல்வந்தால் உன்னைக் காணாது கற்பித்தேன் நான்மகனே
பயந்து இருந்துநீ பணிவிடைகள் செய்வானால்
உயர்ந்த குடியாவாய் உயிர்பிழைப்பாய் நீ மகனே இதை,
பகர்த்தெழுதிக் கொடுத்து பள்ளிக்கூடங்கள் தோறும் கொடுத்து
அதில் குறைவு வந்தாலும் தெளிந்துவா என்மகனே,
நாம்,எழுதச்சொன்னக் கணக்கரோடே ஏதும் பறையாதே
தர்மம் பெருகுமடா தான்தழைப்பாய் நீமகனே
இறைபகுதி தான்குறைத்து இருந்தாள்வோம் நாம்மகனே
துவரயம் பதியதுதான் துலங்கிவரும் நாளையிலே
இலங்குமடா என்பதிதான் எழுதினேன் என்மகனே
நாதாக்கள் கூட்டம் நாட்டில் நடுநடுங்கும்
போருக்கு வந்தவனைப் போகவிடேன் நான் மகனே
ஒழுங்காய் நடந்துவர உத்தரவு தந்தேனடா
பூமணப் பதிதனிலே உங்களைப் புகழ்ந்தெடுத்தேன் என்மகனே 80

வானவெள்ளி உதிக்குமுன்னே வந்தேனடா என்மகனே
இனி,பூமிதனி லேவெடித்துப் புத்திசொல்ல நான் வருவேன்
தேவர் தேவர் கூட்டத்திலே திருச்சங்கு தான்முழங்கும்
வேகம் வந்தால் தீராது சொன்னேன் நான்என்மகனே
சடைவு வந்தால் உங்களுக்குச் சங்கடங்கள் தீர்ப்பது யார்?
பஞ்சாட்சரப் பொருளைப் பகர்ந்தெழுத மாட்டாமல்
இந்த விதிப்படியே நான் சொன்னேன் என்மகனே
ஆத்தங்கரைப் பள்ளியிலே அங்கிருந்தேன் என்மகனே
ஊத்தங்கரைப் பள்ளியிலே ஒதுங்கியிருந் தேன்மகனே
குதிரைப்பரி யாகவேதான் குடிகெடுக்க நாம்வருவோம்
பதியெழும்பிக் கலியழிக்க மறைபொருளாய் நாம் வருவோம்
செடிக்குக் கொடுத்தவனை செவிதிருக்கிக் குற்றங்கேட்போம்
பக்தியில்லா வேதப்பிராமணரைப் பயம்காட்ட நாம்வருவோம்
உள்ளபடி சொல்லுதற்காய் உகந்துவாறேன் என்மகனே
நல்லபாம்பு விசம்போலே நடத்துவேண்டா என்மகனே
அந்தவல்லரக்கன் கோட்டையிலே வடிவெடுத்தேன் நான்மகனே
என்சொல் கேட்காவிட்டால் சிரித்தறுப்பேன் நான்மகனே
ஆரார்க்கும் புத்திசொல்லி அழிக்க வந்தேன கலியுகத்தை
என்புத்தி கேட்டாயானால் உனக்கிறைபகுதி தவிர்த்துவைப்பேன்
ஆளுங்கோட்டை வாசலிலே அதிசயம் உண்டா கும் மகனே 100

அது கைகண்ட புரச்சமடா காட்டித்தா றேன்மகனே
திருச்சம்பதிக் கடலுக்குள்ளே திருமாலும் அங்கிருந்தேன்
அந்தப்பதி உட்படவே ஆகப்பதி இருப்பத்திநாலாம்
ஆளும்பதி தென்கடலில் அதிகத்துவராபதி என்மகனே
தென்கடலில் வழிகாட்டித் திரும்பிமுகம் பார்க்கையிலே
சந்திரனும்,சூரியனும் சண்டை போட்டே மறைவார்.
தெற்கு வடக்காய்த் திருப்பதியும் தோணுமடாமகனே
அந்தப்பதி அல்லாது அதிகப்பதி எங்கேவுண்டு என்மகனே
நாமெல்லாப் பதிகளுக்கும் இருந்து விளையாடும் சுவாமி
என்பேரைச் சொன்னால் எல்லோரும் அறிந்திடு வார்மகனே
நான்,உள்ளபடி சொன்னதுண்டால் உலகம் கைக் கொள்ளாது
நான்,சொன்னதைச் சொல்லாமல் அவன்சுயமதியாய்ச் சொன்னவனைச்
செவிட்டிலே தான்போட்டுக் கொடுத்த கணக்கைப்பறிப்பேன்
கள்ளக்கணக்கர் தான்பெருத்துக் கனமோசமாகிப் போச்சு
நாம் உள்ளபடிக் கேட்கையிலே அவனுத்தாரம் சொல்லுவானோ
பல்லக்கு நான்தருவேன் பதறாதே நீமகனே
இப்படிநான் சொல்லச்சொன்னக் கணக்கருக்கு ஒருநவகண்டி போடாயோ
நீபோடா விட்டால்நான் போடுவேனடா சுவாமி
நல்ல கணக்கருந்தான் நாலுகூட்டக் கணக்கருண்டு
அவர்களை,தாறுமாறாய்ப் பேசாதே சரிசமனாய் என்மகனே
கொடியேற்றிக் கொடியிறக்கச் சொல்லுகிறேன் கேள்மகனே
என்புத்தி கேட்டாயானால் உனக்கு கொஞ்சம் வயது தான்
கூட்டி நான் எழுதிடுவேன் குறைவராது என்மகனே
நீயிட்டிமை பேசிவிட்டால் இருக்கமாட்டாய் நீமகனே
காசியணம் ஓடிவரும் கலியுகத்தில் அதிசயண்டா 125

பரலோகப் பாக்கியம் தான் பயமில்லையடா என்மகனே
பூலோகத்தில் சொன்னபுத்தியெல்லாம் பொருந்திவரும் உந்தனக்கு
சீசன்கையிலே தான்கொடுத்து தெளிந்துபார் என்மகனே
அம்மைஉமை பார்வதியும் இதென்ன அதிசயமா யிருக்குதென்று
முட்டப்பதி கடலுக்குள்ளே ஒரு முத்திருந்து இலங்குதடா
பத்தியுள்ள மக்களுக்கு பங்குவுண்டு என்மகனே
அதிலே,முத்தியுண்டு சத்தியுண்டு முளிப்பார்கள் என்மகனே
என்மக்கா சீசர்களே நாமென்ன சொல்வோம் அதிசயத்தை
நான் புகழ்ந்ததுபோல் நீங்களுந்தான் புகழ்ந்திடுங்கோ என்மக்களே
முத்திபெற நாளாச்சு முளித்திருங்கோ நீங்கள்மக்கா
இனி,சத்தியம் தான்பிறக்கும் ஜெகத்தோர்க்கு வாசமடா
நாம் எப்படி சொன்னோமென்று நாடுநடுங்குதே என்மகனே
நாம் சொன்னதெல்லாம் உத்தாரம் தானிருக்க என்மகனே
கைலாசவாசல் திறக்கையிலே காட்டித்தாறேனிந்த அதிசயத்தை
இதைப்பொய்யென்று சொன்னவரோடே போருக்கு நான்வருவேன்
இதை மெய்யென்று சொன்னவர்க்கு மேலோகம் தோணப்படும்
பல்லாக்குந் தண்டிகையும் பரிமனமும் சந்தனமும்
உள்ளபடி உள்ளதெல்லாம் உங்களுக்கு நான்தருவேன்
வெள்ளானை கடலுக்குள்ளே விளையாடக் கண்டேனடா
தென்கடலும் வடகடலும் ஒருவழியாய்த் தோணுமடா
பாரளந்த மாயவர்க்குப் பலவிதமும் உபாயமுண்டு
ஓரடியாய் நாமளந்து ஓடிவந்தேன் மகனே 150

மாவலியைச் சிறையில்வைத்த மாயனல்லோ மகனே
இடையன்சாமி என்றாலும் உங்களுக்குச் சட்டமுண்டு
முன்னோலை எழுதும்மட்டும் முழித்திருப்பேன் மகனே
ஏட்டுக்கடங்காது எழுத்தாணிக்குஞ் சேராது இதை
பாழ்வார்த்தை சொன்னவர்க்குப் பலன்கொடுக்கமாட்டேனடா இதை.
மெய்யென்று சொன்னவரை முத்தியணை வேன்மகனே
உதித்தநாள்கொடியேற்றி இருத்தினநாள் இறக்கிவிடு என்மகனே
இது கலியுகத்துஆசாபாசம் கண்டேனடா என்மகனே
பால்மோர் தெளித்ததுபோல் தெளிவுபார்த்து நானெடுப்பேன்
என்னுடைய ஊழியக்காரர்களே ஒழுங்காய் நடந்திடுங்கோ
கள்ளக்கணக்கெழுதும் பேர்களைத்தான் முள்ளளியில் போட்டிடுவேன்
முதுகிலடித்திடுவேன் முனிபரனும் சொன்னேன் நான்,
நான் சொன்னபடி கேட்காவிட்டால் விடுவேனோ நான்சுவாமி
ஒரு அன்னவூஞ்சல் போட்டிருக்கு அந்தப்பயல்களுக்கு,
கழுகடையும் காட்டுக்குள்ளே காட்டித்தாறேன் நான்சுவாமி
அவன் இட்டதெல்லாம சட்டமென்று இருக்கிறான் என்மகனே
அவன் பெட்டகமும் பொன்பணமும் பறிப்பேனடா நான்சுவாமி
பொல்லாப்பு இல்லையடா புலம்புகிறேன் நான்சுவாமி
வாழைரண்டுகுலை ஈன்றதுபோல் வாறேனடா
வையகத்தில் இனி, பள்ளிக்கூடம் சோதிக்க பையனையும் கொண்டுவாறேன்
அடே,நாமெழுதும் கணக்குகளை நடுத்தீர்த்து நாமெழுதி
ஆண்டிமகன் ஆண்டியடா ஆருக்கும் அஞ்சுவேனா
பாண்டிமகன் பாண்டியடா பண்டாரக் கிழவனல்லோ
இனி,கொடுத்தவரம் பறிப்பேனடா குடல்தோண்டி நான்சுவாமி
உம்பளமும் சம்பளமும் ஒருகாசும் நமக்குவேண்டாம் 175

உத்தரவு பெற்றபடி உள்ளதெல்லாம் போதுமடா
கைலாச வரம்பெறவே காத்திருக்கிறேன் நான்சுவாமி
பூலோக ஆசபாசம் எனக்குப் பங்கு வேண்டாம் என்மகனே
அண்டரண்டம் படைத்த சுவாமி அரிவிரி படிக்கிறாரே
ஒன்றும் ஒன்றும் தெரியாது நீசொல்லித் தரமாட்டாயோ
அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதே
என்னுடைய பத்திரங்கள் எங்கெங்கேயுள்ள பள்ளிக்கெல்லாம்
கொடுத்துவரச் சொன்னார்காண் குருபரனார் மாமுனியும்
என்கணக்கன் பேரறிவான் ஊரறிவான் தலமறிவான்
பரமண்டலம் பூமண்டலம் பகுத்தெழுதி வாமகனே
சீதனமாய் உங்களுக்குத் தந்தேனடா என்மகனே
சித்திரை மாதத்திலே செழிக்கமழை பெய்யுமடா
பத்திரமாய் இருந்துநீங்கள் பணிவிடைகள் செய்திடுங்கோ
புத்திரனாய் நானொருவன் புத்திசொல்ல வந்தேனடா
வற்றாத பொய்கையிலே வாழுமந்தக் குருநாட்டில்
புத்தி சொல்ல வந்திருந்து புலம்புகிறேன் நான்சுவாமி
கண்டகுறி சொல்லுதற்காய் கண்ணுறக்கம் தானுமில்லை
இந்தவிதி விதித்தபடி வந்துதேனடா என்மகனே
எல்லோர்க்குங் கிட்டாது சொன்னேன்நான் என்மகனே
பேய்செடிக்குக் கொடுத்தவனைப் பிரம்பெடுத்து நாமடிப்போம்
ஆயிரத்தெட்டாம் மாசியில் வந்தங்கே புத்திசொன்னேன்
இதுவரைக்கும் புத்திசொல்லி என்வாயும் சடைத்துப்போச்சு
இனி,சட்டங்களும் கூட்டங்களும் சமயங்களும் வருகுதடா
பெட்டகத்துத் திரவியமும் போய்விடும் என்மகனே
கட்டில்களும் நாருகளும் சட்டங்களும் போகுதடா 200

ஏரும்சீரும் ஆடுமாடும் அழிந்துபோகக் கண்டேனடா
தெச்சணா பதியில்நான் தேரேற வந்தேனடா
காரணத்தைக் கேட்டமட்டும் கண்ணுறக்கம் தாணுமில்லை
பூரணனுக் கேற்றபடி பூமி செழிக்குமடா என்மகனே
வாதாடி வந்தவர்க்கு வழக்கறுத்து வைப்பேன்சுவாமி
நீராடிப் போகவேண்டாம் நெடுமால் திருக்கடலில்
ஓரடியாய் அளந்தமாயன் உலகாள நாம்வருவோம்
பாதியடி கேட்டதற்குப் பங்கில்லை என்றுசொன்னான்
சீறியவ னைப்பார்த்துச் சினத்துவிட்டேன்
மாவலியை, மாலயன் இடத்தில்வந்து மயங்குகிறான்
மாமுனியும் ஒருஓலை எழுதுமட்டும் ஒழித்திருந்தேன் மாமுனியும்
கந்தத்துணி கழுத்திலிட்டுக் காத்திருந்தேன் மாமுனியும்
சொந்தக்கிளை நானுனக்குச் சோறுதர வந்தேனடா
அட்டமந்திரமும்சாத்திரமும் மறைந்துபோகும் என்மகனே
அடேயிந்த விதியுனக்கு இருத்திவைத்தேன் கலியுகத்தில்
ஆண்மூப்பும் பெண்மூப்பும் அதிகப்பட்டுப் போச்சுதடா
இனி, என்மூப்புதானுமுண்டு எவர்மூப்பும் செல்லாதே
பார்வதியும் அவளொருத்திப் பங்குவுண்டு என்றுசொன்னாள்
அதுசீதனம் கொடுத்துப்போச்சு சிரிக்கவேண்டாம் என்மகனே
பள்ளியிலே தானிருக்கும் பள்ளியறை காவல்கார என்மகனே
உள்ளபடி நானுமிப்போ உபதேசம் சொல்லுகிறேன்
பள்ளியிலே இருந்து புத்திசொல்ல நாம்வருவோம்
பலபள்ளிக்கூடம் சோதிக்க உத்தரவு நாம் கொடுத்தோம்.
தர்மசீசரையும் முன்னேவிட்டு சுவாமியும் நாம்வருவோம்
என்னுத்தரவோடு உன்னுத்தரவும் சொல்மகனே நீயும்தான் 225

திருப்பிரம்பை கைக்கொடுத்து நீயனுப்பு என்மகனே
நீயனுப்பாவிட்டால் நான்கூட்டிக்கொண்டு போய்விடுவேன் என்மகனே
என்னை,குற்றமொன்றும் சொல்லாதே என்மகனே நீயும்தான்
இப்படி,கணக்கினையும் கற்பிச்சகணக்கனென்று சொல்லிவா என்மகனே
ஆணும் பெண்ணுங்கூடி ஆசாரம் செய்திடுங்கோ
தானதர்மம் செய்திடுங்கோ தழைப்பீர்கள் நீங்கள்மக்காள்.
மகனே,வட்டவட்டச் சாலையிலே வழுகாமல் நீயிருக்க
பட்டயங்கள் தந்தேனடா பதறாதே என்மகனே
உன்,உச்சிக் கிரகமடா ஒருவருக்கும் தெரியாது
என்,பச்சமுண்டால் போதுமடா பகையுனக்கு இல்லையடா.
ஆருக்கும் பதறாதே அச்சமில்லை என்மகனே
ஏடுதந்தேன் உன்கையிலே எழுத்தாணியும் கூடத்தந்தேன்
மகனே,பட்டயமும் தந்தேன் பகைதீர்த்தேன் பதறாதே.
இனி நமக்கொரு ஒழுங்குவேணும் நாம்சொன்னோம் மாமுனியும்
என்,பள்ளியிலே வைத்திருந்தேன் பாதையில் போகவிட்டேன்
கொடியேறும் நாள்தொடங்கி ஏழுநாள் பிச்சைவாங்குங்கோ மகனே
சுரையோடு கையிலெடுத்துக் கூடிச்சேர்ந்துபோய்விடுங்கோ
சராசரத்தைப் போற்றித் தானதர்மம் செய்திடுங்கோ
நல்லவர் இட்டதர்மம் நாள்தோறும் பொங்குமடா
தர்மம்,தந்தவனும் நல்லவன்தான் தராதவனும் நல்லவன்தான்
நல்லவனும் பொல்லாதவனும் எல்லோரும் நல்லவனென்று சொல்லிவிடு.
எட்டாம்நாள் வேட்டையாடி வருவேனடா நான்சுவாமி
அகப்பட்டதைக் கொண்டுவந்து காப்பிட்ட மகன் கைக்கொடுத்து
உனக்கெனக்கும் பகையில்லையடா இந்த யுகமழிந்து போனாலும்
உன்னைப்போல் சுந்தரன் ஊரிலும் நான்காணேன். 250

வட்டவட்டச் சாலையிலே வாறவழிப் போக்கினிலே
நீயுமுன் கூடச்சேர்ந்த சனங்களுமாய் என்மகனே
நீயிட்ட தர்மம் பொங்குமடா என்மகனே
இந்த விதிப்படியே எழுதிவிட்டோம் மாமுனியும்
நாட்டைத் தான் ஒடுக்குதற்குக் கொடுத்தவரம் பறித்துவாறேன் நான்மகனே!
மந்திரவாள் தான்வாங்கி இந்திரனும் பதியேறி
சந்திரனும் சூரியனும் சண்டைப்போட்டுத் தேசம் வாறார்
இந்திரனார் சுந்தரர்க்குத் தாம்கொடுத்தோம் மாமுனியும்
இந்தப் ,புதுச்சட்டம் வந்திருப்பதனால் நல்ல புத்தியாயிருங்கோ என்மகனே
நல்லபுத்தியாய் இருக்காவிட்டால் பிழைகள்வரும் உங்களுக்கு
பற்பல ஊர்களிலேயிருக்கும் இணத்தாங்கல்களில் என்மகனே
பத்திரத்தைப் பள்ளியிலே தானும்வைத்து வாமகனே
பள்ளியிலே தானும்வைத்து பணிவிடைகள் செய்திடுங்கோ.
சீசன்மார் கைக்கொடுத்து தெளிந்துபார் என்மகனே
பள்ளிக்கூடங்கள் தோறும் பதிவாக நீங்கள்போய்
இதை,சொல்லுங்கடா என்மகனே மாமுனியும் சொன்னேன்நான்
பத்திரத்தைப் பள்ளியில்வைத்துப் பகர்ந்து கொடு நீ மகனே
இப்படி,உத்தரவு தந்தேன் உகந்துவா என்மகனே
சத்தியமாய் இருக்கவேணும் சண்டைபோடாதே மகனே
பத்திரத்தைப் பிரிவெழுதி வாங்குங்கடா என்மகனே
அவரவர் கூடுமட்டும் உள்ளன்புவைத்து வாங்குங்கடா மகனே
இந்த,பத்திரத்தைப் பள்ளியில் வைத்துப் பணிவிடைகள் செய்திடுங்கோ
சந்தோச மாகச் சொன்னோம் தயவுவரும் உங்களுக்கு
புத்திரப் பலன்களுண்டாம் பூமி விளைந்துவரும்
சத்தியமாய் இருக்கவேணும் தர்மபதி கிடைக்கும் என்மகனே 275
தர்ம சங்கத்தார் தர்மம் வளரும்.தர்ம ராசர் தர்ம புவியாள்வார்.
பள்ளிப் பத்திரங்களும்,பிரிவுகளும் அதன்படி நடக்க அவரவர்களுக்குரிய சட்டங்களும்

அம்மைமார் பத்திரம்

பையன்மார் பத்திரம்

சீசன்மார் பத்திரம்

திருநெல்வேலிமார் பத்திரம்

பால்விறகுப் பத்திரம்

அய்யாபதி உட்படப்பத்திரம்

முட்டப்பதி பத்திரம்

பள்ளத்துப்பதி பத்திரம்

தாமரைகுளம்பதி பத்திரம்

பூப்பதி பத்திரம்

செட்டிக்குடியிருப்புப் பத்திரம்

அகத்தீசுவரம்பத்திரம்

பாலவூர் பத்திரம்

சுண்டவிளை பத்திரம்

வடலிவிளை பத்திரம்

கடம்பன்குளம் பத்திரம்

உன்பரக்கொடி பத்திரம்

பற்பல ஊர் ஜனங்களுக்கும் கூடிய பத்திரம்

(பத்திரம் முற்றியது)

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் வரி எண்ணுடன் சரியான வரியையும் குறிப்பிட்டு ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On July 24, 2018